Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கனிமொழிக்கு எதிராக கீதாஜீவன் அறிவாலயத்தில் அனல் பறந்த பஞ்சாயத்து

கலைஞரின் வாரிசு கனிமொழி மீது திமுகவின் மூத்த மாவட்ட செயலாளர் பெரியசாமியின் வாரிசு அமைச்சர் கீதாஜீவன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் மனுவாக கொடுத்துள்ளது தூத்துக்குடி மாவட்ட அரசியலிலும், அறிவாலயத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட திமுகவை பொறுத்தவரை மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி தான் எல்லாமே என்ற நிலையே ஒருகாலத்தில் இருந்தது. சாகும்வரை மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி திமுகவில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். இதனால் “கலைஞரின் முரட்டு பக்தன்” என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது புகழை தன்வசபடுத்தி கொண்டு
தந்தையை போலவே தனது பொறுப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் தக்க வைத்துக் கொள்ள தனது ஆள் பலத்தாலும் , பண பலத்தாலும் மேற்கொண்ட முயற்சியின் போது தான் எம்.பி தேர்தலை முன் நிறுத்தி தூத்துக்குடிக்குள்ளே கனிமொழி நுழைந்தார். திமுக தலைமை கனிமொழியை தென் மாவட்ட கள நிலவரத்தை கட்டுப்படுத்த கழக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் என்பது விபரம் அறிந்த அரசியல் விமர்ச்சகர்களின் கருத்து. கனிமொழியும் இதை ஏற்றுக்கொண்டு இவரது பணியை சுயநலமின்றி பொறுப்புடன் செயல்படுத்தினார்.
கனிமொழியின் நேர்மையான செயல்பாடுகள் உள்ளூர் எம்.எல்.ஏ கீதாஜீவனுக்கு இடையூறாக தெரிய தொடங்கியது. கலைஞரின் வாரிசு,  தளபதியாரின் தங்கை என்ற அடையாளத்தை கனிமொழி ஒரு போதும் தொகுதிக்குள்ளும் , அரசியலுக்குள்ளும் ஒரு நாளும்  பயன்படுத்திக் கொள்வதில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டு  தனக்குரிய மக்கள் பணியை தினமும் செயல்படுத்தி கொள்ள தொகுதிக்குள் இறங்கினார். கனிமொழியின் செயல்பாடுகள் கீதாஜீவனின் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக பொறுத்துக் கொள்ள முடியாமல் கனிமொழிக்கு எதிராக, கீதாஜீவன் அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

*நேற்று வரை உடன் பிறவா சகோதரிகள் போன்று நகமும், சதையுமாக காட்சி அளித்து வந்த உறவில் திடீர் என ஏற்பட்ட விரிசலால் கனிமொழி மீது கட்சி தலைவரிடம்  கீதாஜீவன் நேரடியாக புகார் அளித்தார். கீதாஜீவனின் இந்த தனி மனித ஆளுமை தூத்துக்குடி அரசியலை திரும்பி பார்க்க வைத்தது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி., வேட்பாளராக களம் இறங்கியபோது, தேர்தல் பணிகளில் கீதாஜீவன் சரிவர ஈடுபடவில்லை என்று உடன்பிறப்புகள் எழுப்பிய  குற்றச்சாட்டை  உள்வாங்கி கொண்ட கனிமொழி , பாராளுமன்ற உறுப்பினர் ஆனவுடன் அனைத்தையும் மறந்து கட்சியின் வளர்ச்சிக்காகவும் , ஒற்றுமைக்காகவும்  கீதாஜீவனுடன் இணைந்து செயல்பட்டார். அதன்பின்னர் கனிமொழி, கீதாஜீவன் துணை இல்லாமல் தொகுதிக்குள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. பெரியசாமியின் வாரிசு அரசியலில் ஜெகனுக்கான அடையாளத்தை கனிமொழி வெளிக்கொண்டு வர முயற்சிப்பதால் கீதாஜீவனின் ஆளுமை முடக்கி வைக்கப்படும் என்ற கோணத்தில் தான் இந்த பகைமை வளரத் தொடங்கியதாக உடன்பிறப்புகள் சொல்லுகின்றனர்.

