Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பிபின் ராவத் உயிரைப் பறித்த ஹெலிகாப்டர் விபத்தும், விரிவான பார்வையும்.

சென்ற 08.12.2021ல் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பார்க் பகுதியில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி வெடித்து சிதறியது.

இந்த ஹெலிகாப்டரில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர், ஹர்ஜிந்தர் சிங், பிரித்வி சிங் சவுஹான், குல்தீப் சிங், ஜிதேந்தர் குமார், ஹவில்தார் சத்பால், சாய் தேஜா, விவேக்குமார், குருசேவக் சிங், ராணா பிரதாப் தாஸ், பிரதீப் அரக்கல், ஹெலிகாப்டர்  கேப்டன் வருண் ஆகிய பதினான்கு பேர் பயணித்திருந்தனர்.

விபத்தில், பிபின் ராவத் உள்ளிட்ட பதிமூன்று பேர் முதலில் உயிரிழந்தனர். பலத்த  தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஹெலிகாப்டர் கேப்டன் வருண், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வருண்.

ஏற்கனவே ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தவர்தான் பிபின் ராவத். திம்மப்பூரில் கோர் கமாண்டராக பிபின் ராவத் இருந்தபோது, சீட்டா என்ற ஹெலிகாப்டரில் சென்று விபத்துக்குள்ளாகி சிறு காயங்களுடன்  உயிர் பிழைத்தார்.

பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்தபோது தீப்பற்றி வெடித்துச் சிதறிய Mi-17V-5 ஹெலிகாப்டர், ரஷ்யாவின் ஹஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டராகும்.

சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் என்பதால், Mi-17-5 ஹெலிகாப்டர்களை உலக  நாடுகள் அதிகளவில் வாங்குகின்றன. இந்தியாவில் இந்த ஹெலிகாப்டர்கள் நூற்றிஐம்பது வாங்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரை இந்தியா வாங்கும்போது, ஒரு ஹெலிகாப்டரின் விலை 145 கோடி.

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமரும், உலகின் பல முன்னணி நாடுகளுகளின் அதிபர்களும், பிரதமர்களும் இந்த ஹெலிகாப்டர்களைதான் பயன்படுத்துகிறார்கள்.

உலகின் மிக நவீனமான ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது. ராணுவத் தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றிச் செல்வது, எல்லைக் கண்காணிப்பு, தீயணைப்பு, ராணுவத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது என எல்லாப் பணிகளுக்கும் பயன்படுகிறது.

அதிகபட்சமாக முப்பத்தாறு பேர் வரை பயணம் செய்யக்கூடிய பெரிய ஹெலிகாப்டர் இது. 4,500 கிலோ எடை வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம்.

மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டரில், அதிகபட்சமாக 580 கி.மீ தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கலாம்.

சில ஹெலிகாப்டர்களை இரவில் இயக்க முடியாது. ஆனால், இது இரவு பகல் என எந்த நேரத்தில் பயணம் செய்யும். குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும். ஆராயிரம் மீட்டர் உயர மலைப்பகுதியில்கூட சாதாரனமாக இது பயணம் செய்யும்.

இமயமலையின் பனி படர்ந்த சியாச்சின் பிரதேசத்தில் எல்லைக்காவல் பணிபுரியும் வீரர்களுக்கு, ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்று தருவது முன்பு கடினமாக இருந்தது. Mi-17V-5 ஹெலிகாப்டர் வந்த பிறகு அந்தப் பிரச்னை தீர்ந்தது. இப்போது சியாச்சினில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாவற்றையும் சுமந்து செல்வது இந்த ஹெலிகாப்டர்கள்தான்.

இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட்கள், மெஷின் கன்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கும்.   ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் பாதுகாப்பு கவசமும் இதில் இருக்கிறது.

இதை இயக்கும் பைலட்டால், இரவு நேரத்திலும் துல்லியமாகப் பாதையைப் பார்க்க முடியும். மேலும், ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச்சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும்.

கவச வாகனம் போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புகள் மேலதிகம். இதன் எரிபொருள் டேங்க், விபத்தில் வெடித்து சிதறினாலும் எரியாதபடி பாலியூரிதேன் பாதுகாப்பு கொண்டது. தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் கருவிகளும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளது.

பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் திறந்த வெளியில் விழுந்திருந்தால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் விழுந்ததால்தான் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டரின் பக்கவாட்டுப் பகுதிகளை ஆயுதம் தாக்காத வகையில் பிளேட்டிங் செய்யப்பட்டிருக்கும். ஹெலிகாப்டர் விழுந்தாலும் விமானி பாதுகாக்கப்படும் வகையில் காக்பிட் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக அரிதாகவே இந்த ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகும்.

இந்தியாவில் இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகளையும் ரஷ்யாவின் ஹஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இவற்றையெல்லாம் கடந்து பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மிக பாதுகாப்புடன் இயக்கப்பட்டாலும், சற்றும் எதிர்பாராமல் நடக்கும் சில விபத்துக்களால், ஹெலிகாப்டர் இயக்கப்படுவதற்கு முன்பாக நடத்தப்பட்ட அனைத்து பரிசோதனைகள் குறித்தும், தரம் குறித்தும் வலுவாக சந்தேகிக்கவே வைக்கிறது.

மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களுடன், காலாவதியான என்ஜின்கள், விமானிகளுக்கு போதிய பயிற்சியின்மை, பராமரிப்பின்மை, பழுதான உதிரி பாகங்கள் மாற்றாமல் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாகிறது.

விமானங்கள் 33,000 அடி உயரத்தில் பரப்பவை. பிரச்னை ஏற்பட்டால், என்ன பிரச்னை என்பதை விமானியால் கட்டுப்பாட்டு அறைக்கு சொல்ல முடியும். ஆனால், ஹெலிகாப்டர்களைப் பொறுத்தவரை 5,000லிருந்து 6,000 அடி உயரம் வரை பறப்பவை. ஹெலிகாப்டர்கள் குறைந்த உயரத்தில்தான் பறக்கும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கான நேரம் மிகக் குறைவு. பிரச்னை ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழ ஆரம்பிக்கும்போது, விமானியால் பெரிதாக ஏதும் செய்ய முடியாது. இதுவும் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற அதிகக் காரணமாகும்.

இந்தியாவில் பல ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்துள்ளது. 1945ல் இந்திய ராணுவத்தைக் கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1973ல் அன்றைய மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம்,
1980ல் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, 1997 ல் அப்போதைய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் என்.வி.என் சோமு, 2001ல் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா, 2002ல் அப்போதைய மக்களவை சபாநாயகர் பாலயோகி, 2004ல் நடிகை சவுந்தர்யா, 2005ல் அரியானாவின் மின்சாரத்துறை முன்னாள் அமைச்சரும் தொழிலதிபருமான ஓம் பிரகாஷ்  ஜின்டல். 2009ல் அப்போதைய ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, 2011ல் அருணாச்சல பிரதேச முன்னாள் முதலவர் டோர்ஜி காண்டு
ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்துகளில் இறந்துள்ளனர்.

ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், கன மழையால் கட்டுப்பாட்டை இழந்து நல்லமலா மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.  

மோசமான வானிலை காரணமாக, இறங்குதளம் என நினைத்து ஹெலிகாப்டரை குளத்தில் இறக்கிய விபத்தில், பாலயோகி உயிரிழந்தார்.

2013ல் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், எம்.ஐ17வி5 ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விபத்தில் சிக்கி இருபது பேர் உயிரிழந்தனர்.

