Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அதனால் அரசியல் பேசுகிறேன்-5 திருமங்கலம் ஃபார்முலா வா? ஆர்.கே.நகர் ஃபார்முலா வா? ஆளுங்கட்சிகளின் இடைத்தேர்தல் ஆக்கிரமிப்புகள்….

இடைத்தேர்தல் என்றாலே எந்த கட்சி வேட்பாளர் பதவி விலகினார் அல்லது உயிரிழந்தார் என்பதை பெரும் இழப்பாக நினைத்து அந்த இடத்திலும் ஒரு சொந்த கட்சிக்காரரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் எல்லா கட்சிகளும் செயல்படும். பெரும்பாலும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு உயர்ந்தே காணப்படும் அதற்கு காரணம் அதிகார பலமும் பொருளாதார செழிப்புமே காரணம். இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் செய்யப் போவதில்லை இருந்தாலும் கட்சியின் செல்வாக்கை உயர்த்தி காட்டுவதற்கு பயன்படும் என்ற நோக்கத்தோடு தான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் நடந்த முதல் இடைத்தேர்தல். கவனம் பெற்றது திருச்செங்கோடு.
அப்போதைய திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியானது  ஈரோடு, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, கபிலர்மலை, சங்ககிரி (தனி), எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. 1957, 1962 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சுப்பராயன் வெற்றி பெற்றார். 1962- இல் வெற்றி பெற்ற சுப்பராயன், சில மாதங்களிலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு, காலமானார். அதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது..இந்தத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும், திமுக சார்பில் செ.கந்தப்பனும் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், ஜனசங்கம், தமிழ்த் தேசியக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக  களத்தில் இருந்தன. பணபலம், படைபலம், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தீவிரப் பிரசாரம் ஆகியவை காங்கிரசுக்கு வலுசேர்த்தன. திமுக-வை ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டுமே ஆதரித்தது. இருப்பினும், காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக-வைச் சேர்ந்த செ. கந்தப்பன் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியைத் தோற்கடித்த வரலாறு அரசியலில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது.
அடுத்தது திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 1957-இல் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் ப.உ. சண்முகம். பின்னர், திமுக-வில் இணைந்து 1963 இடைத் தேர்தல் மற்றும் 1971, 1977 பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து, திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது இடைத்தேர்தல் வெற்றிதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
1962 -இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில்  பி. பழனிபிள்ளை போட்டியிட்டார். திமுக சார்பில் ப.உ. சண்முகம் போட்டியிட்டார். இதில், காங்கிரஸ் வேட்பாளர் 35,148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 33,399 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அண்ணா உள்பட பல தலைவர்களும் இந்த 1962 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்கள் இந்நிலையில், உடல் நலக்குறைவால் 1963-இல் பழனிபிள்ளை உயிரிழந்ததால் திருவண்ணாமலைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில், கடந்தமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த ப.உ.சண்முகத்துக்கே திமுக-வில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்ராசலம் (அண்ணாமலை) நிறுத்தப்பட்டார். பொதுத் தேர்தலிலேயே திமுக-வின் வளர்ச்சியைக் கண்டறிந்த முதல்வர் காமராஜர், திருவண்ணாமலை இடைத்தேர்தலை தனக்கான சவாலாகவே கருதினார். முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கினார் இப்போது போல அப்போதெல்லாம் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிற கலாச்சாரம் இல்லை. திட்டங்களை அறிவித்து அதன் மூலம் மக்களின் மனதை கவர்ந்து வாக்கு வாங்குகிற செயல்தான் நடக்கும். இந்த தேர்தலிலும் அது நடந்தது. ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்தது. ஆளுங்கட்சி காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ப.உ. சண்முகம் வெற்றி பெற்றிருந்தார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றது திமுக இது வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இப்போது வரை கருதப்படுகிறது.
1972 இல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவை தோற்றுவித்தார் அப்போது நடந்த முதல் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது கட்சி உருவாக்கி பொதுத் தேர்தலை சந்திக்காமல் இடைத்தேர்தலை சந்தித்த வரலாறு அதிமுகவுக்கு உண்டு.திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் திமுக உறுப்பினர் ராஜாங்கம் மறைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சித் தொடங்கிய சிறிது நாள்களிலேயே, தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.
அதிமுக வேட்பாளராக கே. மாயத்தேவரை, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எம்ஜிஆர் களம் இறக்கினார். திமுக தரப்பில் பொன். முத்துராமலிங்கம், காங்கிரஸ் தரப்பில் என்எஸ்வி. சித்தன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 2.65 லட்சம் வாக்குகள் பெற்ற மாயத்தேவர், 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அடுத்த இடத்தை 1.20 லட்சம் வாக்குகளுடன் காங்கிரஸ் பிடித்தது. 1971 பொதுத் தேர்தலில் 2.48 லட்சம் வாக்குகள் பெற்ற திமுக, இடைத் தேர்தலில் 85 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. அதற்குப் பிறகு எம்ஜிஆர் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாயத்தேவர் திமுகவில் சேர்ந்தார் என்பது வேறு கதை. எம்ஜிஆர் அப்போது சுயேச்சை சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தார் அதுதான் இன்றுவரை அதிமுகவின் நிரந்தர சின்னமாக இருந்து வருகிறது. அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மாயத்தேவர் மூலமாக நிரந்தர சின்னமாக மாறியது
அதற்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் பற்றி இப்போது உள்ளவர்கள் அதிகம் அறிந்திருப்பார்கள் குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தல் ஒரு ஃபார்முலா என்று சொல்லப்பட்டது.தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான், அமோக வெற்றிபெற்றார். அதிலும் வாக்குப்பதிவு விழுக்காடு, அதிகம் நடைபெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தேர்தல் அது. ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்த முதல் தேர்தல் அது அதற்கு பிறகு அந்த தொகை அதிகரித்ததே தவிர இடைத்தேர்தல்களில் குறையவே இல்லை. குறிப்பாக ஆர்கே நகர் எம் ஜி ஆர், ஜெயலலிதா போற்றி வளர்த்த இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இங்கு கண்காணிப்பு அதிகமானதால் வேறு ஃபார்முலாவை பயன்படுத்தினார்கள் கட்சிக்காரர்கள். ஆமாம் இருபது ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டு வாக்குகளை உறுதிப்படுத்துவார்கள் தேர்தல் முடிந்த பிறகு 20 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரும் நபர்களிடமிருந்து அந்த சீரியலில் எண்ணை சரி பார்த்து ஓட்டுக்கு 2000 பணம் கொடுத்தது. அதிமுக டிடிவி தினகரன் வென்றார்
இப்படி ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் வருகின்ற போது அமைச்சர்கள் படைபலம், பணபலம் என தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை பார்த்து வருகிறோம் அங்கொன்றும் இங்கொன்றுமாக திண்டுக்கல் , திருவண்ணாமலை, ஆர் கே நகர் என அத்திப்பூத்தார் போல தான் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் இப்போது நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் திருமங்கலம் ஃபார்முலா வா? அல்லது ஆர் கே நகர் ஃபார்முலா வா? என மக்களை ஏங்க வைத்திருக்கிறது என்று சொல்லலாம் ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்று சொன்னால் இவைகள் எல்லாம் களைய வேண்டும் அதற்கு புரட்சி வெடிக்க வேண்டும்.