இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அற்புதமான படைப்புகளை உருவாக்கி ரசிகர்களின் ரசனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது தமிழ் சினிமா. ஆனால் சமீபகாலமாக குறிப்பாக பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதே தருணத்தில் பாஜகவின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு பெற்ற திரைப்படங்கள்.. வசூலை வாரி குவிக்கிறது. இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் திரையுலக ஆதிக்கத்தை பாஜகவின் பரிபூரண ஆசி பெற்ற சமூக ஊடக வாசிகள்.. தங்களது சமூக வலைதளத்தில் தாக்குதலை தொடுத்து படத்தின் வெளியீட்டின் போது எதிர்மறையான விசயங்களை முன்மொழிந்து. அதனை வைரலாக்கி, படத்தின் வசூலை காலி செய்து விடுகிறார்கள். அதிலும் அந்த ஹீரோ இஸ்லாமியராக இருந்தால்… அதாவது சல்மான் கான்- ஷாருக் கான் -அமீர்கான்.. போன்ற ‘கான்’ களாக இருந்தால்… பாஜகவின் கண் அசைவுக்கு ஏற்ப செயல்படும் சோசியல் மீடியா இன்ஃப்ளுடன்சர்கள்.. அவர் இதற்கு முன் பேசியவற்றை திரித்து வெளியிட்டு காலி செய்து விடுகிறார்கள்.
அந்தப் போக்கு தற்போது தமிழ் சினிமாவிலும் பரவி விட்டது. விஜய் படமாக இருந்தாலும்.. கமல்ஹாசன் படமாக இருந்தாலும் அல்லது அவர்களின் கொள்கைக்கு எதிரான படமாக இருந்தாலும் அல்லது திமுகவின் மறைமுக ஆதரவுடன் தயாராகும் படமாக இருந்தாலும்.. தங்களின் எதிர்ப்பு நிலையை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே திரையரங்க அனுபவத்தை பெறுவதற்கு பார்வையாளர்கள் கட்டண உயர்வை காட்டி தயக்கம் தெரிவித்து வரும் நிலையில், திரையரங்கத்திற்கு வருகை தரும் கொஞ்சநஞ்ச பார்வையாளர்களையும் சமூக வலைதளவாசிகள் எதிர்மறையான கருத்துக்களை பரப்பி ரசிகர்களை திரையரங்கத்திற்கு பக்கம் வரவிடாமல் தடுத்து விடுகிறார்கள். இந்தப் போக்கு தற்போது மிகவும் அதிகரித்து விட்டதாக சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் கண்களில் ரத்தக் கண்ணீரை வடிய தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக பாஜகவின் மீடியா அட்மின் ஒருவரிடம் பேசும்போது, ” தமிழகத்தில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் பெரியார் -தி. க- திமுக – நாத்திகம் – திராவிடம்- இதற்கு எதிராக களம் காண்பது எவ்வளவு முக்கியமோ… அதே அளவிற்கு திரையின் மீதும் திரைத்துறை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் தமிழகத்தில் தான் சினிமா நட்சத்திரங்கள் அரசியல் ரீதியாகவும் வலிமை பெற்றிருக்கிறார்கள். நாம் அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டும் என்றால்.. மேக்கப் போட்டுக் கொண்டு, ஸ்கிரீனில் பஞ்ச் டயலாக்குகளை பேசி ஆட்டம் காண வைக்கும் நட்சத்திரங்களை காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனால் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஏதேனும் படைப்புகள் வந்தால் அதனை எதிர்த்து தீவிரமாக களமாடி கொண்டிருக்கிறோம்” என்றார்.
ஆனால் அதே தருணத்தில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி இந்த இதழ் அச்சேறும் வரை 120 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள்தான் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் சிறிய முதலீட்டில் உருவான திரைப்படங்கள் அல்ல. இவை அனைத்தும் இருபது முதல் முந்நூறு கோடி ரூபாய் வரை முதலீட்டில் தயாரான திரைப்படங்கள். இன்னும் ஏராளமான திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டும் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும்.. அப்படத்திற்கான குறைந்தபட்ச வணிகம் இல்லாததன் காரணமாகவும் அவை வெளியாகவில்லை. சமூக வலைதளவாசிகளின் மோசமான விமர்சனங்களுக்கு எதிராக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சில வழிமுறைகளை வகுக்க வேண்டும் என திரை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
பாஜகவின் ஆதரவு சமூக வலைதள வாசிகளின் எதிர்ப்பை மீறி ஒரு படம் வெற்றி பெற்று விட்டால்.. அந்த தயாரிப்பு நிறுவனம்- தயாரிப்பாளர் – அதில் நடித்த நடிகர்கள் என பலரிடமும் அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்றால் அதிலிருந்து நீங்கள் நிவாரணம் பெற வேண்டும் என்றால் தேர்தல் பத்திரங்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் மாற்று உபாயங்கள் மூலம் மத்தியில் ஆளும் அரசுக்கு கப்பம் கட்டியாக வேண்டும். இதனால் தற்போது சினிமா திரையுலகினர் பாஜக எதிர்ப்பு போக்கினை கைவிடும் மனநிலையில் வந்து விட்டனர். இதில் தெலுங்கு திரையுலகம் ஒரு படி முன்னே சென்று மத்திய அரசை தாஜா செய்யும் வழிகளில் இறங்கி இருக்கிறது. மேலும் சிலர் பாஜகவினருக்கு பிடித்த வகையில் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதாபாத்திரங்களை உருவாக்கி, படம் எடுத்து காசு பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலை விரைவில் தமிழ் சினிமாவிலும் ஏற்படும்.
Leave a Reply