2017ல் இந்திய சீன எல்லைப்பகுதியான யாங்சே ராணுவ முகாமிற்கு, ஹெலிகாப்டரில் எரிபொருள் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் எரிபொருள்  பேரல்களில் ஒன்று திறந்து தீ விபத்து ஏற்பட்டதில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியதில் விமானி, துணை விமானி, விமான எஞ்சீனியர்,  இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்தியாவின் ஹெலிகாப்டர் விபத்துகளில் மிக அண்மையில் நடந்த விபத்து, கடந்த நவம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது.  இரண்டு விமானிகள் உட்பட ஐந்துபேருடன் எம்.ஐ17 ஹெலிகாப்டர், அருணாச்சலப் பிரதேசத்தில் தரையிறங்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக மலையில் மோதவிருந்த நிலையில், விமானி திறமையாக செயல்பட்டு ஹெலிகாப்டரை மலைகளின் நடுவே குறைந்த வேகத்தில் இறக்கி, உயிர்ச்சேதமின்றி பெரும் விபத்தைத் தவிர்த்தார்.

இந்த ஆண்டின் மே மாதத்தில், பஞ்சாப் மாநிலத்தின் பாகபுரானாவின் லாங்கியானா குர்த் கிராமத்தில், பயிற்சி பணிகளில் MiG-21 ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தபோது, விபத்துக்குள்ளானது. இதில் இந்திய விமானப்படை விமானி அபினவ் சௌத்ரி உயிரிழந்தார். மற்றொரு விமானி, காயங்களுடன் உயிர் தப்பினார். அதிக மழைப் பொழிவே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

ஹெலிகாப்டரில் மிக முக்கியப் பிரமுகர் பயணிக்கப் போகிறார் என்றால், பெரும்பாலும் பயணிப்பதற்கு முன்பாக அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் முழுமையாகப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும். அந்த ஹெலிகாப்டரை எந்த விமானி இயக்கப் போகிறாரோ அவர், ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக ஹெலிகாப்டர் இயக்கப்போகும் பாதையில் சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரை இயக்கி, எங்கு இறக்க வேண்டுமோ அங்கு ஹெலிகாப்டரை இறக்கி, ஹெலிகாப்டரை இயக்கத் துவங்கியதிலிருந்து சென்றடைந்த தொலைவு வரை, ஹெலிகாப்டரை இயக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை துல்லியமாகக் குறித்துக்கொள்வார்கள்.

அந்த ஹெலிகாப்டர் திரும்பி வந்து உரிய இடத்தில் நிறுத்தப்பட்டதும் அதனை வேறு யாரும் நெருங்கிவிடாதபடி பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.

அதுபோல, பல ஹெலிகாப்டர்கள் இருக்கும் பட்சத்தில் எந்த ஹெலிகாப்டரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும், பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றது. பத்து வருடமான பழைய ஹெலிகாப்டரும் ஏழு வருடமான பழைய ஹெலிகாப்டரும் இருந்தால், ஏழு வருடமான ஹெலிகாப்டரையே பயணத்திற்கு ஏற்றது எனத் தேர்வு செய்வார்கள். தேய்ந்து போன பாகங்களைக் கொண்ட ஹெலிகாப்டரை பயணத்திற்கு தேர்வு செய்யமாட்டார்கள். மேலும், அவசரத் தேவைக்காக மற்றொரு ஹெலிகாப்டரையும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

இந்நிலையில்,
வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில், பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடைபெறவிருந்த கருத்தரங்கில் பங்கேற்க, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் பிபின் ராவத் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

பிபின் ராவத் பயணித்த Mi-17V-5 ஹெலிகாப்டர், மோசமான வானிலையிலும் பறக்கும் திறன் கொண்டது என்றாலும், ஹெலிகாப்டர் குறைந்த உயரத்திலிருந்து விழுந்ததாகவே தெரிகிறது. விபத்து நடந்த குன்னூர் காட்டேரி பார்க் பகுதியில், தாழ்வான பகுதிகளில் மேகக்கூட்டமும், அதிக ஈரப்பதம் கொண்ட பனிமூட்டமும் எதிரில் இருக்கும் பொருட்களை காணும் திறனை மங்க செய்திருக்கலாம். இதனை கிட்டத்தட்ட உறுதிபடுத்தும் விதமாக, விபத்து நடந்த புதன் கிழமை அன்று காலை 8.30 மணி வரை நான்கு மில்லி மீட்டர் வரை மழை பொழிந்ததற்கான பதிவை,  வானிலை ஆய்வு மையம் வெளிச்சப்படுத்துகிறது.

