தன்னைத்தானே அவமரியாதை செய்துகொள்வதில் திமுகவை மிஞ்ச ஆளே கிடையாது போல… அதற்கு உதாரணமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளிக்கு சிறந்த பேரூர் கழக செயலாளர் சிறந்த பேரூராட்சி தலைவர் விருது ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பு மற்றும் சான்றிதழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, பொன்முடி, துரைமுருகன், உள்ளிட்டோர் முன்னிலையில் வழங்கி இருக்கின்றனர்.
பாலக்கோடு பேரூர் கழகத்தில் இவருடைய பணிகள் என்ன? பேரூராட்சி தலைவராக பி.கே.முரளி ஆற்றிய பணிகள் என்ன விசாரித்திருக்க வேண்டாமா? திமுகவினரின் அழைப்பை ஏற்று பாலக்கோட்டில் ஆஜரானோம் வலம் வந்தோம் கிடைத்த தகவல்கள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியதே.
பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, துணைத் தலைவர் தகாஷினா இதாயத்துல்லா இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள், மொத்தம் பதினெட்டு கவுன்சிலர்கள் அதில் பதினைந்து பேர் திமுகவினர் ஒருவர் சுயேட்சை, இரண்டு பேர் அதிமுகவினர் மூன்று வருடங்கள் ஆகிறது புதிய நிர்வாகம் பொறுப்பேற்று, மாதம் ஒருமுறை மன்றக்கூட்டம் நடக்கும் பொருள் செலவினம் தெளிவில்லாமல் இருக்கும் கவுன்சிலர்கள் யாராவது எழுந்து அதுகுறித்து கேள்வி எழுப்பினால் அதெல்லாம் கேட்ககூடாது எனக்கு மெஜாரிட்டி இருக்கு பாஸ் பண்ணிகிட்டு போய்கிட்டே இருப்பேன் போய்யா… என்று தலைவர் பி.கே.முரளி பெரிய சவுண்டு விடுவார் அவ்வளவுதான் இருபது நிமிஷம் மன்றக்கூட்டம் நடக்கும் விவாதமெல்லாம் கிடையாது தீர்மானங்கள் வாசிக்கப்படாமலேயே ஆல் பாஸ் ஆகும். டார்த்தி என்கிற செயல் அலுவலர் இருந்தபோது பல கோடி முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வழக்கம்போல ஓய்வுபெறும் நாளுக்கு முந்தின நாள் டார்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒன்றரை கோடி ரூபாயை கொண்டு வந்து கட்டிவிட்டார் மீதி பணத்தை உள்ளாட்சி துறை எதிர்பார்க்குது. இவ்வளவு பெரிய முறைகேட்டை செயல் அலுவலர் டார்த்தி மட்டுமேவா பண்ணிட்டார்? அதில தலைவருக்கு பங்கில்லையா? என்று தமிழ் கூறும் நல்லுலகில் கேள்வி கேட்காதவர்களே கிடையாது ஆனால் இதற்கு எந்த திசையில் இருந்தும் இன்றுவரை பதில் இல்லை. தொழில்வரி, தண்ணி வரி, வீட்டு வரி, பஸ் நிலைய கடைகள், தக்காளி மார்க்கெட், சந்தை கேட், இப்படி பேரூராட்சி வருமானத்திற்கு பஞ்சமில்லை. அனைத்தும் பொய் கணக்கில், போலி பில்லில் கரைந்து போனது என்பது அதிர்ச்சியான உண்மை இதுபோக, ஆக்கிரமிப்பு கடைகள் நடைபாதை கடைகள் எல்லாம் தலைவர் பி.கே.முரளி நேரிடையாக டீல் பண்ணிக்குவாராம். மூன்று வருடத்திற்கு ஒருமுறை பேரூராட்சி கடைகள் வாடகையை உயர்த்த வேண்டும் அவர்களை கூப்பிட்டு பேசி கை குலுக்கி விட்டு, பேரூராட்சிக்கு வருமானம் வராமல் பார்த்துக்கொள்கிறார் என்கின்றனர். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினால்… தலைவரோட மனைவி பிரேமா ஒரு கவுன்சிலர் பத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் கவுன்சிலர்கள் அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பி.கே.முரளியின் சொந்தபந்தங்கள்… யாரும் வாயை திறப்பதில்லை இது முக்கியமான காரணம் என்று நம் காதில் கிசுகிசுத்தார் பேரூராட்சி ஊழியர் ஒருவர்.