இந்நிலையில், கீதாஜீவனுக்கு தேவேந்திரகுல வேளாளர் தொடர்பான ஆடியோ சர்ச்சையில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியலில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியையும் அதன்பின் எழுந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய  போராட்டத்தில் கீதாஜீவன் ஆலைக்கு ஆதரவாக வெளிப்படையாகவே  செயல்படுகிறார் என்று பொதுமக்கள் மத்தியில் எழுந்த மிகப்பெரிய குற்றச்சாட்டையும் திமுக தலைமைக்கு  புகாராக தெரிவித்த போது கனிமொழியே கீதாஜீவனை கரம்பிடித்து பாதுகாத்தார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவோடு மறைமுகமாக கைகோர்த்து கொண்டு சொந்த கட்சியிலேயே பல்வேறு இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தாமல், ஒரு யூனியனை கூட கைப்பற்ற முடியாமல் திமுகவின் படுதோல்விக்கு பொறுப்பாளராக கீதாஜீவனே இருந்தபோதும்,

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது தலைமையில் இருந்து கொடுத்த பணத்தை மொத்தமாக கீதாஜீவன் கையாடல் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டை அப்போது தோல்வியடைந்த வேட்பாளரே தலைமைக்கு புகார் தெரிவித்தபோது, திமுக தலைமை இவரை அழைத்து சென்று  அறிவாலயத்தில் விசாரணை நடத்தியது.

“தலைமையிடம் கீதாஜீவன் மீது அனுசரணையாக பேசி காப்பாற்றி, அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கி கொடுத்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் வரை கை தூக்கி விட்டவர் கனிமொழி தான் என்கின்றனர்.

இந்நிலையில்தான் கனிமொழி மீது, அவர்களால் எந்தவித சிக்கலுக்கு உள்ளாகாமலும், கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமலும் தப்பித்து வந்த கீதாஜீவன் தற்போது தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த கனிமொழி மீதே தலைமையிடம் புகார் மனு அளித்திருப்பது தலைமையையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும், தமிழக அமைச்சரவையில் நான் தான் அசைக்க முடியாத  அமைச்சராகி விட்டேன் என்று கூறி வரும் பெண் அமைச்சர், ”கட்சி பணிகளில் மட்டுமல்லாது அரசு பணிகளிலும் கனிமொழி மேடம் ரொம்ப மூக்கை நுழைக்கிறாங்க. என்னாலே தனியாக செயல்படவே முடியவில்லை., மாவட்டத்தில் எல்லா விழாக்களிலும் ஒரு சாதாரண எம்.பி.யான கனிமொழி மேடம் தான் கவுரவிக்கப்படுகிறார், புகழப்படுகிறார். அமைச்சரான எனக்கு மரியாதையே இல்லை” என்னை ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கின்றனர் என்ற ரீதியில் அடுக்கடுக்காக, பக்கம் பக்கமாக எழுதப்பட்ட புகாரினை முதல்வருக்கும், கட்சியின் இளைஞரணி செயலாளருக்கும் கீதாஜீவன்  அனுப்பியுள்ளார்.

இதுநாள் வரை கனிமொழி எம்பியிடம் விசுவாசமாகவும், இரட்டை சகோதரிகளாக இருப்பது போல் இருந்து, அவர் மீதே முதல்வரிடம் புகார் மனு கொடுத்து இதன்மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்ற கீதாஜீவனின் எண்ணத்திற்கு மாறாக இந்த புகார் கடிதம் கனிமொழியின் கைகளுக்கே சென்றிருப்பது பெண் அமைச்சரின் அரசியல் வளர்ச்சிக்கு  மிகப்பெரிய பின்விளைவினை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியலுக்குள் எழுந்த மோதல் தலைமை வரை புகாராக மாறியதால், மாற்றம் ஏற்படும் என்று காத்திருந்த   கீதாஜீவனுக்கு, புகார் மனு கனிமொழி கைவசமே போனதால்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மூத்த திமுகவினர் என்ன சொல்லுகிறார்கள்?

