Save 20% off! Join our newsletter and get 20% off right away!

செங்கல்பட்டு-மகளிரணி பதவிகளை வழங்குவதில் இழுபறி…2026 தேர்தலில் கட்சி என்ன கதியாகும்?தொண்டர்கள் விரக்தி… குழப்பம்….

செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவில், மகளிர் அணி செயலாளர் பதவிகளை வழங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், வரு் 206 தேர்தலில கட்சியின் நிலை என்னவாகும் என தொண்டர்கள் விரக்தியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக சார்பில், கட்சி ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாக செயல்படுகிறது. கிழக்கு மாவட்ட செயலாளராக திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்த மரகதம் குமரவேல், வட மாவட்டத்தின் ஒரே எம்எல்ஏ என கூறி, தனக்கு மாநில பதவி வழங்க வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தினார். இதையொட்டி அவருக்கு, மாநில மகளிர் அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாவட்ட மகளிர் அணிக்கு யாரை நியமித்தாலும், தனது அதிகாரம் குறைந்துவிடும் என கருதி அவர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்காமல் அந்த பதவிக்கு யாரை பரிந்துரை செய்தாலும், அதற்கு தடை ஏற்படுத்தி வருகிறார்.

அதே நேரத்தில், மேற்கு மாவட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்த கங்காதேவி, கடந்த உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவில் வாய்ப்பு வழங்காததால் பாஜகவுக்கு தாவினார். இதனால் அவரிடம் இருந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய கங்காதேவி, மீண்டும் தாய் கட்சியில் இணைந்தார்.

இந்த மாவட்டத்தில் 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய கணிதா சம்பத் மாநில மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ளார். இங்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிக்கு சரியான நபர் கிடைக்காததால், ஆள் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கண்ட 2 மாவட்டத்திலும், மகளிர் அணி செயலாளர் இல்லாததால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகளிர் அணி சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் பின்னடைவு ஏற்படும் நிலை உள்ளது என கட்சி தொண்டர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாவட்டத்தில் தனித்து செயல்படும் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், மாமல்லபுரம் நகரமன்ற தலைவரும் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளருமான வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிக்கு தகுதியானவர்கள் என அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும், மகளிர் அணி செயலாளரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த 2 பெண் நிர்வாகிகளை தவிர்த்து, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஆர்த்தி தண்டபாணி, தனக்கு மகளிர் அணி செயலாளர் பதவி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை நிர்ப்பந்தித்து வருவதாக பேசப்படுகிறது.

தற்போது ஆட்சியில் உள்ள திமுக, பெண்களுக்கு மகளின் உரிமை ரூ.1000 வழங்கும் திட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. இதனால், பெண்களின் வாக்கு சதவீதம், திமுகவுக்கு அதிகரித்துள்ள அதிமுகவினர் சிலர் கூறி புலம்புகிறார்கள். மாநிலத்தில், மிகப்பெரிய கட்சியாக கருதப்படும் அதிமுகவில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிக்கு யாருமே இல்லை என வெளிப்படையாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுவது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– ஆதாம் ஏவாள்