இன்னமும் இப்படியெல்லாம் நடக்குதா?’ என்று கேட்பவர்கள் என்னோடு வாருங்கள், உங்களைக் கைப்பிடித்து அழைத்துச்சென்று காட்டுகிறேன் என்பதில் தொடங்கி, படம் முடியும்போது கள யதார்த்தத்தை நேரடி சாட்சியங்களோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். வெறும் பொழுதுபோக்குப் படமாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணப்படமாகவும் சாட்சியமாகவும் படத்தை ஆக்கியிருப்பது சிறப்பு.
சாதி, பதவி, ஆதிக்கம் அனைத்து வெறிகளும் ஊறிப்போன, அதேநேரம் தந்திரமிக்க ஒரு நபராக பாலாஜி சக்திவேல் நடிப்பும் முதலாளிக்கு எல்லாவகையிலும் விசுவாசமான வேலையாளாக சசிகுமார், சசிகுமாரின் மனைவி பாத்திரம், தலைவரின் அடிமைகள் எனப் பலரின் நடிப்பும் சிறப்பு.
சாதியைப் பொத்தி வைத்துக் காப்பதிலும் சாதிப் பெருமையைச் சுமப்பதிலும் இன்றளவும் கிராமங்களே அதிகப் பங்கு வகிக்கின்றன.
மருத்துவமனைகளிலும் திருமணம் நடக்கும் கல்யாண மண்டபங்களிலும் வந்துவிட்ட சமத்துவம், சுடுகாட்டில் இன்னமும் வரவில்லை என்பதும் உண்மைதானே.
ராஜிநாமா செய்யச்சொல்லும்போதும் நிகழும் திருப்பம் யதார்த்தம் என்றால் வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லும்போதும் காட்டப்படும் திருப்பம் காலங்காலமாக அரசியல் செய்பவர்களுக்கு எதிரான அரசியல்.
என்னதான் அப்பாவியாக இருந்தாலும் விசுவாசியாக இருந்தாலும் பதவி கிடைக்கும்போது அங்கீகாரம் கிடைத்ததாகப் பெருமிதம் கொள்வதும் அது நசுக்கப்படும்போது சுயமரியாதை பாதித்துத் துடிப்பதும் சசிகுமார் நடிப்பில் சமூகத்தின் பிரதிபலிப்பு.
சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கும்போது அது தலைவர் ஆக்கிரமிப்பில் இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஆனால் பிடிஓவே இடம் ஒதுக்குவது, பட்டா நிலத்தில் மக்கள் வசிப்பது, போன்ற இடங்களில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது.
ஆதிக்கத் தலைவர் குடும்பத்தில் ஒரு மனசாட்சியுள்ள பாட்டி கேரக்டரையும் வைத்திருப்பது இயக்குநரின் சார்பின்மையைக் காட்டுகிறது.
பதவி கிடைத்தவுடன் முதலாளிக்கு எதிராகத் திரும்பி சாகசங்கள் செய்யும் நபராக நாயகனை மாற்றி ஹீயோயிசத்தைப் புகுத்தி மசாலாப் படமாக ஆக்காமல், யதார்த்ததைப் பதிவு செய்யும் படமாக முடித்தது சிறப்பு.
குறியீடு என்று வழக்கமான பாணியில் செல்லாமல், அடித்தாலும் ஒடித்தாலும் புதைத்தாலும் மீண்டும் வளரும் காட்டாமணக்கை ஒடுக்கப்பட்டவர்களுடன் ஒப்பீடு செய்திருக்கிறார்.
சசிகுமார் படங்கள் என்றாலே சாதிவெறிப் படம் என்று சமூக ஊடக விமர்சனங்கள் வருவதுண்டு. அவரை வைத்து இப்படியொரு படம் எடுக்கத் துணிந்ததற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.
புரட்சி, எதிர் அரசியல் என்றெல்லாம் உணர்ச்சிகரமாக எதையும் செய்யாமல், யதார்த்தத்தைப் பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக நந்தன் இருக்கிறது.
இந்தப் படம் குறித்தெல்லாம் புரட்சிகர சாதிஒழிப்புப் போராளிகள், முற்போக்காளர்கள் சமூக ஊடகங்களில் அவ்வளவாக எழுதவவில்லை..
தங்கலானை விடவும் வாழையை விடவும் தீண்டாமையையும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும் அழுத்தி சொன்ன நந்தன் இங்கே எந்த அரசியல் சினிமா செலிபிரிட்டியாலும் பெருசா பேசப்படல…
ஆக இங்க புரட்சி டைரக்டர் எவனுக்கும் ஒடுக்கப்பட்டவங்க மேல அக்கறை எல்லாம் இல்ல, அவங்கள வச்சு எப்படி கல்லா கட்டறதுங்கறது தான் டார்கெட்.
– பகவதி முருகன்
Leave a Reply