Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தமிழ்நாடு- ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடிவு பெறும் வகையில் திமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா நடக்காதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளாக கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளன. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாக பேரூராட்சி , நகராட்சி,மாநகராட்சி உள்ளன. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடப்பது வழக்கம்.
 கடந்த 2022ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. முன்னதாக கடந்த 2019ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது.
அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. இதனால் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய கால தாமதம் ஏற்பட்டதால்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.  2019 டிசம்பரில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றுக்கு  தேர்தல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
 இதையடுத்து தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையை செய்து ஊரக உள்ளாட்சிகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு 2021 செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களுக்கு 2019ம் ஆண்டிலும், மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு 2021ம் ஆண்டிலும் நடந்தது. இரண்டுக்கும் இடையே
 சுமார் 2 ஆண்டு கால இடைவெளி உள்ளது. இதில் 2019 தேர்தலில் தேர்வானவர்களின் பதவிக்காலம் என்பது வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. மாறாக 5 ஆண்டு பொறுப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் 2021ல்
 9 மாவட்டங்களில் தேர்வான உள்ளாட்சி பிரதிநிதிகள்  பதவிக்காலம் 2026 ல் தான் நிறைவு பெறுகிறது.

இதனால் இந்த கால இடைவெளியை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது. மேலும் கால இடைவெளியை சரிசெய்ய 2019ல் தேர்தலை சந்தித்த 27 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சட்டசபையில் மசோதா நிறைவேற்றி தனி அதிகாரி மூலம் 2021ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் வரை 2026 செப்டம்பர் வரை நிர்வாகம் செய்வது.

இல்லாவிட்டால் இந்த ஆண்டு 2021ல் தேர்தலை சந்தித்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைத்துவிட்டு 2019ல் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களுடன் சேர்த்து தேர்தலை நடத்துவது. இந்த 2ல் ஒன்றை தான் தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது திமுக ஆட்சியில் இருக்கும்போதே ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்பது தொடர்பாக விரிவான விவாதம் நடந்துள்ளது

அப்போது சிலர், ‛‛2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களின் நிர்வாக அமைப்பை முன்கூட்டியே கலைத்துவிட்டு வரும் டிசம்பர் மாதத்தில் 27 மாவட்டங்களுடன் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடத்தலாம். இதை செய்யாவிட்டால் 2021ல் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டி இருக்கும். ஆனால் 2026 மே மாதமே தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் வந்துவிடும்.

இந்த சட்டசபை தேர்தல் என்பது திமுகவுக்கு சாதகமாக அமைந்தால் பிரச்சனையில்லை. மாறாக பாதகமாக அமைந்தால் அதிமுக ஆட்சியில் அந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அப்படியென்றால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்

இதனால் முதல்வர் ஸ்டாலின் வரும் டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் நடத்தலாமா? என்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறார். இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் முடிவு வந்த பிறகு அதுபற்றி அமைச்சர்கள் , கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலின் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெல்லும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் வரும் 2024 டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஒருவேளை மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால் 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளின்  மக்கள் பிரதிநிதிகளாக தேர்வானவர்களின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்னொரு திட்டமும் ஸ்டாலின் யோசித்து வைத்துள்ளதாக நம்பத்தகுந்த அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, உள்ளாட்சி நிர்வாகத்தை மொத்தமாக கலைத்து விட்டு தன் கட்சியினரின் (மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்) கட்டுப்பாட்டில் சில மாதங்கள் வைக்கலாமா என்றும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியினரை தயார் படுத்தும் வழியாக வைட்டமின் ப கிடைக்க வழி வகை செய்யலாமா என்றும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா… நடக்காதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.