Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பென்னாகரம் அரசு மருத்துவமனை அவல நிலையை களையப்போவது யார்? – எதிர்பார்க்கும் ஏரியூர் மக்கள்

பாமக தலைவர் ஜி.கே.மணியை சட்டமன்ற உறுப்பினராக்கிய பென்னாகரம் தொகுதியில் உள்ள ஏரியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய அவலங்கள் தருமபுரி மாவட்டம் முழுவதையும் அலங்கரிக்குது ஆனால் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பார்வைக்கு போகவில்லை போல ! பெரியூர், பிக்கிலி, பாப்பாரப்பட்டி, நாகதாசம்பட்டி, ஒகேனக்கல், கடமடை, பெரும்பாலை, செல்லமுடி உள்ளிட்ட எட்டு மருத்துவமனைகளுக்கு தலைமை மருத்துவமனையாக செயல்படுது ஏரியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இது இருபத்தி நான்கு மணிநேர மருத்துவமனை. ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களும் மேற்படி மருத்துவனையை நம்பி இருக்கின்றனர். ஏழு ஸ்டாப் நர்ஸ் இருக்கனும் ஆனால் அஜந்தா, அகிலா, முனியம்மாள் என்று மூவர் மட்டுமே இருக்கின்றனர் இதில முனியம்மாள் கொஞ்சம் கோபக்காரர் போல, தன்னுடைய கணவர் பாமக ஒன்றிய செயலாளரோடு தொழில் பார்ட்னர் என்பதால், கொஞ்சம் கூடுதல் தைரியம் அதனால மருத்துவமனை தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டிக்கொண்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை மதிப்பதில்லை. தன்னுடன் பணியாற்றும் மற்ற செவிலியர்களை தரக்குறைவாக பேசி ஓடவிடுகிறார். முனியம்மாள் நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில பதினைந்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஏரியூரில் இருந்து பணிமாறுதல் பெற்று சென்றுள்ளனர். அரசு மருத்துவமனை மருந்து மாத்திரைகள் தனியார் மருத்துவமனையில் கிடைக்கிறதே எப்படி என்று கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஏழு மருத்துவர்கள் இருக்கனும், ஆனா முனுசாமி, ராதாகிருஷ்ணன், கார்த்தி என்று மூன்று பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில கார்த்தி ஊருக்கு நடுவுல பெரிய மருத்துவமனை நடத்தி வருகிறார். எப்பொழுதும் தன்னுடைய மருத்துவமனையை கவனிப்பவர், அரசு மருத்துவமனையில் இருந்து செவிலியர்கள் சொன்னால் மட்டும் வந்துபோவார். அரசு மருத்துவமனை அவலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர டி.டி.சவுண்டம்மாள் வந்து ஏகத்துக்கும் சவுண்டு விட்டுவிட்டு போயிருக்கிறார். ஏரியூரில் உள்ள பெரும்பான்மையான மருந்து கடைகள் மினி மருத்துவமனைகளாக செயல்படுது என்பது கூடுதல் தகவல்! அங்கே வேலை பார்ப்பவர்கள் மருத்துவர்களாக செயல்படுகிறார்கள் என்கிற அதிர்ச்சிகரமான செய்தியும் உண்டு. லேட்டஸ்ட் நிலவரப்படி, ஏரியூரில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கின்றனர் அரசு மருத்துவமனை தரப்பில்.

அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையை சுகாதாரத்துறை உயரதிகாரிகள் கவனிக்க கூடாதா? அவலங்களை களையக்கூடாதா? தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பார்வைக்கும் சுகாதார துறை மந்திரி ம.சுப்பிரமணியன் கவனத்திற்கும் வைக்கிறோம் ஏரியூர் மக்களோடு நாமும் காத்துக் கொண்டு இருக்கிறோம் ஆவலாய்!

– துலாம் ராசிக்காரன்