Save 20% off! Join our newsletter and get 20% off right away!

முதுகுளத்தூர்-அவசரமாக முடிந்த கவுன்சில் மீட்டிங் ரகசியம்?புரியாத புதிர்?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர் கூட்டத்தில் மிச்சர்… டீ யை…வேகமாக கொடு,  என்று கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறி 10  நிமிடத்தில் கூட்டத்தை முடித்தது பிற துறை அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், இதுபோன்ற அவசரமாக கூட்டம் முடிக்க அதிகாரியே தூண்டினால் மக்கள் நலன் திட்டங்கள் எப்படி சென்றடையும் என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி இந்த டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது என்பதால் கூட்டம் கடைசி கூட்டம் என்ற ரீதியில் சற்று கூட்டம் உருக்கமாகவும் இந்த 5 ஆண்டுகளில் கவுன்சிலர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பகிர்ந்து கொள்வார்கள் இதில் மக்கள் நலன் சார்ந்த பணிகள் எந்த அளவுக்கு நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்தனர் என்பதையும் மனம் திறந்து கூறுவார்கள் என்று எதிர்பார்ப்புடன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கூட்டம் யூனியன் சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஷ் தலைமையில் ஆணையாளர் ஜானகி, துணைத் தலைவர் கண்ணகி ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து அலுவலக அலுவலர் சில தீர்மானங்களை ஒரு சில நிமிடங்களில் வாசித்தார்.
பின்னர் கூட்டத்தில் அமர்ந்திருந்த கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் அலுவலக பணியாளரிடம் சீக்கிரம் மிச்சர்… டீயை கொடு….
கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று கூற பரபரப்பாக மிச்சர்… டீ… வழங்கப்பட்டது.
கூட்டத்தில் உள்ள சிலருக்கு மிச்சர்… டீ… கொடுக்கும்போதே கூட்டத்தில் ஒரு அலுவலர் நன்றி கூற கூட்டம் முடிந்தது என்று கலைந்து சென்று விட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள மின்சாரம், கல்வி, பொதுப்பணித்துறை, சுகாதாரம் துறை, வேளாண்மை போன்ற பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த மக்கள் நல திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை மக்கள் பிரதிநிதிகள் அல்லது ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளோ கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக வந்திருந்தனர். அதுமட்டுமின்றி தற்போது பருவ மழை காலம் துவங்கியுள்ள நிலையில் கண்மாய்களில் மழை நீரை சேமித்து வைப்பதற்கும் எங்காவது கண்மாய்களில் உடைப்பு ஏற்படும் வகையில் அபாயகரமான சூழல் இருந்தால் அதை கூட்டத்தின் வாயிலாக மக்கள் பிரதிநிதிகள் கூறினால் அதற்கு எப்படி தீர்வு காணலாம் வரும் முன் காப்பது எவ்வாறு என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கவும் பிற துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். முதுகுளத்தூர் ஒன்றியத்தில்
விவசாயம் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேளாண்மை துறை அலுவலர்கள் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி தற்போது பயிர் காப்பீடு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அது விவசாயிகளுக்கு மிகவும் பயன் தரும் அதையும் விளக்கம் அளிக்கவும் இதுபோல் பிற துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் தயார் நிலையில் இருந்தும் யாருக்கும் கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைவிட வேகமாக கூட்டத்தை அவசர அவசரமாக முடித்ததின் ரகசியம் கூட புரியாத புதிராகவே இருந்ததால் பிற துறை அலுவலர்களும் செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களும் ஆச்சரியத்துடனும், மக்கள் நலன் திட்டங்கள் எந்த அளவு செயல்படுகிறது? இதுபோல் அவசர அவசரமாக கூட்டம் நடத்தினால் விவாதம் மற்றும் அரசு அலுவலர்களின் துறைகள் சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த விளக்க உரையும் வெளியே தெரியாமல் சென்று விடுமே என்ற கேள்வியும் எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் கூட்டங்களில் அரசு நலத்திட்ட பணிகள் குறித்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் பேசுவதற்கும் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதற்கும் சிறிது நேரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவு இட வேண்டும். அப்போதுதான் பேரிடர் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அலுவலர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு அது மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொண்டு மக்களிடம் எடுத்து செல்ல ஒரு வாய்ப்பாக அமையும். எனவே இந்த நடைமுறையை ஒன்றிய மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– போகர்