Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஆறு தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ரோந்து டிஜிபி அறிவிப்பு பேராபத்து?

லைசென்ஸ் இல்லை, ஹெல்மெட் போடவில்லை, ஒன்வேயில் வந்ததற்காக, ட்ரிபிள்ஸ் போனதற்கு, ட்ரங்கன் ட்ரைவ் செய்ததற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக கடையைத் திறந்து வைத்ததற்காக, குடும்பத்தகராறு செய்ததற்கு இப்படியான சின்னஞ்சிறு விவகாரங்களில் அகப்படுவோரை மாபெரும் குற்றவாளிகளாகக் கையாண்டும்,

விசாரணை என்ற பெயரில், பொய் வழக்கை ஏற்கும்படி, விறுப்பு வெறுப்புகளின் பேரில் காவல் நிலையங்களிலும், சட்டவிரோத ரகசிய இடங்களிலும் பல்வேறு வகையான கொடூரச் சித்தரவதைகளைச் செய்து, வழுக்கி விழுந்தார்கள் என்ற பெயரில் கை கால்களை உடைத்தும், தூக்கிட்டு அல்லது மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற பெயரில் படுகொலைகள் செய்தும், தப்பித்து ஓட முயன்றார் தாக்கினார் வெட்டினார் அதனால் ஏற்பட்ட மோதல் மரணங்கள் என்கவ்ண்டர் என்ற பெயரில் போலி மோதல் படுகொலைகள் செய்தும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் காவல்துறையினர்.

இத்தகைய மனித உரிமை மீறல்களை சமூக ஆர்வலர்களிடமும், நக்சலைட்டுகள் மாவோயிஸ்ட்டுகளிடமும் மேலதிகமாகக் காட்டுகிறார்கள்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்யது முஹம்மது என்பவரை, ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது சுட்டுக்கொலை செய்த, உதவி ஆய்வாளர் காளிதாஸ் கைது.

திருச்சியில் பைக்கில் கணவருடன் சென்ற உஷா என்ற பெண்னை, ஹெல்மெட் போடாததால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிக் கொன்ற வழக்கில், காவல் ஆய்வாளர் காமராஜ் கைது.

தூத்துக்குடியில் செல்போன் கடையை மூடச்சொல்லி மூடாததால், காவல்நிலையம் அழைத்துச் சென்று ஜெயராஜ் என்பவரையும் அவரது  மகன் பென்னிக்சையும் கொடூரமாக அடித்துக் கொன்ற, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து பேர் கைது.

சேலம் மாவட்டம் ஏத்தாபூரில் முருகேசன் என்பவரை அடித்துக் கொலை செய்த, சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது.
இப்படியாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டோரின் பட்டியல் நீள்கிறது.

2019ல் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாகவே 53பேரும், காவலில் இருக்கும்போது 32பேரும் உயிரிழந்ததாக, தேசிய குற்றவியல் ஆவண அறிக்கை வெளிச்சப்படுத்துகிறது.

உயிரிழந்த 85பேரில் 33பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும், 36பேர் உடல்நலக்குறைவால் இறந்ததாகவும், 14பேர் விபத்து, கைதுக்கு முற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாகவும், 2பேர் மட்டுமே காவல் நிலைய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

2018ல் 1727பேரும், 2019ல் 1731பேரும் காவல் நிலையத்தில் மரணமடைந்துள்ளனர் என்று, தேசிய மனித உரிமை ஆணையம் அடையாளப்படுத்துகிறது.

பாராளுமன்றத்தில் இது குறித்து கேட்கப்பப்பட்ட கேள்விக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் 348பேர் காவல் நிலையத்தில் மரணித்ததாகவும், 1189பேர் சித்திரவதையால் மரணித்திருப்பதாகவும் பதிலளிக்கப்பட்டது. இதில் பல மரணங்கள், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அல்லது சரிகட்டி வெளிச்சத்திற்குக் கொண்டு வராமல், காவல்துறையினரால் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் செய்த கொலைகள் சிற்றவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகளில், அவர்களுக்கு நீதிமன்றங்களால் பெரும்பாலும் தண்டனைகள் வழங்கப்படாமல், விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

“மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் அதிக அளவு மனித உரிமை மீறல் குறித்த புகார்கள் வருகின்றன. மனித உரிமை ஆணையத்தில் பெறப்படும் புகார்களில், தொண்ணூறு சதவிகிதம் காவல்துறையினருக்கு எதிரானதாகவே உள்ளது” என, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைத் தலைவியாக இருந்த, மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
மீனாகுமாரி அம்பலப்படுத்தியுள்ளார்.

விசாரணை நடைமுறை மற்றும் அணுகுமுறைகளில், குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் (CRPC) பிரிவு 46,2,3,49 மற்றும் இந்தியக் குற்றவியல் சட்டம் (IPC) பிரிவு 99 உள்ளிட்ட எந்த சட்டப் பிரிவுகளையும், நீதிமன்ற தீர்ப்புகளை மனித உரிமை ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை, பெரும்பாலும் காவல்துறையினர் கிஞ்சிற்றும் பின்பற்றுவதும் மதிப்பதுமில்லை.

காவல்துறையினரின் கொடுங் குற்றங்களுக்கு மனித உரிமை மீறல்களுக்கிடையே,

2012ல் மருதுபாண்டி குரு பூஜை தினத்தின்போது ஏற்பட்ட மோதலில்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்டார்.

2020ல் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டார்.

தற்போது 2021ல் திருச்சி நவல்பட்டில் ஆடு திருடர்களால் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பத்து வயது சிறுவனும்  ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருப்பது, பெரும் அச்சமூட்டுகிறது.

காவல்துறையினரால் ஏற்கனவே அப்பாவிகளுக்கு ஆபத்து நிகழும் சூழலில், உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது வீட்டிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, “காவல்துறையினர் ரோந்துக்குச் செல்லும்போது, ஆறு தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கியை எடுத்துச்செல்ல வேண்டும்” என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் காவல்துறையினரின் கைகளில் தோட்டாக்களுடன் துப்பாக்கியைக் கொடுத்தால், அவர்களேக்கூட தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

சட்டத்தை கையிலேந்துவோர், ஆயுதத்தைக் கையிலேந்துவது பேராபத்தாகும். எனவே, டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் இந்த விபரீத முழக்கத்தை கைவிட வேண்டும்.

பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே ஆக்கப்பூர்வமான நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம், பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பாகவும், சமூக விரோதிகளிடமிருந்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிபடுத்தலாம்.


சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி