Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஒற்றுமை உடைஞ்சிடுச்சி…கோஷ்டிகள் வளருது…

-வேலூர் அதிமுக நிலவரம்!நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் பணத்தால் வளைத்துவிட்டார், வளைக்கப்பட்டவர்கள் தாங்கள் சார்ந்து இருக்கும் இயக்கங்களில் ஆக்டீவாக செயல்படுவதுபோல் காட்டிக்கொண்டு சொந்த கட்சிக்கு சூனியம் வைத்துவிட்டனர் என்பது பரவலான குற்றச்சாட்டு அப்படிப்பட்ட குற்றச்சாட்டு அதிமுகவினர் மீதும் திரும்பியது பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வளைதளங்களில் தங்களுக்கு ஆகாத நிர்வாகிகளை நேரிடையாகவும் மறைமுகமாகவும் பதிவிட்டு திருப்தி அடைந்தனர். விஷயம் டீகடை சமாச்சாரம்போல பெரிய அளவில் பேசப்பட்டது.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் அப்பு இரண்டுமுறை காட்பாடி தொகுதியிலும் ஒருமுறை வேலூர் தொகுதியிலும் எம்எல்ஏவுக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர், அப்பு மாவட்டசெயலாளராக அடையாளம் காட்டப்பட்ட பிறகு, பல சீனியர்கள் அப்புவின் அரசியலால் ஒதுங்கினர் சிலர் ஒதுக்கப்பட்டனர். பதிலுக்கு மாணவரணி இளைஞரணி வருகையும் இருந்தது. தொண்டர்கள் அப்படியே இருந்தார்களே தவிர நிர்வாகிகள் மறைமுகமாக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த ஆரம்பித்தனர். அப்பு அதை வெளியில் காட்டிக்கொள்ளாமலே அரசியல் பண்ண ஆரம்பித்தார். மாநில அமைப்பு செயலாளராக இருக்கும் ராமு அரசியலை பக்காவா பண்றார் இவர்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடியில் திமுக அமைச்சர் துரைமுருகனை திணறடித்தவர் கட்சியில அனைவர் மத்தியிலும் செல்வாக்கோடு இருக்கிறார். அப்புவை பிடிக்காதவர்கள் ராமுவோடு சேர்ந்து பயணம் பண்றாங்க இவருக்கும் அப்புவுக்கும் ஆகல. மீண்டும் காட்பாடி தொகுதியில் நிற்கும் எண்ணத்திலிருக்கும் ராமுவுக்கு மாவட்ட செயலாளர் பதவி மீது ஒரு கண் உண்டு. ராமுவோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராகேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் திருமால் ஆகியோருக்கும் காட்பாடி தொகுதி மீது காதல் உண்டு. இதில ராகேஷ் அதிமுகவினர் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறார். இவர்களோடு மீண்டும் காட்பாடி தொகுதியில் நிற்க தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். ராமு நேரிடையாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அறிமுகமும் பழக்கமும் உள்ளவர், அப்பு துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி ரூட்ல பயணம் பண்ணிகிட்டு இருக்கிறார். காட்பாடி தொகுதி ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் அனைவரும் ஆக்டீவாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
வேலூர் மாநகர் மாவட்டத்தில் இருக்கும் இன்னொரு சட்டமன்ற தொகுதியான வேலூரில் அதிமுக கலகலத்துப் போயிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஜனனி பிக் பஜார் சதீஷ் எப்படியாவது வேலூர் தொகுதிக்கு எம்எல்ஏ சீட் வாங்கிடனும் என்று பொம்மை மாதிரி வேலூர் தொகுதியை சுற்றி சுற்றி வருகிறார். சதீஷுக்கு கட்சியில மேல்மட்ட தொடர்புகள் உண்டு. அதிமுகவினர் மத்தியில் பிரபலம் இவருக்கு மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை எது நிறைவேறுமோ தெரியல? முன்னாள் மாவட்ட செயலாளர், இன்னாள் மாவட்ட பொருளாளர் மூர்த்தி கட்சியில சீனியர், விஷயம் தெரிந்தவர் அனேகமாக சீனியர்ல மூர்த்தி மட்டும்தான் மிச்சம் என்கிறார்கள் வேலூர் அதிமுகவினர் மூர்த்தி கோஷ்டி வேலூர் அதிமுகவில் வலுவான கோஷ்டி என்று சொல்லலாம். இவருக்கும் எம்எல்ஏ சீட் மற்றும் மாவட்ட செயலாளர் பதவி மீது பல வருட விருப்பம் இப்பொழுதாவது நிறைவேறுமா என்று காத்திருக்கிறார். அடுத்தவர் பகுதி செயலாளர் குப்புசாமி, இவருக்கு மாவட்ட செயலாளர் அதோடு வேலூர் எம்எல்ஏ சீட் இரண்டுக்கும் இரகசியமாய் காய் நகர்த்துகிறார் எம்எல்ஏ சீட்டுக்கு குப்புசாமியை அப்பு ஆதரிக்கிறார். இரண்டுக்கும் சேர்த்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆதரிக்கிறார். மொத்ததில குப்புசாமி கை கொஞ்சம் ஓங்கித்தான் இருக்கு. வேலூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பான்மையான பகுதி செயலாளர்கள் கட்சிப்பணியைவிட தங்கள் பணியே பிரதானமாக உலா வருகின்றனர்.
மாவட்டம் அப்புவுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ… எதிர்பாளர்கள் இருப்பது நிஜம்தான்! ஏ.சி.சண்முகம் குறித்து கேட்டால், எல்லோருடைய நம்பரும் அவர் வச்சிருக்கலாம் அவ்வளவு ஏன் சிலர்கிட்ட பேசிகூட இருக்கலாம் எதுக்கும் ஆதாரமில்லையே? அதெல்லாம் வதந்திதான் என்று உறுதியாக மறுக்கிறார் முக்கிய நிர்வாகி.
அதென்னவோ… மாவட்ட அதிமுகவுல நிர்வாகிகள் மத்தியில ஒற்றுமை இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
– ஆலவாயர்