Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ராசிபுரம்-புதிய பஸ் நிலைய விவகாரம்திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் வட்டமிடப்பட்டுள்ளது. ஏரி இருக்கும் இடம் அம்புக்குறி இடப்பட்டுள்ளது.
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி
உற்பத்திக்கு பெயர் பெற்றது.
இங்குள்ள பேருந்து நிலையத்தில்
இருந்து அரசு மற்றும் தனியார் என
மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு
ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,
நகரத்தின் வளர்ச்சியைக்
கருத்தில் கொண்டு,
மையப்பகுதியில் உள்ள பேருந்து
நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து
8.50 கி.மீ. தொலைவில்
1200 பேர் மட்டுமே வசிக்கும்
அணைப்பாளையம் என்ற
குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல
நகராட்சி நிர்வாகம்
முடிவு செய்துள்ளது.

அணைப்பாளையத்தில்
புதிய பேருந்து நிலையம்
கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு,
பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது.
இந்நிலையில்தான், ரியல் எஸ்டேட்
அதிபர் ஒருவரின் ஆதாயத்திற்காகவே
ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம்
செய்யப்படுவதாக திமுகவுடன்
கூட்டணியில் உள்ள அனைத்துக்
கட்சிகளும் கலகக்குரல்
எழுப்பியுள்ளன.

நகரமன்றத்தின் முடிவுக்கு
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக,
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்
அதிமுக ஆகிய கட்சிகள்
ஒரே புள்ளியில் இணைந்து
எதிர்த்து வருகின்றன.

நிலம் தானமாகப் பெறப்பட்ட
விவகாரத்தின் பின்னணியில்
ரியல் எஸ்டேட் அதிபர்,
ஆளும்கட்சி எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு
மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வரை
பலருக்கு பெரிய அளவில் ஆதாயம்
இருப்பதாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும்,
பொதுமக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக நீடிக்கும்
இந்தப் போராட்டத்தால் நாமக்கல்
மாவட்ட நிர்வாகமும்,
ஆளுங்கட்சி பிரமுகர்களும்
கடுகடுப்பில் இருக்கிறார்கள்.

 ராசிபுரம்
பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின்
தலைவர் பாலசுப்ரமணியன் (அதிமுக),
ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாசு (மதிமுக)
ஆகியோரிடம் பேசினோம்.

“கடந்த ஜூலை 2ம் தேதி ராசிபுரம்
நகரமன்றத்தில், இடநெரிசலைக்
கருத்தில் கொண்டு வேறு ஒரு இடத்தில்
புதிய பேருந்து நிலையம் அமைக்கலாம்
என்று தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்த தீர்மானத்தில், எந்த இடம் என்று
பதிவு செய்யப்படவில்லை.
இதையடுத்து ஜூலை 5ம் தேதி,
அவசர அவசரமாக ஒரு
கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்திற்கு கூட்டணி கட்சிகள்,
எதிர்க்கட்சிகளை அழைக்கவில்லை.

ராசிபுரத்தில் இப்போதுள்ள பேருந்து நிலையம்
இந்தக் கூட்டத்தில் பேசிய
திமுக எம்.பி., ராஜேஷ்குமார்,
நகரமன்ற தலைவர் கவிதா சங்கர் ஆகியோர்,
பேருந்து நிலையம் அமைப்பதற்குத்
தேவையான அரசு புறம்போக்கு நிலம்
இல்லாததால் யாராவது நிலத்தை
தானமாக கொடுத்தால் நன்றாக
இருக்கும் என்றனர்.

கூட்டம் நடந்து கொண்டிருந்த அதேவேளையில்,
அணைப்பாளையத்தில் ரியல் எஸ்டேட்
நிலங்களை வாங்கி குவித்திருக்கும்
‘படையப்பா’ பாஸ்கர் என்பவர்,
தனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை
நகராட்சி ஆணையருக்கு தானம்
வழங்கியதாக கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த இடத்தில்தான், ஏன் அணைப்பாளையத்தில்
புதிய பேருந்து நிலையம் அமைப்பதில்
ஆளுங்கட்சி துடியாய் துடிக்கிறது
என்பதன் உள்குத்து விவகாரம்
வெளிச்சத்துக்கு வந்தது.

அதேநாளில், ஆர்டிஓ தரப்பில் எங்களை மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர். ஆனால், திமுக எம்.பி., ராஜேஷ்குமாரின் அழுத்தத்தின்பேரில் திடீரென்று அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது, எங்களுக்கு இந்த திட்டத்தின் மீது மேலும் பலத்த ஐயத்தைக் கிளப்பியது. இங்கு திமுக மா.செ., ராஜேஷ்குமார் எம்.பி.,யின் விரல் அசைவில்தான் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் செயல்படுகிறது.

இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே நகரமன்ற தலைவர் கவிதா சங்கர், படையப்பா நகர் பாஸ்கரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பாஸ்கரிடம் இருந்து நிலத்தை தானமாகப் பெறுவது தொடர்பாக ஜூன் மாதம் 26ம் தேதி நகராட்சி ஆணையருக்கு கவிதா சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

இதையெல்லாம் மறைத்து விட்டு, ஜூலை 2ம் தேதி நகரமன்ற கூட்டத்தில் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று பொத்தாம் பொதுவாகக் கூறியதன் மூலம், இந்த திட்டமே அந்த ரியல் எஸ்டேட் அதிபரின் ஆதாயத்திற்காகத்தான் என்ற எங்களின் ஐயத்தை ஊர்ஜிதம் செய்தது போல் ஆனது.

இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி, நிலம் தானம் பெறப்பட்டதற்கு ஒப்புதல் தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், 10.50 கோடி ரூபாயில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு மின்னணு ஏல அறிவிப்பும் வந்தது. மின்னணு ஏலத்திற்கு நகரமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை.

ராசிபுரத்தின் நுழைவு வாயிலாக உள்ள குறுக்கபுரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்காமல், இதற்கு சம்பந்தமே இல்லாத அணைப்பாளையம் ஊராட்சியை இத்துடன் இணைக்கும் வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவை எல்லாமே, அணைப்பாளையத்தில் வர உள்ள பேருந்து நிலையமும், அதன்மூலம் அங்கு உயரக்கூடிய ரியல் எஸ்டேட் நிலங்களின் மதிப்பையும் குறி வைத்துதான் மேற்கொள்ளப்படுகின்றன.

நிலம் தானம் பெறப்பட்ட இடத்தின் அருகிலேயே அணைப்பாளையம் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 290 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஏற்கனவே ஏரியை ஆக்கிரமித்துதான் ராசிபுரம் தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலையமும் அங்கு கட்டப்பட்டால் எதிர்காலத்தில் பெருத்த இயற்கை சீற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதேநேரம், குறுக்கபுரம், ஏடிசி டிப்போ பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் பேருந்து நிலையத்தை அமைக்கலாம். அணைப்பாளையத்தில் பேருந்து நிலையம் கொண்டு வந்தால் ராசிபுரத்தை மையப்படுத்திய வணிகமும், வளர்ச்சியும் நிச்சயம் பாதிக்கப்படும். சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராம மக்களுக்கும் ராசிபுரத்திற்கும் உள்ள தொடர்பும் அறுபட்டு விடும்.

அணைப்பாளையத்தில் ‘படையப்பா’ பாஸ்கருக்கு 85 ஏக்கர் ரியல் எட்டேட் நிலம் இருக்கு. இன்னும் சிலருக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. அவர்கள் பல ஆண்டுக்கு முன்பு ஏக்கர் 10 லட்சத்திற்கு வாங்கிப் போட்டுள்ளனர். பேருந்து நிலையம் குறித்த பேச்சுகள் எழுந்த நிலையில், அந்த நிலம் ஏக்கர் 6 கோடி ரூபாய் வரை மதிப்பு கூடியுள்ளது. இந்த லாபத்தைக் குறிவைத்தே பாஸ்கர் தனது நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அதாவது சின்ன மீனைப் போட்டு, திமிங்கிலத்தையே பிடிக்கப் பார்க்கிறார். அதற்கு ஆளுங்கட்சி எம்பி, அமைச்சர்கள், அதிகாரிகள் வரை உடந்தையாக இருக்கின்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு தூரத்து உறவினர் ஆகிறார். அவர் மூலமாக இந்த விவகாரத்தை காதும் காதும் வைத்ததுபோல் முடித்து விட்டனர். இதில், திமுக மா.செ., ராஜேஷ்குமார் எம்.பி., நகரமன்ற தலைவர், மாவட்ட ஆட்சியர் வரை பெரிய அளவில் நிலமும், பணமும் கைமாறியுள்ளது” என்கிறார்கள்.

ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் தினேஷின் சொந்த ஊர் ஆகும். ஆகையால், கொளுந்து விட்டு எரியும் ராசிபுரம் பேருந்து நிலையம் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு இதுவரை போகாமலா இருக்கும்? என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ‘படையப்பா’ பாஸ்கரிடம் விசாரித்தோம்.

“அணைப்பாளையத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு ராசிபுரம் நகராட்சி தரப்பில் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே 7 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தோம். இதுமட்டுமின்றி, சாலை வசதிக்காக 20 ஏக்கர் நிலமும் தருகிறோம்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போட்டிருந்தோம். அப்போது, அங்கு பேருந்து நிலையம் வரும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. எதற்காக இதை பிரச்னை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதில் துளியும் சம்பந்தமோ, நான் அவருக்கு உறவினரோ கிடையாது,” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார், பாஸ்கர்.

கவிதா சங்கர்
ராசிபுரம் நகரமன்றத் தலைவர் கவிதா சங்கரிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டிலேயே ராசிபுரம், மக்கள் அடர்த்தி உள்ள நகரம் ஆகும். சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆத்தூர், சேலம், நாமக்கல் நகரங்கள் எல்லாம் வளர்கின்றன. ஆனால் ராசிபுரம் மட்டும் ஒரு தீவு போல் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது.

குறுகலான சாலை, மக்கள் அடர்த்தி, வணிகத்திற்காக எல்லோரும் ஒரே இடத்தில் குவிவதால் மேலும் நெருக்கடி ஏற்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அணைப்பாளையத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்தோம்.

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த இடத்திலும் புறம்போக்கு நிலம் இல்லை. இந்த நிலையில்தான், ‘படையப்பா’ பாஸ்கர் நிலத்தை தானமாக வழங்கினார். ஒருவர் நிலத்தை தானமாக தருகிறார் என்றால் ஆதாயம் இல்லாமல் யார் சார் தருவார்? அதற்காக தானமாக வருவதை மறுக்க முடியாது. குறிப்பிட்ட நாலே நாலு பேர் உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர்,” என்றார்.

இதுகுறித்து கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி.,யிடம் விளக்கம் பெற்றோம்.

“அணைப்பாளையத்தில்
புதிய பேருந்து நிலையம் கட்டும்
திட்டத்தை முழுக்க முழுக்க
அரசியல் காரணத்தால் சிலர் எதிர்க்கின்றனர்.
ராசிபுரம் சுற்று வட்டாரத்தில்
பேருந்து நிலையத்திற்கு ஏற்ற வகையில்
7 ஏக்கர் புறம்போக்கு நிலம்
ஒரே இடத்தில் இல்லை.

அதனால் அணைப்பாளையத்தில்
ஒருவரிடம் நிலத்தை தானமாகப் பெற்று,
பேருந்து நிலையம் அமைப்பதற்கான
அடிப்படைப் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தை எதிர்க்கக்கூடிய சிலர்,
தற்போதுள்ள பேருந்து நிலையத்தைச்
சுற்றியுள்ள கடைக்காரர்களிடம்
பணம் வாங்கிக்கொண்டு போராட்டத்தை
தூண்டி விடுகின்றனர். இந்த விவகாரத்தில்,
முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன்.

பேருந்து நிலையம் அமைய உள்ள
இடத்தில் நீர்நிலைகள் இல்லை.
பேருந்து நிலையம் அமையும் இடத்தில்
என் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும்
எந்த சொத்தும் இல்லை.
தற்குறியாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்,”
என ராஜேஷ்குமார் எம்.பி.,
சற்று காட்டமாகவே கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் விளக்கம் பெற பலமுறை முயற்சித்தோம். அவருடைய உதவியாளர்தான் பேசினாரே தவிர கடைசி வரை ஆட்சியரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால் தனி நபர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு ஆதாயம் இருக்கிறதோ இல்லையோ; ஆனால் பேருந்து நிலையம் அமைய உள்ளதாகச் சுட்டப்படும் இடத்தின் அருகிலேயே மிகப்பெரிய ஏரியும், அதை நம்பி விவசாய நிலங்களும் உள்ளன. நீர்நிலை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாவது, இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

– சங்கர்ஜி