திருமண வயது குறித்து, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசு, 1891ல் சட்ட முன்வரைவை உறுவாக்கியது. ஆணுக்கு 18 வயதும் பெண்ணுக்கு 12 வயதும் நிறைவடைந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, சட்ட முன்வரைவில் அறிவிக்கப்பட்டது. இதை திலகர் உள்ளிட்ட பலரும் எதிர்த்தனர். மதம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையிடவேண்டாம் என்று பிரிட்டிஷ் தலைமையும் கண்டித்ததால், அதை இந்தியாவை நிர்வகித்த பிரிட்டிஷ் அரசு கைவிட்டது.
திருமண வயதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் 1913ல் மீண்டும் நடந்தது. ஆச்சார்யா உள்ளிவர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
ஆணுக்கு 18 வயதும் பெண்ணுக்கு 14 வயதும் நிறைந்திருக்க வேண்டும் என்ற சட்ட முன்வரைவை தாக்கல் செய்து, எதிர்ப்புகளுக்கிடையில் 1929ல் சட்டமாக்கப்பட்டது.
முந்தைய சட்டத்தை 1978ல் திருத்தம் செய்து, ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றாக்கப்பட்டது.
உலக நாடுகளில் குறிப்பாக பிலிப்பைன்ஸ் 12, ஜப்பான், நைஜர் 13, சீனா, பங்களாதேஷ், மியான்மர், ஜெர்மனி, இத்தாலி, பிரேசில் 14, ஸ்வீடன், தாய்லாந்த் 15, ரஷ்யா, இங்கிலாந்த், ஸ்விசர்லாந்த், மலேசியா, இலங்கை 16, அயர்லாந்த், மெக்சிகோ 17, பூடான், சோமாலியா 18, தென்கொரியா 20, பஹ்ரைன் 21 வயதும் திருமணத்திற்கான வயதாக நிர்ணயித்துள்ளது.
கரீபிய தீவு நாடான ட்ரினிடாட் டொபாகோவில் ஆண்கள் மற்றும் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆக உள்ளது. இங்கு இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனி திருமண சட்டம் அமலில் உள்ளது. அதன்படி இஸ்லாமிய பெண்கள் 12 வயதிலும், ஆண்கள் 16 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதே போல இந்து ஆண்கள் 18 வயதிலும், பெண்கள் 14 வயதிலும் திருமணம் செய்து கொள்ள அங்கே அனுமதிக்கப்படுகிறது.
அமெரிக்க நாடு முழுவதும் திருமணச் சட்டம் ஒற்றை முறையில் இல்லாமல், பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதமாக உள்ளது. திருமண வயதை சில மாகாணங்களில் குறைவாகவும், சில மாகாணங்களில் அதிகமாகவும் நிர்ணயித்துள்ளனர். பெரும்பாலும் 16 வயதை சட்டமாக்கியிருக்கின்றது. massachusetts மாகாணத்தில், 12 வயதுடைய பெண்களும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது.
சட்டங்களில் குறிப்பிடப்பட்ட வயதிற்கும் குறைவான வயதில் திருமணம் செய்யும் நிகழ்வுகள், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது.
1883ல் தனது 13வது வயதில் 13 வயதான கஸ்தூரி பாயை மஹாத்மா காந்தியும், 1897ல் தனது 14வது வயதில் 7 வயது செல்லம்மாவை மஹாகவி பாரதியாரும், 1898ல் தனது 19வது வயதில் 13 வயது நாகம்மாவை பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரும், 1906ல் தனது 15வது வயதில் 09 வயது ராமா பாயை சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரும் திருமணம் செய்தார்கள்.
இயேசுவின் தாய் மரியாள் திருமணம் சிறு வயதில் நடந்தது.12 முதல் 14 வயதுடைய மரியாவை, 90 வயதுடைய ஜோசப் திருமணம் செய்தார். (The Catholic Encyclopedia: An International Reference of Work on the Constitution, Doctrine, Discipline, and History of the Catholic Church, vol 8. (New York: Robert Appleton Company), 505.
