தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகும் அராஜகம்…

3.0 என்று பெருமையாகப் பேசப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசில், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம் இயற்றப்பட்டு அராஜகமான முறையில் அமுல்படுத்தி வருகிறது. பசு வதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும் நீதித்துறையும் வெறும் பார்வையாளர்களாக்கப்பட்டு சங்கபரிவார கும்பலின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது அநீதியானது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒடிசாவை எடுத்துக் கொள்வோம். ஒடிசா மாநிலத்தில் பாஜக குருபக்தி முறையில் ஆட்சிக்கு வந்ததை அனைவரும் அறிவர்.

ஆட்சிக்கு வந்தவுடன் சங்பரிவாரங்கள் கீழ்த்தரமான வேலையில் இறங்கியுள்ளன. அவை சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அண்மையில் அம்மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் பசு கடத்தியதாக பொய்யான குற்றச்சாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராகோட் தொகுதிக்கு உட்பட்ட கரிகும்மா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த அட்டூழியத்தில் தொடர்புடையதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களான சிங்கிப்பூரைச் சேர்ந்த புலு நாயக் (52), பாபுல் நாயக் (43) ஆகியோர் ஹரிபூரிலிருந்து ஒரு குடும்ப திருமண விழாவிற்காக வரதட்சணையாக ஒரு பசுவையும் இரண்டு கன்றுகளையும் வாங்கி, டெம்போ ரிக்சாவில் தங்கள் கிராமத்திற்கு ஏற்றிச் சென்றபோது, பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

சட்டவிரோதமாக பசுக்களைக் கொண்டு சென்றதாக குற்றம் சாட்டி, அவர்களின் மொபைல் போன்கள் மற்றும் பணத்தை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டது. விலங்குகளை விடுவிக்க ரூ.30,000 கொடுக்கவேண்டும் என்று அவர்கள் பேரம் பேசியதில் இருந்தே இவர்களுக்கு பசுக்கள் மீது அக்கறை இல்லை என்பது தெரிகிறது.

அவர்கள் இருவரும் பணம் தரமறுத்ததால், அந்தக் கும்பல் அவர்களின் கைகால்களைக் கட்டி கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை உள்ளூர் சலூனுக்கு அழைத்துச் சென்று தலையைப் பாதி மொட்டையடித்து, பின்னர் ஜஹாதா கிராமத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து செல்லுமாறு கட்டா யப்படுத்தியது. அங்கு அவர்களை மாடுபோல் புற்களைத் தின்ன வைத்து, சாக்கடை நீரைக் குடிக்கு மாறு கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் பட்டியலின மக்களிடத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அதைக் கண்டித்து தலித் மகாசபா தலைவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். மாநிலத்தின் முதல்வர் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரால் பட்டியலின மக்களைப் பாதுகாக்க முடியவில்லை. பா.ஜ.க.விற்கு முதல்வர் ஒரு கறிவேப்பிலைக் கொத்து மாதிரிதான்.

“சாதி இனி ஒரு பிரச்சனை அல்ல” என்று கூறுபவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு கண்ணாடி. தலித்துகளின் கண்ணியத்தை மிதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கவேண்டும்”. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. ஏனெனில் அவர்களின் அரசியல் வெறுப்பு படிநிலையின் அடிப்படையில் கட்ட மைக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், குறிப்பாக ஒடிசாவில், கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன.

நாடு அரசியலமைப்பின் படி இயங்குவது குறைந்து மனுஸ்மிருதி அடிப்படையில் இயங்குவது கற்காலத்தை நோக்கிச் செல்வதற்கு சமம். இந்தியர்கள் ஒருக்காலும் இதை அனுமதிக்கலாகாது.

பெரணமல்லூர் சேகரன்