தீராத பணப்பசி அதற்கு என்னவேண்டுமானாலும செய்ய முடிவெடுத்த பிறகு கூச்சப்படக்கூடாது கௌரவம் பார்க்கக்கூடாது இல்லையா? அப்படித்தான் கூச்சப்படாம அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் களமிறங்க, விஷயம் மாநகர மக்களுக்கு தெரிந்து சிரிப்பா சிரிச்சிகிட்டு இருக்காங்க. இந்த விவகாரம் எங்கேனு கேட்கறீங்களா? கரூர் மாநகரத்தில்தான். நாற்பத்தெட்டு மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கரூர் மாநகராட்சியில் ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. கூடுதலா இப்ப புது பிரச்சனை.. எல்லா பிரச்சனைகளும் வருவாயை மையப்படுத்தியே இருக்கிறது என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம்.
வாணியம்பாடியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கரூர் மாநகரில் பொருட்காட்சி நடத்த திட்டமிட்டார். அதற்கு மாநகராட்சி அனுமதி வேண்டுமல்லவா? கமிஷ்னர் சுதாவை சந்தித்து பேசினார். அவருடைய வழிகாட்டுதலில் மாநகராட்சி திமுக மேயர் கவிதா கணேசனை பார்த்து பேசினார். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. அனுமதி கிடைத்துவிட்டது. நாற்பத்தைந்து நாட்களுக்கு பொருட்காட்சி மாநகரில் உள்ள திருவள்ளுர் மைதானத்தில் நடத்திக்கொள்ள மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக பொருட்காட்சி நடத்தும் உரிமையாளர் செல்வராஜ் முன்வாசல் வழியாக மாநகராட்சிக்கு குறைவான பணத்தை கட்டிவிட்டு பின்வாசல் வழியாக மேயர் கவிதா கணேசனுக்கும் கமிஷ்னர் சுதாவுக்கும் லட்சங்களை வாரி இறைக்க பொருட்காட்சி ஆரம்பமானது. முன்வாசல் பின்வாசல் விஷயம் உள்ளூர் முழுவதுமாக பரவி மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவர, மேயரையும் கமிஷ்னரையும் மட்டும் பார்த்தால் போதுமா? எங்களை பார்ப்பதில்லையா? என்று சவுண்ட் விட ஆரம்பித்தனர். அதிகமாக சவுண்ட் விடும் மாமன்ற உறுப்பினர்களை அழைத்து பொருட்காட்சியில் கடைகளை வைத்துக்கொள்ளவும் சைக்கிள் ஸ்டேண்ட் மாதிரியான வருமானத்திற்கு பச்சைக்கொடி காட்டினார் மேயர் கவிதாகணேசன். மீதமுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு, கின்னத்தில் தேனை ஊற்றிக்கொண்டு அதை விரலில் தொட்டு நாக்கில் தடவி அனுப்பிவிட்டனர்.
பொருட்காட்சி நடத்தபவர் மேற்படி செலவினங்களையெல்லாம் நுழைவுச்சீட்டில் ஆரம்பித்து உள்ளே வைக்கும் கடைக்காரர்களின் தலையில் மிளகாய் அரைத்து ஈடுகட்ட நினைக்க, ஆனாலும் பொருட்காட்சியால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார் மாநகராட்சிக்கும் வருமானமில்லை. பொருட்காட்சி நடத்துபவருக்கும் வருமானமில்லை ஆனால் மேயர் கவிதா கணேசனுக்கும், கமிஷ்னர் சுதாவுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் ஆதாயத்திற்கு குறைவில்லை என்று வருத்தம் மேலிடப்பேசுகிறார் மாநகராட்சியில் வேலை பார்க்கும் மனசாட்சி உள்ள ஒரு அதிகாரி. மேற்படி விபரங்களையெல்லாம் விரிவாக எழுதி புகாராக்கி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேருவரை அனுப்பியிருக்கின்றனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் மாநகராட்சியை ஆளுகின்றவர்கள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இப்படியே போனால்… கருர் மாநகராட்சி விரைவில் திவாலாகலாம். அப்படியெல்லாம் ஒன்று நடப்பதற்குள் அமைச்சர் கே.என்.நேருவாவது விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா? பார்ப்போம்
– ச.ரகுமான்
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply