Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மட்டை தேங்காய் வைத்து வழிபாடு மணவாழ்க்கை தரும் திருமலையப்ப சுவாமி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் மாதனூர் சாலை குருவராஜ பாளையத்திலிருந்து செல்லும் எழில்சூழ்ந்த வனப்பகுதியில் மலைகளுக்கு மத்தியில் உள்ள திருமலையில் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்புவாக தோன்றியதும் தர்மகொண்ட ராஜா என்ற சித்தரால் பூஜித்து வழிபட்டதுமான பழமைவாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு எம்பெருமான் திருமலையப்ப சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு கன்னிப்பெண்கள் பெருமாளை மனதார நினைத்து ஈரத்துணியுடன் வந்து மூலவர்முன் பூஜை செய்து வைத்துள்ள மட்டத்தேங்காயை மடியில் கட்டிக்கொண்டு கோவிலை 7 முறை சுற்றிவந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து புதுவஸ்திரம் சாற்றி அன்னதானம் செய்கின்றனர். ஒருசிலர் அவரவர் வசதிக்கேற்ப செய்கின்றனர்.
மேலும் சுயம்பு பெருமாளுக்கு பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கோதானம் செய்கின்றனர். அந்த பசுக்களிலிருந்து கறக்கும்பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.  
சுயம்பு பெருமாளை வணங்குவோர்க்கு குழந்தை பேறு வாய்க்கும் அவ்வாறு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் துலாபாரத்தில் எடைக்கு எடை நாணயங்களோ பழங்களோ காணிக்கையாக செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். தோஷங்கள் நீங்கவும் பகைவர் பயமின்றி வாழ்வில் ஏற்றம் பெற பெருமாள் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். சிறந்த பிரார்த்தனை தலமாக திருமலை திருக்கோவில் விளங்குகிறது. பக்தர்கள் தங்களின் நிலத்தில் பயிரிடப்பட்ட தானியங்களின் முதல் அறுவடையினை திருமலையப்ப சுவாமிக்கு நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். இங்கு தலவிருட்சமாக தேவதாரி மரமும் தீர்த்தமாக வற்றாத புஷ்கர்னி தீர்த்தமாக உள்ளது.

சரும நோய் தீர்க்கும் தேவதாரி மரம் திருமலை திருக்கோவில் எதிரே உள்ள புஷ்கரனி தீர்த்த குளக்கரையில் உள்ள தேவதாரி மரத்தின்கீழ் விளக்கேற்றி அமர்ந்து திருமலையப்ப சுவாமியை மானசீகமாக பூஜித்து வருபவர்களுக்கு சரும நோய்களும் தீரும் என்பதும் இடுப்புவலி, சிறுநீரக கோளாறு, உடல்வெப்பம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகவும் இதனை மூலிகையின் முதல்வன் என்றும் அழைக்கின்றனர். தேவா என்றால் இறைவன் என்றும், தாரி என்றால் வழி என்றும் இறைவனை காண செல்லும்முன் நான்கு இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்கினால் போதும். நோய் நெருங்காது என்கின்றனர் பக்தர்கள்.

சயனகோலத்தில் மலையாக படுத்திருக்கும் பெருமாள் கோவில் புஷ்கரனி குளக்கரையின் மேற்குகரையில் இருந்து கிழக்கு முகமாக நின்று பார்த்தால் எதிரே உள்ள மலையில் பெருமாள் பிரமாண்டமாக சயன கோலத்தில் படுத்திருப்பதுபோலவும் அவரை மேகங்கள் தவழ்ந்து செல்வதையும் காணலாம். அதேபோல் மேற்கே உள்ள மலையில் லட்சுமிதேவி தாயார் சயன கோலத்தில் உள்ளதையும், நடுவே சுயம்புவாக பெருமாள் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கிய சித்தர் அணைக்கட்டு அருகே உள்ள குருவ ராஜாபாளையத்தைச் சேர்ந்த தர்மகொண்ட ராஜா என்ற சித்தர் வாழ்ந்து வந்தார். இவர் மனிதர்கள் மீதும் விலங்குகள் மீதும் பறவைகள் மீதும் அதிக அன்புகொண்டு தினந்தோறும் உணவு கொடுப்பதையும் செடிகொடிகளை வளர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அருள்பெற்றார். 1919ல் மதராஸ் மாகாணம் தலைமையிடமாக கொண்டு சித்தூர் ஜில்லா இருந்த காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மகாபுண்ணியவான் தர்மகொண்ட ராஜா எங்கு கைகாட்டி குளம் வெட்டினாலும் நன்னீர் கிடைப்பதாக சித்தூர் ஜில்லா கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலை லார்ட் துரையிடம் சித்தூர் ஜில்லா கலெக்டர் தெரிவித்தார். உடனே அவரை சென்னைக்கு வருமாறு கூறினார். உடனே புறப்பட்ட சித்தர் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே இடம்தான் உள்ளது என்று ஓர் இடம் காட்டினார். தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. அந்நாளில் சென்னை முழுதும் சப்ளை செய்யப்பட்ட இடம்தான் இப்போது ஏழு கிணறு என்று சென்னை வாசிகளால் அழைக்கப்படுகிறது. உடனே சந்தோஷத்தில் லார்ட் துரை சித்தரிடம் உங்களுக்கு என்னவேண்டும் கேளுங்கள் என்றார். அதற்கு சித்தர் எனக்கு பணம் எதுவும் வேண்டாம், எங்கு புறம்போக்கு இடம் இருக்கிறதோ அதை மட்டும் தாருங்கள் நான் மரம் செடிகளை வளர்த்து பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கிறேன் என்றார். பெருமாளுக்கு கோவில் கட்டவும் இடம் வேண்டும் என்றார். உடனே திருமலையில் 1.70 ஏக்கர் வனத்துறை இடத்தை அரசு புறம்போக்கு இடமாக மாற்றியும் கோவிலுக்குவர, பாலப்பாடியிலிருந்து திருமலைக்குப்பம் 30 அடி அகல வழி வன பாதையின் நடுவே திருமலைத் திருக்கோயில் அமைந்துள்ளது. அக்காலத்தில் வழங்கப்பட்ட இடமும் பராமரிப்பின்றி இருந்தது.

மனோகரன் சுவாமிகள் நடந்தவற்றை ஊர்மக்களிடமும், குருவராஜாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மணி அவர்களிடமும் எடுத்துச்சொல்லி பழைய அரசு பதிவேடுகளை ஆய்வு செய்தபோது வழியும், பெருமாளுக்கும் கோவிலுக்குமான இடமும் இருப்பது தெரியவந்தது. மனோகரன் சுவாமிகள் உடனே ஒரு குழு அமைத்து  வழியினை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு கொண்டுவந்தார். இதனை காண சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சனிக்கிழமை தோறும் சுயம்பு பெருமாளுக்கு இசை கச்சேரியுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெறுகிறது.

வேலூர் அணைக்கட்டு – மாதனூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் குருவராஜாபாளையம் நின்று செல்லும். அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதியுள்ளது.