தொடர்ந்து ஐந்துமுறை இருபத்தி ஐந்து ஆண்டுகள் செஞ்சி டவுன் பஞ்சாயத்தை தலைவராக நிர்வாகம் பண்ண கே.எஸ்.மஸ்தான், கடந்த முறை எம்எல்ஏ ஆகி, இந்தமுறை சிறுபான்மைத்துறை மந்திரியாகவும் ஆகிவிட்டார். மந்திரியான நாள்முதலாய் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளுக்கு மனைவி மக்களுடன் சென்று கலந்து கொள்ளும் மந்திரி மஸ்தான் அதன் மூலம் கொஞ்சம் விமர்சனங்களை எதிர்கொண்டார். தன்னுடைய உதவியாளராக மருமகன் ரிஸ்வானை அடையாளம் காட்டியவர், அரசியல் வாரிசாக மகன் மொக்தியார் அலியை அடையாளம் காட்டினார். விழுப்புரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக இருக்கும் மொக்தியார் தன்னிடம் வரும் கட்சிக்காரர்களை அரவணைத்து தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டார். நடைபெற இருக்கும் ஊரக நகர்புற தேர்தலில் செஞ்சி டவுன் பஞ்சாயத்து தலைவராக நிற்க, மந்திரியும் மாவட்ட செயலாளருமான தன் தந்தையிடம் விருப்ப மனு கொடுத்துவிட்டு, தன்னுடன் இருக்கும் இளைஞர் பட்டாளத்தை தூண்டிவிட்டு தேர்தல் வேலைகளில் தீவிரமாகிவிட்டார். நலத்திட்ட உதவிகள் கொடுக்க ஆரம்பித்தவர் பதினெட்டு வார்டுகளுக்கும் திமுக சார்பில் நிற்கும் வேட்பாளர் பட்டியலை கையில வச்சிகிட்டு, செஞ்சி நகர வாக்காளர்களை வலம் வந்து கொண்டிருக்கிறார். செஞ்சி நகர திமுக செயலாளர் காஜா நஜீர் மனவருத்தத்தில் இருக்கிறார். டவுன் பஞ்சாயத்து தலைவர் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார். மொக்தியார் அலி வருகையால் காஜா நஜீரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, நகர செயலாளர் என்பவர் செஞ்சி நகரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் மந்திரி மஸ்தானின் விருப்பபடி அவர் மகன் மொக்தியார் அலி கொடி பறக்குது. திமுக முகாமில் என்று சொல்வதைவிட, மந்திரி மஸ்தான் ஆதரவு தளத்தில் உற்சாகம் கரைபுரளுது.
அதிமுக தரப்புல கவுன்சிலரா நிற்க ஒவர்கூட முன்வராத நிலையில், தலைவர் வேட்பாளரா யார் நிற்கறீங்க? நீங்க நிற்கறீங்களா? என்று மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் நிர்வாகிகளை போனிலும் நேரிலும் கேட்க, வெடிக்க ஆரம்பித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்…, பத்து வருஷமா கட்சியில எவனையாவது வாழ வச்சீங்களா? முதல்ல இந்த ஊர்ல கட்சி இருக்குதா தெரியுமா? தேர்தலுக்கு, தேர்தல் வந்து கட்சியையும் கட்சிக்காரனையும் தேடினா எப்படி? பத்து வருஷமா பதவியில இருந்தீங்களே யாரை வாழவச்சீங்க எல்லா வேலைகளையும் மஸ்தானுக்குதானே கொடுத்தீங்க? மஸ்தான்கிட்டேயே நல்ல வேட்பாளர் வேண்டும்னு கேளுங்க அவரே நல்ல வேட்பாளரா அடையாளம் காட்டுவார் அவரை நிற்க வச்சி வழக்கம்போல திமுகவை ஜெயிக்க வையிங்க, கட்சியில செல்வாக்கா இருந்தவங்களை அய்யோ அவன் வளர்ந்திருவான், இவன் வளர்ந்திருவான்னு டம்மி பண்ணி, டம்மி பண்ணி கட்சியில செல்வாக்கா இருந்தவங்களை சொல்லா காசாக்கிட்டீங்க, இப்ப வந்து கட்சிக்காரனை தேடினா எங்கே இருப்பான்? மொத்த செலவையும் ஏத்துக்கற மாதிரியா இருந்தா தேர்தல்ல நிற்கறோம் இல்லாட்டி வழக்கம்போல நீங்க உங்க வேலையை பாருங்க நாங்க எங்க வேலையை பாக்கறோம் என்று கோபத்தை கொட்டி இருக்கின்றனர். இப்போதைக்கு செஞ்சியில அதிமுகவின் அடையாளங்களாக இருப்பவர்கள் இருவர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொறுப்பிலிருக்கும் வீ.ரங்கநாதன், இவர் விருப்ப மனு கூட கொடுக்கவில்லை இவருக்கு உள்ளூர் செல்வாக்கு உண்டு பலமுறை எம்எல்ஏ சீட்டு, பேரூராட்சி தலைவர் சீட்டு கேட்டு ஏமாந்தவர் இப்பொழுது கடும் விரக்தியில் இருக்கிறார். இன்னொருவர் வழக்கறிஞர் கதிரவன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகள் செய்தவர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில்ல இருக்கற அந்தஸ்தை பேரூராட்சி தலைவர் பதவிக்காக இழக்க விரும்பல, நான் ராஜ்ய சபா எம்பியாக விரும்பறேன் என் விருப்பத்தை கட்சி தலைமையிடம் சொல்லிட்டேன் என்கிறார் தன் ஆதரவாளர்களிடம். ஆக அதிமுகவில் வேட்பாளர்களை தேடும் படலம் தொடருது. இப்பவே திமுகவுக்கு ரூட் கிளியர் ஆயிடுச்சி போல!
– ம.கணேசன் – பெ.முருகன்