 பெரியசாமி அண்ணாச்சி இருந்தபோது அவர் என்னதான் திட்டினாலும், பேசினாலும் கழக உடன்பிறப்புகளை எங்கேயும் விட்டுக்கொடுத்து பேசியதில்லை. ஆனால், கீதாஜீவனை முதல்வர் அவர்கள் ஒருமுறை நடந்த பொதுக்கூட்டத்தில் ”பெண் சிங்கம்” என்று குறிப்பிட்டதில் இருந்தே எங்களைப்போன்ற கட்சிக்காரர்களை அறவே மதிக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒருமையில் பேசுவதும், அவர் அமைச்சர் ஆகிய பின்பு எளிய தொண்டன் ஒருவனுக்கு கூட எவ்வித உதவியும் செய்ததில்லை. மாவட்ட கட்சியை ஓர் கார்ப்பரேட் கம்பெனியை போலவே நடத்தி வருகிறார். இதில் அவருக்கு வேண்டிய ஒரு சில நபர்களின் ஆளுமை கட்சிக்குள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் தான் சொல்பவர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீறி தாக்கல் செய்தவரை தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து மிரட்டியும் வருகிறார். மாநகராட்சி மேயர் தேர்தலில் ஒரு தலித் சமூகத்தை சார்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு தான் என்று சொல்லி கொண்டு மிகப்பெரிய அளவில் அவரிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் சொல்றாங்க, வழக்கறிஞரை மேயராக்கி கொண்டால், தேவேந்திர குல மக்களிடம் தன் மீது எழுந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து இந்த முடிவை உறுதிபடுத்திக் கொண்டார். ஆனால் இவரது இந்த ஒரு தலைபட்சமான முடிவுக்கு சாதி ரீதியிலான சலசலப்பு கட்சிக்குள் எழுந்துள்ளது. இந்த மோதல் பாலகுருசாமியா? பிரதீபா? எனவும் மாறிவிட்டது.

கனிமொழி எம்பியை அவர்களை கீதாஜீவனிடம் சொல்லாமல் நேரடியாக பார்த்தால் அவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதும், தன்னை மீறி அறிவாலயம் சென்று தலைவரையும், இளைஞரணி செயலாளரையும் பார்த்தால் அவர்களை ஓரம் கட்டுவதும் , இவரை தாண்டி கனிமொழியுடன் அரசியல் நடத்தி வருகின்ற இவரது தம்பி ஜெகனிடமும் , ஜெகன் ஆதரவாளர்களிடமும் நாங்க யாரும் எந்த தொடர்பும் வைக்க கூடாது என எங்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை அமைச்சர் கீதாஜீவன் செய்து கொண்டு இருக்கிறார் என்று கொதிக்கின்றனர்.

*தனது பகுதி மற்றும் வார்டு சார்ந்த பிரச்சனைகளை வெளிபடுத்தி கொள்ள கீதாஜீவனை சந்திக்க உடன்பிறப்புகள் செல்ல நேரிட்டால், இவரை சந்திப்பதற்கு முன் நான்கு  டோல்கேட்டை தாண்டினால் தான் கீதாஜீவனை சந்திக்க முடிகிறது. கீதாஜீவனின் உதவியாளர் என்ற போர்வையில் மணி , கவுன்சிலர்செந்தில் , கருணா போன்றோரின் அதிரடி வசூலும் , அடாவடித்தன அரசியலும் தொண்டர்களை களங்கபடுத்துகிறது. திமுகவை அசிங்கபடுத்துகிறது.*

இதுபோன்ற செயல்பாடுகளால்  கட்சியினை அழிவுப்பாதையில் அழைத்து சென்று கொண்டு இருக்கிறார். இதை பல முறை தலைமைக்கு மறைமுகமாகவும் , வெளிப்படையாகவும் கட்சிக்காரர்கள் தெரிவித்த போதிலும் தலைமை இதை கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி திமுகவிற்குள் கனிமொழி குரூப் , கீதாஜீவன் குரூப் என இரண்டாக செயல்படக் கூடிய அபாயநிலை ஏற்படும் என்று தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர்.

– மா.அருண்