திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மைய்ய பகுதியில் வாரச்சந்தை மைதானம் அமைந்துள்ளது. இதற்கான சுமார் 7 ஏக்கர் 71 சென்ட் நிலத்தை வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மறைந்த நெய்வாசல் அப்துல் வஹாப், ஊசி அப்துல் கலீல், சோழவரம் முஹம்மத் இப்ராஹீம், காகிங்கிரே முஹம்மத் கவுஸ், ஊசி அப்துல் ஜலீல், ஏபா அப்துல் வாஹித், சி.அப்துல் முனாப், சி.அப்துல் காசிம் ஆகியோர் இணைந்து வாரச்சந்தை மற்றும் மாட்டுச்சந்தை அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில்
கடந்த 5 மார்ச் 1940 ஆம் ஆண்டு நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
இந்த இடத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை சந்தை கூடும். இதில் விவசாயிகள் ஆடு, மாடுகள், கோழி மற்றும் காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
கடந்த கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் போது விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை நேரடியாக மக்கள் மத்தியில் விற்பனை செய்ய தமிழக முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்க உத்தரவிட்டார்.
அப்போது வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தை, நகர்ப்புற சுகாதார நிலையம், மேல்நீர் தேகத்தொட்டி ஆகியவற்றை அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியின் போது நகராட்சி சார்பில் அம்மா உணவகம், காய்கறி வியாபாரிகளுக்கு 99 திறந்தவெளி கடைகள் அமைத்து கடை ஒன்றுக்கு நாள்தோறும் ரூபாய் 50 வாடகை நிர்ணயம் செய்து வசூலித்து வருகிறது.
இந்நிலையில் திறந்தவெளி கடைகளில் வியாபாரம் சரிவர இல்லையென்று பெரும்பாலான வியாபாரிகள் மீண்டும் சாலை ஓரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வாரச்சந்தை மைதானத்தில் உள்ள ஒரு பகுதியில்
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4.39 கோடி மதிப்பில் 112 கடைகள் கட்ட நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 21.5.2021 ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு முன்பு பணிகள் முடிவடைந்தது. நகராட்சி சார்பில் கடை ஒன்றுக்கு மாத வாடகை 1558 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினசரி மார்கெட் கட்டிட பணிகள் முடிந்து ஓராண்டு ஆகியும் திறப்பு விழா நடக்கவில்லை.
வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை, இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
நடைமுறையில் உள்ள திறந்தவெளி கடைகளுக்கு மேற்கூரை அமைத்து தந்து இருந்தாலே போதுமானது இருந்து இருக்கும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வீண்செலவு மிச்சமாயிருக்கும்.
எது எப்படியோ வாணியம்பாடி நகர மக்களின் நலனுக்காகவும், காய்கறி வியாபாரிகள் பயனடையும் வகையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதன் முறையாக வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை மைதானத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் மார்க்கெட் கட்டமைப்பை தமிழக முதல்வர் விரைவில் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளின் எதிர்பார்ப்பாகும்.
– திருமலை
