சகல சுப்பிரமண்ய ஆலயங்களிலும் ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது !!! ஆணவம் கன்மம் மாயை என்ற முக்குணங்களின் உருவாய் நின்ற சூரனை முக்கண்ணன் பரமனிடத்திருந்து தோன்றிய முருகன் சக்தி வேல்கொண்டு அழித்த தினம் !!!
ஆறுமுகனின் வினோதத் திருவிளையாடல்கள் எத்தனையோ இருக்க அவன் அருணகிரிநாதருக்கு அருளிய லீலை மட்டும் விந்தையிலும் விந்தை !!! வாழ்வே வேண்டாம் என்று திருவண்ணாமலை கோவில் கோபுரத்திலிருந்து குதித்து ப்ராணத்யாகம் செய்யத்துணிந்தவரை தன் கைகளால் தாங்கி, வேலால் அவர் நாவில் எழுதி ஞானத்தபோதனாராக ஆக்கினான் குருகுஹன் !!!
அதனால் தான் என்னவோ அன்று தகப்பன் ஸ்வாமியாக மாறி ஈசனுக்கு உபதேசித்த ரகசியத்தை அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதனைக் கண்ணெதிரே உருவாகக் காணும் பாக்கியத்தை பெற்றார் அருணகிரி !!! அவரன்றி வேறொருவருக்கும் அது கிட்டவில்லை !!!
“நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே” என்னும் திருப்புகழ் மஹாமந்திரத்தின் இறுதியில் “நாலந்த வேதத்தின் பொருளோனே, நான் என்று மார்தட்டும் பெருமாளே” என்கிறார் !!! அதாவது ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்களின் பொருள் எதுவோ, எது உலக படைப்பு மற்றும் இயக்கம் அனைத்திற்கும் மூலமாய் உள்ளதோ, எது அனைத்துமாய் மாறிநின்றதோடு மட்டுமல்லாமல் அதனுள்ளே வியாபித்தும் உளதோ அது “நான் ஒருவனே” என்று மார்த்தட்டிக்கொள்ளும் ஒரே சுவாமி சுப்ரமண்யஸ்வாமி மட்டுமே என்கிறார் அருணகிரி !!!
ப்ரணவத்தின் பொருள் தெரியாது நின்ற பிரமனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலை தானே ஏற்கிறான் கார்த்திகேயன் !!! பரமனே (ஈசன்) “உனக்குத்” தெரிந்த பொருளை கூறு என்று ஜீவாத்மாவின் ஸ்தானத்தில் கைகட்டி வாய்பொத்தி முன்னமர, தானே பரமாத்மாவாய் இருந்து நான்கு மஹாவாக்கியங்களின் சாரமாய் உள்ள “சதாசிவோஹம் ஸுப்ரஹ்மண்யோஹம்” (யாமே நீ !!!) என்னும் அர்த்தத்தை உபதேசித்து அருளினான் சுவாமிநாத சுவாமி !!! பிரணவத்தின் வடிவமாய் இருப்பது யாமே என்பது வேலவனின் கூற்று !!!
இதனை அறிந்த அருணகிரி இவ்வபேதத்தைக் கண்ணால் காண வேண்டும் என்று தவமிருக்க, திருச்சீரலைவாய் ஆன திருச்செந்தூரிலே அலைகடலின் (சம்சார சாகரம்) கரையினிலே அருணகிரியின் மாயயைநீக்கி ஆறுமுகமும், பன்னிருகரமும், பதினெட்டு கண்களும் உடைய ஷண்முகனாய்த் தொன்றி தன் ஸ்வரூபத்தை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் பின்புறத்திலே ஆனந்த கூத்தாடும் அம்பலவாணனாகிய பரமேஸ்வரனாகவும் காட்சியளித்து, இருவரும் வேறன்று ஒன்றே என்னும் ப்ரணவார்த்தத்தை காட்டியருளினான் கந்தன் !!!
இன்றளவும் ஆவணி, மாசி இரு மாதங்களிலும் ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் திருச்செந்தூரில் நடக்கும் உற்சவங்களில் ஏழாம் திருநாள் சிகப்பு சார்த்தி அலங்காரத்தில் முன்புறம் முருகனாகவும் பின்புறம் நடராஜராகவும் அலங்கரித்து வரும் அழகினைக்காணலாம் !!!
கடற்கரைக்கு சூரனை சம்ஹரிக்க எழுந்தருளும் திருச்செந்தூர் ஜெயந்தி நாதர் நம் மும்மலங்களையும் வென்று அருளட்டும் என்று பிரார்த்திப்போம் !!!
– மோகன்தங்கசாமி
Leave a Reply