அதனால் அரசியல் பேசுகிறேன்-2
தமிழகத்தில்
அரசியல் வெற்றிடத்தை நிரப்புவாரா விஜய்?
நடிகர்கள் நாடாளலாமா? இந்த கேள்வியை நீண்ட நாட்களாக கேட்டு வருகிறார்கள் கேட்பவர்கள் சாமானிய மக்கள் அல்ல அரசியல்வாதிகள். ஏன் நடிகர்கள் நாடாள கூடாதா? அது என்ன நடிகர்களுக்கு மட்டும் இந்த கேள்வி. அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்களை உதாசீனப்படுத்துவது, அவமானப்படுத்துவது என்கிற கொள்கையை கையில் எடுத்தது தான் இது போன்ற கேள்விகள் வருகின்றன. நடிகர்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சம். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மக்களிடம் அறிமுகமானவர்கள். அதனால் எளிதில் வென்று விடுவார்கள் என்கிற அச்சம் தான். ஏன் நடிகர்கள் நாடாளவில்லையா? எம்ஜிஆர் நடிகர் தானே என்டி ராமராவ், ஜெயலலிதா, ஜானகி நடிகர் தானே மக்கள் பிரதிநிதித்துவத்தில் பங்குபெற்ற எஸ் எஸ் ஆர், டி ராஜேந்தர், வாகை சந்திரசேகரன், ஜேகே ரித்தீஷ், விஜயகாந்த், அருண் பாண்டியன் என பட்டியல் நீண்டு கொண்டே போகும் நடிகர்கள் மக்கள் பிரதிநிதிகள் தோன்றியதற்கு.அந்த வகையில் அரசியலை நடிகர்கள் கையில் எடுத்து வெற்றி பெறுவதும் தோல்வியடையதும் சில நேரங்களில் காணாமல் போவதும்கூட நடந்திருக்கிறது. திரைத்துறையில் தன் நடிப்பாற்றலால் மக்களை வசியப்படுத்திய செவாலியே சிவாஜி கணேசன் தேர்தல் அரசியலில் வெல்ல முடியாமல் போனதை நாம் அறிய முடியும். ஒரு முறை முதலமைச்சராகி இறக்கின்ற வரை முதலமைச்சராகவே இருந்த எம்ஜிஆரையும் நாம் அறிந்தோம்.
அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வந்த நேரம் ஏதோ சில காரணங்களால் அரசியலில் காணாமல் போனார் விஜயகாந்த். இதோ கட்சி ஆரம்பிக்கிறேன், அதோ கட்சி ஆரம்பிக்கிறேன் என்று மக்களையும் ரசிகர்களையும் போக்கு காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என்று ஒரு முடிவெடுத்தார். குடும்ப அரசியல், திராவிட அரசியல், தேசிய அரசியல் என்று திரைப்பட வசனங்களை போல வசனங்கள் பேசிய கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற ஒரு கட்சியை தொடங்கி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தோடு நின்று கொண்டிருக்கிறார். அதே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த சீமான் போன்றவர்கள் திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற ஒரு கட்சியை தொடங்கி இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என்றும் அறிவித்திருக்கிறார். ஆனாலும் கூட அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை விஜய் எடுக்க வில்லை.
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது மேடைப் பேச்சில் எந்த கவனமும் செலுத்தவில்லை மாறாக திரைப்படத்தில் தன்னை பார்த்த ரசிகர்கள் கூட்டத்தை வசிகரிக்க செய்தார். அதை அண்ணாவும் விரும்பினார். திமுக போட்டியிட்ட தேர்தலில் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாமல் மருத்துவமனையில் கழுத்தில் எம் ஆர் ராதா சுட்ட காயத்தில் கட்டோடு படுத்துக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் அந்த புகைப்படத்தை சுவரொட்டிகளாகி தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டது திமுக. அதில் வெற்றியும் பெற்றது. ஆகவே எம்ஜிஆர் பேசத் தேவையில்லை முகத்தை காட்டினால் போதும் ஓட்டு வாங்கி விடலாம் என முடிவு செய்தது திமுக. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து வந்த போதும் அதே நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். நாம் பேசத் தேவையில்லை முகத்தை காட்டினால் போதும் மக்கள் நம்மை அங்கீகரித்து விட்டனர் இதுதான் அரசியலில் நம்முடைய முதலீடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் எம்ஜிஆர். அது அவருக்கு வெற்றியை தேடித் தந்தது, அத்துடனே தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு அடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் அதிகம் பேச வேண்டி இருந்தது அதிகம் பேசியதாலே அவர்கள் அரசியலில் காணாமல் போனார்கள் இது வரலாறு.