1400 ஆண்டுகளுக்கு முன்பாக
முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தமது 50வது வயதைக் கடந்த நிலையில், ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா என்பவரின் 6வது வயதில் திருமணம் செய்து 9வது வயதில் அவரை இல்லற வாழ்க்கைக்கு அழைத்துக்கொண்டார்.
சட்டங்களில் குறிப்பிடப்பட்ட வயதிற்கும் குறைவான வயதில் திருமணம் செய்யும் நிகழ்வுகள், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது.
இந்நிலையில்,
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் அடங்கிய பத்து பேர் கொண்ட குழுவை, ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைத்தது.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதன் மூலம் தாய் சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றும், பிரசவ இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அக்குழு அரசுக்கு பரிந்துரைத்தது. திருமண வயதை உயர்த்துவதன்மூலம் பெண்களின் சுய பொருளாதார, சமூகப் பங்களிப்பு மேம்படும் என்றும், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்பட திருமணச் சட்டங்கள் அனைத்திலும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதனை ஏற்ற மத்திய அரசு, தற்போது சட்டமாக இயற்றியிருக்கிறது.
18 வயது என்பது படிக்கவேண்டிய வயது. இந்தப் பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பக்குவமடையாதவர்களாகவே இருப்பார்கள் என்றும், இன்று நிறைய பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாகவே நடக்கின்றன என்றும், அதைத்தாங்கும் அளவுக்கு இளம் வயதில் பெண்களின் உடல்நிலை இருப்பதில்லை என்றும்,21 வயதில் திருமணம் செய்யும்போது பெண்கள் பட்டப்படிப்பை முடித்து அதன்மூலம் தன்னம்பிக்கை கிடைத்து உலகத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய முதிர்ச்சியும் ஏற்படும் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி என்றால், உலகின் பல வளர்ந்த நாடுகளில் இளம் வயது திருமணங்கள் நடப்பதில் அவர்களுக்கு எத்தகைய முதிர்ச்சியும் குறிப்பாக உடல் தகுதியும் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகளே என்கிறது இந்தியச் சட்டம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தகுதியைப் பெறுகிறார்கள் என்பது, உலகளாவிய பார்வை.
இரு பாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் ஏதுவும் இல்லை.
தற்போது காதல் திருமணங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் முடிவே இறுதியாக இருக்கிறது. தற்போது திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சூழலில் அதற்குட்பட்ட காலங்களில் காதல் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். இது பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சுயமாகத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் என்றும் குரல்கள் எழும்புகின்றது.
ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால் சமத்துவம் ஏற்படும் என்றும், கல்வியைக் கைவிட்டு நடத்தப்படும் சிறு வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அரசின் முடிவுக்கு ஆதரவாகக் குரல்கள் ஒலிக்கின்றது.
மதம் மாறிய திருமணங்களை தடுக்கவும், சாதி மறுப்புத் திருமணங்களை தடுக்கவும் இதில் உள்நோக்கம் உண்டு.
முஸ்லிம்களின் திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 16 என இருக்கிறது. தற்போது திருமண வயதை 21 என மத்திய கொண்டுவந்த சட்டத்தின் மூலம், முஸ்லிம்களையும் குறிவைக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை குறைப்பதற்கான, இந்துத்துவ நோக்கமும் இதில் உள்ளது.
18 வயது நிரம்பாத போதிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை, புதிய சட்டத்தை இயற்றும்போது மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
2006ல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடை சட்டத்தில், 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு திருமணம் நடந்தால் அத்திருமணம் செல்லாது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் 15 வயதுக்கு உட்பட்டவருடன் உடல் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2019ல் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக இருக்கும். உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகளில் பாதிக்கும் மேலானோர், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள். குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாக கூறுகிறது யுனிசெஃப். இதைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் தடுக்கவும் இதுவரை தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வரும் நாடாக விளங்குகிறது நைகர். இங்கு 18 வயதுக்கு முன்பாகவே 76% பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்கள் 28% பேர் திருமணம் செய்துகொள்கின்றனர். அங்கு உள்ள பொருளாதார மற்றும் குழப்பமான சூழல்களால் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகிறது.