ஹெலிகாப்டரை ஓட்டிய குரூப் கேப்டன் வருண்சிங், தேஜஸ் விமான டெஸ்ட்டிங் பைலட்டாக இருந்தவர். ஒருமுறை அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானபோது, மிகுந்த சாதுர்யமாக விமானத்தை இயக்கி, அவருக்கும் விமானத்திற்கும் சிறு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக தரை  இறக்கினார். இதற்காக அவர் மத்திய அரசின் விருது பெற்றிருக்கிறார். இப்படி திறமை மிக்க விமானி வருண், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணிக்கும் ஹெலிகாப்டரை எப்படி கவனத்துடன் இயக்கியிருப்பார் என்பதை, புரிந்துகொள்ள முடிகிறது.  அப்படி இருந்தும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் பிபின் ராவத் வரும் ராணுவ ஹெலிகாப்டர் இறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, அவசர தேவையை கருத்தில் கொண்டு தீயணைப்பு துறையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பிபின் ராவத் வந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் பகுதியில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும், அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பிபின் ராவத் உள்ளிட்ட பதிமூன்று பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்தில், எந்த சந்தேகமும் இல்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ள நிலையில்,

இந்த பெரும் விபத்து குறித்து முப்படைகளின் தளபதிகளும், மத்திய அரசும் தமிழக அரசும் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது. விபத்து நடந்த வனப்பகுதிகளில் ராணுவமும் தமிழக சிறப்பு அதிரடிப்படையினரும் தீவிரத் தடயத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவம், விமானம் மற்றும் தமிழக காவல்துறையின் சார்பில், விபத்து நடந்த இடத்தில் இரண்டு அதிநவீன ட்ரோன்கள் மூலம் முப்பரிமாண ஒளிப்பதிவு, மோப்ப நாய்கள், தடயவியல் உள்ளிட்ட சோதனைகளும்,

விபத்து நடத்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள், மின் கம்பங்கள் ஏதேனும் இருந்ததா என்று மின்சாரத்துறையிடமும், சம்பவத்தன்று அப்பகுதியின் வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்திடமும் தகவல் கேட்டும்,

சம்பவம் நடந்த அன்றும் அதற்கு முன்பும் பின்பும் பேசப்பட்ட அப்பகுதி செல்போன் தொடர்புகள், அப்பகுதியில் வசிப்போர் விபரங்கள், அங்கு பூட்டப்பட்டிருக்கும் சுற்றுலா சொகுசு வீட்டின் விபரம் உள்ளிட்ட அத்தனை விசாரணைகளும் எதற்காக மேற்கொள்ள வேண்டும்…?…!

ஒருவேளை, ஏடாகூடமாக ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், விசாரணையில் எந்த முடிவுகளும் உறுதியாகத் தெரியாத நிலையில், அதுவும் விசாரணையின் தொடக்க நிலையிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என, டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன சொல் என்னவாகும்…?…!

இந்தியா முழுக்க ஏன் உலகம் முழுவதும் உற்று நோக்கும் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து, நாட்டின் பாதுகாப்பு அது இது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பலரும் பலவிதமாக தங்களின் கருத்துக்களை பதிவாக்கிவரும் சூழலில், பலரும் பலவிதமாக குளிர்காய நினைக்கும் வேளையில்,

ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையின் முடிவு, வேறு எந்தவித சம்பவங்களுக்கும் இடமின்றி நாட்டு மக்களின் பொது அமைதிக்கு அரணாக அமையட்டும்.

———————————————————–
– சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
———————————————————–