பாலக்கோடு பஸ் நிலையத்தை ஒருமுறைக்கு இருமுறை சுற்றிவந்தோம் பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாத குப்பை கிடங்குபோல இருக்கிறது. பேரூராட்சி கூட்டத்தில செலவினங்களை படித்துக்காட்டச் சொன்னா முடியாதுன்னு கூச்சப்படாம சொல்றார் பி.கே.முரளி ஒருமுறை செலவு தொகையை படிச்சாங்க, என்ன செலவுனு படிக்கமாட்டேங்கறாங்க தொடர்ந்து மன்றத்தில கேள்வி கேட்டால் கவுன்சிலர்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார். கவுன்சிலர் பதேகான்.., நடந்த தவறுகளை மாவட்ட கலெக்டர்ல ஆரம்பிச்சி துறை இயக்குநர், அமைச்சர் கே.என்.நேருவரை புகார் பண்ணிட்டோம் அதிகாரிங்க வந்தாங்க. உதவி இயக்குநர் கணேசன் தலைமையில் வந்தவர்கள் பி.கே.முரளியை விசாரணைக்கு கூப்பிட, நான் வரமாட்டேன் என்னை விசாரிக்க உங்களுக்கு அதிகாரமில்லைனு சொல்லிட்டார் விசாரணைக்கு ஒத்துழைக்கல, செயல் அலுவலர் இந்துமதியை மட்டும் விசாரிச்சிட்டு போனாங்க, செல் ஆபீசர் வெங்கடேசன் தலைமையில் வந்த அதிகாரிங்க பேரூராட்சி வரவு செலவு கணக்குகளை பார்த்துட்டு சரமாரியா ஊழல் நடந்திருக்குனு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்திடம் சொல்லிட்டு போயிட்டாங்க. அப்ப நான் மட்டுமில்ல நாலஞ்சி கவுன்சிலர்களும் இருந்தோம் என்கிறார் தன் தரப்பில்!
பேரூராட்சி துணைத் தலைவர் தகாஷினாவின் கணவர் இதாயத்துல்லா… மன்றக்கூட்டத்தில் தொடர்ந்து கேள்வி கேட்டதால துணைத் தலைவர் பதவியில் இருந்து என் மனைவியை நீக்க தீரமானம் வச்சி கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கிட்டார். கேட்டா ஜமாத்தில பேசிட்டேன் இன்னொருத்தருக்கு வாய்ப்பு தரணும்னு சொல்றார் ஜமாத்ல கேட்டா இல்லைனு சொல்றாங்க தலைவர் தேவையில்லாத குழப்பதை உண்டு பண்றார் என்கிறார் சோகமாக…
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பனிடம் பஞ்சாயத்து போக, பி.கே.முரளி ஓடிப்போய் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் காலில் விழுகிறார், பீஸ் கமிட்டி மீட்டிங் வச்சா அதையும் மதிக்கறதில்லை. தனக்குபின்னால் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இருப்பதாக காட்டிக்கொண்டு இதுவரை செய்த தவறுகளில் இருந்து தப்பித்து வருகிறார். தருமபுரி மாவட்டத்திலுள்ள பத்து பேரூராட்சிகளில் பி.கே.முரளி மட்டும்தான் வன்னியர் அதனால் தலைவரின் தவறுகள் அமைச்சருக்கு பெரியதாய் தெரியவில்லை போல என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பாஜக பிரமுகர் ஒருவர். பி.கே.முரளியின் முழுநேர உதவியாளர் பாமகவை சேர்ந்த ராஜவேலு என்பவர்தான். இவரில்லாமல் எந்தவேலையும் தலைவர் செய்வதில்லை. பாமகவினரோடு நெருக்கம் காட்டும் பி.கே.முரளி திமுகவினரோடு நெருக்கம் பாராட்டுவதில்லை. மாற்று கட்சியிலிருந்து வன்னியர்கள் திமுகவுக்கு வந்தால் தடுத்து விடுகிறார் எங்கே தனக்கு எதிராக வந்துவிடுவார்களோ என்று… ஆயிரம்பேரோடு வர தயாரான அதிமுக கோவிந்தசாமி அப்படித்தான் தடுக்கப்பட்டார் எந்த தொழிலும் இல்ல… இவருக்கு எப்படி கோடிகளில் சொத்து… எர்ணஹள்ளி பஞ்சாயத்தி பட்டா புறம்போக்கு உட்படநிலங்கள், கிரீன்லேண்ட் தியேட்டர் பக்கத்தில இடம் இதெல்லாம் எப்படி? லேட்டஸ்ட் நிலவரப்படி ஜெர்த்தலாங் பஞ்சாயத்தை பாலக்கோடு பேரூராட்சியோட சேர்த்துட்டாங்க பி.கே.முரளியின் ஆட்டம் இனிமே குறையலாம் ஆனா டெண்டர் விடாம தனிப்பட்ட முறையில டீல் பண்ற விஷயம் இருக்கே… வேலை செஞ்ச மாதிரி செய்யாமலே பில் வச்ச கதை இருக்கே இதெல்லாம் திமுகவிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.
– ஆலவாயர்
முறைகேடுகளில் மூழ்கி தவிக்கும்பாலக்கோடு பேரூராட்சி?
