ஜூலை மாதம் 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் மாவட்ட செயலாளர் புகழேந்தி உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் பங்கெடுக்கின்றன.அது மட்டும் அல்லாமல் 26 சுயேச்சைகள் போட்டியிடுகின்றன.2,33,903 வாக்காளர்களை கொண்டது இந்த தொகுதி. இதில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஜெயிக்க வேண்டும் என்பது கற்பனை செய்து கொள்ள முடியாத கனவு. போகட்டும் அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை அதற்கு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன காரணம் தான் அதிமுகவினரை இன்னமும் கோபமடை செய்துள்ளது. பண பலம், படைபலம், நிர்வாகபலம் ஆகியவற்றை கொண்டு திமுக பல சூழ்ச்சிகளை செய்து வெற்றி பெறும் எனவே அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.இடைத்தேர்தலில் ஜெயலலிதா கூட போட்டியிடாமல் போனதற்கு காரணம் இதுதான் என்று விளக்கமளித்து இருக்கிறார். ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே ஆளுமையா? என்கிற கேள்வி அதிமுகவினர்களிடமே எழுந்துள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா காலத்திற்கு முன்னதாக இருந்தாலும் அதற்கு உரிய காலத்தில் இருந்தாலும் அதிமுக, திமுக இரண்டும் இரு வேறு துருவங்களாக செயல்பட்டு வந்தது. அப்படியே கூட்டணி அல்லாத கட்சிகளிடம் கூட தொடர்பு இல்லாமல் தான் இருந்தது. அது அவர்களது கொள்கை முடிவாகவே வெளிப்பட்டது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு பரஸ்பரம் சந்தித்துக் கொள்கிற கட்சிக்காரர்கள் அதிகமாகி கொண்டு போனார்கள். ஆனாலும் தலைவர்களையும் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்கவில்லை. அதிமுக இப்படி ஒரு நிலை எடுத்தது அந்த கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களை கூட அவமானப்படுத்தி விட்டதாக உணருகிறார்கள். அது கூட பரவாயில்லை தேசி ஜனநாயக கூட்டணியினர் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தி பாமகவிற்கு வாக்கு சேகரிக்கும் நிலை இப்போது விக்கிரவாண்டியில் ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பாமக,பாஜகவோ கவலைப்படவில்லை எப்படியோ ஓட்டு வந்தால் சரி என்கிற நிலைப்பாட்டில் தான் இயங்குகிறார்கள். அரசியல் கட்சிகளின் நிலை இப்போது இப்படித்தான் இருக்கிறது. ஒரு பக்கம் திமுக அமைச்சர் எ.வ வேலு திமுகவிலிருந்து பிரிந்து போன கழகம் தானே அதிமுக,எம் ஜி ஆர் ரசிகர்கள் இந்த முறை அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் போனதை பயன்படுத்தி எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று பரப்புரை மேற்கொள்கிறார். இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய எடப்பாடி பழனிச்சாமியோ ஜெயலலிதா படத்தை எதிரணியினர் பயன்படுத்துவது பெருமையாக இருக்கிறது என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கிறார். கொள்கை சார்ந்து ஒரு இயக்கம் இப்படி கொள்கை பிடிப்பு இல்லாமல் போகிற போக்கில் போவது அதிமுகவுக்கு அழகல்ல என்பதுதான் உண்மை. இப்படியே போனால் 2026 தேர்தலில் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தாத கட்சிகளே இருக்காது. இதை கட்டுப்படுத்த வேண்டிய தலைமையும் கட்டுப்பாட்டை இழந்து தவிக்கிறது. கொள்கையில் சமரசம் செய்து கொள்ளுகிற எந்த கட்சியும் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. நகைச்சுவையாக கொள்கையை அடமானம் வைத்த எடப்பாடியின் அதிமுகவும் அப்படித்தான் ஆகும் போல தெரிகிறது.
Leave a Reply