தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை தை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் தமிழக அரசின் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கும் நிலையில் மண்பானையையும் சேர்த்து அரசு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர், சாத்தமங்கலம், பரதூர்சாவடி, ஒரத்தூர், சித்தலூர், வடபாக்கம், வெய்யலூர், புவனகிரி, குமராட்சி அருகே உள்ள கீழப்பருத்திக்குடி, சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு, உடையார்குடி, பண்ருட்டி அருகே சிறுகிராமம், வையாபுரி பட்டினம், குயவன்மேடு, விருத்தாசலம் அருகே தர்மநல்லூர்,தேவன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 பேர் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரிடர் சீற்றம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது, இதனால் பாதிப்பேர் இந்த தொழிலை விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர், மழைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை நம்பியே பலர் குடும்பம் நடத்தி வரும் சூழலில் இந்த ஆண்டு முதல் பொங்கல் தொகுப்பில் மண் அடுப்பு, மண்பானை வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நலிந்து வரும் தொழில் என்பதால் தனது பிள்ளைகளை இந்த தொழிலில் யாரும் ஈடுபடுத்துவது கிடையாது, சொற்பமாக உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசு பொங்கல் தொகுப்புடன் மண்பானை, மண் அடுப்பு ஆகியவற்றை வழங்கி மண்பாண்ட கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பதுடன், தமிழர்களின் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதே மண்பாண்ட கலைஞர்களின் ஒரே கோரிக்கை .
– முருகன்
Leave a Reply