குழந்தைகள் இறப்பு விகிதம்
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த ஒரு வயதுக்கு உட்பட்ட 1,000 குழந்தைகளில் 35 பேர் இறந்துள்ளனர், 2015-16 இல் 1,000 பிரசவத்தில், 41 குழந்தை இறப்புகள் என்பதை விட 15% குறைவு. இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் உத்தரப் பிரதேசத்தில் 1,000 பிறப்புகளுக்கு 50 குழந்தை இறக்கின்றன. பீகாரில் 47, சத்தீஸ்கரில் 44, மத்தியப் பிரதேசத்தில் 41 ஆக உள்ளது.
மத்திய அரசுக்கு சமர்ப்பித்த பரிந்துரையில் ஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான வயது குறைந்தபட்சம் 21ஆக இருப்பது உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என குழு பரிந்துரைத்தது. மேலும், பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்படி மருத்துவ ரீதியான காரணங்களைக் காட்டுவது, பித்தலாட்டத்தனம்.
இந்தியாவில் 50 சதவீத கர்ப்பிணி பெண்கள் ஏன் ரத்தசோகையுடன் உள்ளனர். அதனை ஏன் சரிசெய்யவில்லை. பேறுகால இறப்புகளை ஏன் தடுக்கவில்லை. பிரசவத்தின் போதும், அதற்கு பின்னும் ஏற்படும் ரத்தப்போக்கினாலேயே பெண்கள் இறக்கின்றனர். 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களிடையே ரத்தசோகையை சரிசெய்யாமல், 21 வயதில் மட்டும் எதைக்கொண்டு வலிமையேற்றுவார்கள்.
இளம்வயது பெண்களிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை பிரச்சினைகளைத் தீர்க்க சமூக நல திட்டங்களையும் உணவு பாதுகாப்பையும் நோக்கி நகர்வதே தீர்வாக இருக்கும்.
பெண் குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பையும் புரதச்சத்து சரியான விகிதத்தில் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிப்படிப்பு மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் மாநில அரசுகள் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். காலை மாலை உணவுகளுடன் சுண்டல் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளையும் வழங்க வேண்டும். உயர்கல்வி வரை படிப்பு இலவசம் என்பதை செயல்படுத்த வேண்டும்.
இந்தியாவில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஏழ்மை நிலையில் வாழ்கின்றனர். பொருளாதார சமச்சீரற்ற இந்த நாட்டில், சட்டம் இயற்றும்போது இவற்றை கவனத்தில் கொண்டார்களா என்பதும் கேள்வியாக உள்ளது.
இந்த அறிவிப்பு பல்வேறு மோசமான விளைவுகளை உருவாக்கும். ஏழை, எளிய மக்கள், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் தங்களின் பெண் பிள்ளைகளுக்கு, இளம் வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என முயற்சிப்பார்கள். இத்தகையவர்களை புதிய திருமண வயது சட்டம், வேறுவழியே இல்லாமல் கட்டாயக் குற்றவாளிகளாக மாற்றும்.
பாலியல் வல்லுறவு, தகாத உறவு, கருகலைப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும், போக்சோ உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளும் தற்போது நடப்பதைவிட மிக அதிகமாக பெருகிட வழிவகுக்கும்.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது, பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமை மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே இருக்கும். இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்கு அளித்துள்ள தனிப்பட்ட உரிமையையும் இது பறித்துவிடும்.
இளம் வயதுத் திருமணங்களை ஆதரிப்பது ஏற்கத்தக்கதல்ல. அதேவேளையில், முற்றாகத் தடுப்பதென்பது சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளம் வயதிலும் திருமணம் செய்வதற்கான வாயப்புக்களை வழங்கும் விதத்தில்தான் சட்டங்கள் இயற்ற வேண்டும். சட்டங்களை பாதுகாப்பு வழங்கும் விதத்தில்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய, விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கும் விதமாக பாதுகாப்பைப் பறிக்கும் விதமாக அழிக்கும் விதமாக ஏற்படுத்தல் கூடாது.
எனவே, பெண்களின் திருமண வயது 21 என்ற சட்டம் தேவையற்றது. இந்த சட்டம் இளம் பெண்களைப் பாதுகாப்பதைவிட, எல்லா வகையிலும் கேடுகளைதான் விளைவிக்கும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, இச்சட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
Leave a Reply