Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அழிவின் விளிம்பில் காஞ்சி பட்டு…கண்டு கொள்ளுமா அரசு?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். அதற்கு அடுத்ததாக நெசவு தொழில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சேலை உலக அளவில் பிரசித்தி பெற்றது.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் பட்டு சேலைகள் வாங்கி செல்வது வழக்கம். அதே போல் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தாய்நாட்டிற்கு வரும்போது பெண்கள் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை வாங்கி சென்று மகிழ்ச்சி அடைவார்கள்.

 பல நூறு ஆண்டுகளாக சிறந்து விளங்கி வந்த பட்டு நெசவு தொழில் படிப்படியாக அழிந்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் 23 கைத்தறி பட்டு நெசவு சங்கங்கள்  இயங்கி வந்தன. அந்த சங்கங்களில் உறுப்பினர்களாக பல ஆயிரம் பேர் இருந்தனர். இதனால்  காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கு தனி குடியிருப்புகள் அந்தந்த சங்கங்கள் மூலம் கட்டி கொடுக்கப்பட்டன. அந்த செலவு  தொகையை நெசவாளர்கள் மாத தவணையில் செலுத்தினர். அப்போது அவர்களுக்கு தொழில் நிரந்தரமாக இருந்தது. அத்தொழிலை நம்பி மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்தனர். அதில் பல குடும்பங்கள் பரம்பரை  பரம்பரையாக நெசவு தொழில் செய்து வந்தனர்.

காலப்போக்கில் கைத்தறி சங்கங்களில் அரசியல் வாதிகள்  தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு சங்கத்திற்கும் அதற்கான அதிகாரிகள் இருந்தாலும் தலைவர்களை மீறி அவர்கள் எதையும் செய்ய முடிய வில்லை. இதனால் கைத்தறி சங்கத்தில் முறைகேடுகள் முளைக்க துவங்கின.

இவ்வாறு நடக்கும் முறைகேடுகளால் நஷ்டம்  ஏற்பட்டு விட்டது என காரணம் சொல்லி அந்தந்த சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, தீபாவளி , பொங்கல் முன்பணம், போனஸ் நிறுத்தப்பட்டது.
தற்போது அண்ணா பட்டு சங்கம், காமாட்சி அம்மன், முருகன், திருவள்ளுவர் என சில பட்டு நெசவாளர் சங்கங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் சங்கங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்து நெசவாளர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வில்லை. என்ற  குற்றச்சாட்டு உள்ளது.

நெசவாளர்கள் தங்கள் வறுமையை உணர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசு காதில் விழ வில்லை.

நெசவாளர்களுக்கு முறையான வேலை கொடுக்க முடியவில்லை. நெசவு செய்த சேலைக்கான கூலியும் கிடைப்பதில் கால தாமதமானது. இந் நிலை தொடர்ந்ததால் நெசவாளர்கள் மாற்று தொழில் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி கடைகள் அதிகமாக இருந்தாலும் பட்டு சேலைகள் குறித்த விபரம் தெரிந்தவர்கள் மட்டும் கைத்தறி சங்கம் கடைகளுக்கு சென்று பட்டு சேலை வாங்கி செல்வார்கள்.

இதனால் தனியார் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்தாலும் புரோக்கர்கள் வாயிலாக  ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களை புரோக்கர்கள் வழி மறித்து தனியார் கடைகளுக்கு அழைத்து செல்வார்கள் . அவர்களுக்கு அதற்கான கமிஷன் கிடைக்கும். தனியார் ஜவுளி கடைகளில் தரமான பட்டு சேலைகள் கிடைப்பதில்லை. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் பளபளப்பான சேலைகளை காட்டினால் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
அதையே பட்டு சேலை என பலர் நினைத்து விடுகின்றனர். அவ்வாறான சேலைகள் பவர் லூம் அதாவது இயந்திரம் மூலம் நெய்யப்படுகிறது.

இது குறித்து பட்டு சேலை நெசவாளர் ராமன்… காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நெசவு தொழில் செய்து வந்தனர். சங்கங்கள் கடனில் இருந்து மீள முடியாமல் உறுப்பினர்களுக்கு தொழில் கொடுக்க முடிய வில்லை. மேலும் ஒரு மாதத்திற்கு ஒரு பட்டு சேலை மட்டும் நெசவு செய்ய முடிந்தது. அதில் கிடைக்கும் கூலி குடும்பத்திற்கு போதவில்லை. இதனால் நெசவு தொழில் செய்து வந்த இளைஞர்கள் தனியார் கம்பனிகளை நாடி சென்று விட்டனர்.பலர் சமையல் தொழில் செய்து வருகின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வில்லை. இதனால் கைத்தறி பட்டு  சேலை நெசவு தொழில் படிப்படியாக குறைந்து வருகிறது.
மாறாக இயந்திரம் மூலம் பட்டு சேலைகள் நெய்யப்படுகிறது. ஒரிஜினல் பட்டு சேலை கைதறியில் மட்டுமே நெசவு செய்ய முடியும். அதில் வெள்ளி ஜரிகை 30 பாய்ண்ட் தங்கம் ஜரிகை 54 பாய்ண்ட் இருக்கும். இதுதான் அரசு நிர்ணயம் செய்துள்ள தரம். அதனால் அதற்கு மதிப்பு அதிகம்.
இயந்திரம் மூலம் செய்யப்படும் சேலைகள் ஒரிஜினல் பட்டு சேலையை விட பளபளப்பாக  இருக்கும். இதனால் மூன்று ஆயிரம் ரூபாய்க்கு தனியார் ஜவுளி கடைகளில் சேலைகள் கிடைக்கும்.

கைத்தறி பட்டு சங்கம் கடைகளில் பட்டு சேலை குறைந்தது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் வரை பட்டு சேலைகள் கிடைக்கின்றன. அவ்வளவு ரூபாய்க்கு சேலை வாங்க முடியாதவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப குறைந்த விலை சேலையை நாடி தனியார் கடைகளுக்கு செல்கின்றனர்.

பல நெசவாளர்கள் தற்போது தனியாரிடம்  சேலைகள் நெசவு செய்து கொடுக்கின்றனர். மாதம் நான்கு சேலை நெய்யலாம் கூலியும் அதிகம் கிடைக்கிறது.
உலக பாரம்பரிய காஞ்சி பட்டு சேலை தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தற்போது நெசவு தொழில் செய்து வரும் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினர் அத்தொழிலை முழுமையாக மறந்து விடுவார்கள் என்ற நிலை உள்ளது. மாவட்டத்தில் தனியார் கம்பெனிகள் அதிகம் உள்ளதால் அங்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்கும் மக்கள் அந்த சேலையின் தரம் குறித்து பரிசோதனை செய்து கொள்வதற்கு வசதியும் உள்ளது. அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விபரம் பலருக்கு தெரியாது.

பட்டு நெசவு தொழிலை காப்பாற்ற வில்லை என்றால் இனி வரும் காலங்களில் காஞ்சி ஒரிஜினல் பட்டு சேலைகளை அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-மாசிலாமணி