எம்ஜிஆரைப் போலத்தான் கேப்டன் விஜயகாந்த்தையும் பார்ப்பதற்கு வந்தார்கள் பார்த்தார்கள் ஆதரவளித்தார்கள் ஆனால் விஜயகாந்த் பேசி விட்டார் அதுவும் அதிகம் பேசி விட்டார் சினிமாத்தனத்தை எப்படி அரசியலாக்குவது என்பதை கற்றறிந்திருந்தார் எம்ஜிஆர். ஆனால் ஒரு பக்கம் அரசியல் மாறுபட்டு இருந்தது கமலஹாசனை கூட்டம் கூட்டமாக பார்க்க வந்தார்கள் ஆனால் வாக்களிக்கவில்லை இப்போது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார் அவரையும் பார்ப்பதற்காகத்தான் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுகிறார்கள் பார்க்க வருகிற மக்களை ஓட்டுக்களாக அறுவடை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் விஜய் இருக்கிறார். ஆனால் விஜய் அரசியல் பேசி விட்டாள் அந்த கூட்டமும் கலைந்து போகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
விஜய் அரசியலில் கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. விசில் அடித்த கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்துவிடலாம் என்று விஜய் கனவு கண்டால் அது பலிக்காது. சாமானிய மக்களுக்கான பிரச்சனை என்னவென்று நடிகர் விஜய்க்கு தெரியுமா என்றால் தெரியாது அவர்களுக்கான பிரச்சினையை முதலில் தெரிந்து கொண்டு அதற்காக போராட வருவதுதான் தலைவர்களுக்கு அழகு. அப்படித்தான் தலைவர்கள் உருவானார்கள்,மக்களோடு இணக்கமாக இல்லாத எந்த தலைவரும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. விஜய் கட்சியின் கொள்கைகள் என்ன எதை நோக்கி பயணிக்க போகிறோம் என்பதை விஜய் முதலில் மக்களுக்கு விளக்க வேண்டும் அப்போதுதான் அது ஜனநாயகத் தன்மை பெறும்.ஒரு முறை அரசியலில் தோன்றி விட்டால் அது புலி வாலை பிடித்த கதையாக ஆகிவிடும் விஜயின் வெற்றிக் கழகம் என்ன செய்யப் போகிறது. இடைவேளை விடும்போது படம் பிடிக்கவில்லை என்றால் வீட்டிற்கு போய்விடலாம். ஆனால் இது சினிமா படம் அல்ல, அரசியல் மக்களை வழிநடத்துகிற, இயக்குகிற ஒரு இயந்திரம். ஆனாலும் தமிழகத்தில் இன்னமும் அரசியல் வெற்றிடங்கள் காலியாக உள்ளன அதை விஜய் நிரப்ப முன் வருகிறார். வரவேற்க வேண்டியது தான். ஆனாலும் இது விளக்கு வெளிச்சத்தில் ரிகர்சல் பார்க்கிற இடம் அல்ல என்பதை விஜய் புரிந்து கொள்ளட்டும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை விஜய் மக்கள் வெற்றிக்கழகம் முடிவெடுத்து இயங்க வேண்டும் எல்லோரையும் போல மாற்றத்தை நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
– பா ஜோதி நரசிம்மன்
What’s your reaction?
Love2
Sad0
Happy2
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply