தமிழக வெற்றிக் கூட்டணியின் முதல் மாநில மாநாடு 27-10-2024 அன்று நடந்து முடிந்தது. இருந்தும் புயலுக்குப் பின் அமைதியாக இருக்கிறது. மாநாட்டில் பெரியதாகத் தாக்கிப் பேசினாலும் ஆளும் கட்சியான தி.மு.க.விடம் இருந்து எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை. காரணம் எம்.ஜி.ஆர். விஷயத்தில் தி.மு.க.விற்கு ஏற்கெனவே முன் அனுபவம் உள்ளது. பெருவாரியான சினிமா ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களை எதிர்த்துக்கொண்டு இளம் தலைமுறையின் வாக்குகளை இழக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். இன்னொரு விஷயம் விஜய் இதுவரை இறங்கி அடிக்கவில்லை. மேலோட்டமாகவே அரசியல் செய்ய நினைக்கிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் கதாநாயகனாக உச்சம் தொட்ட விஜய் தனது கடைசித் திரைப்படம் ‘தளபதி 69’ படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அரசியல் அவதாரம் எடுத்துள்ளார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வாய்மொழியை உயிர் வாக்காக எடுத்துக்கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு நடத்திய இந்த மாநாட்டில் த.வெ.க. கட்சியின் கொள்கை வழிகாட்டிகள், கொள்கை எதிரிகள், அரசியல் எதிரிகளை அறிவித்ததோடு 2026-ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார்.
அவர் என்ன பேசினார்? அவரின் கொள்கைகள் என்ன? அவருக்கும் அவரது கொள்கைக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பதை ஆராய்வதற்கு முன்னால் மாநாட்டு அரங்கைப் பற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரர்களிடத்தில் பேசி பெரிய தொகையைக் கொடுத்து அங்கு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அதோடு நடுவில் உள்ள ஒரு நிலத்தில் 100 அடி உயரத்தில் த.வெ.க. கொடியை அமைத்திருக்கிறார் விஜய். இந்தக் கொடி சுமார் 5 ஆண்டுகளுக்கு அங்கேயே இருக்க ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோட்டையைப் போன்ற அரங்க அமைப்பு, நடந்து சொல்ல நீண்ட பாதை, ஆயிரக்கணக்கான துண்டுகள், கொடிக் கம்பங்கள், போகஸ் லைட்டுகள், ஒளித் திரை, 75 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் இருக்கைகள், அவர்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகள், குடிநீர், மதிய உணவு, அதை வழங்கக்கூடிய பணியாளர்கள், பாடி கார்டுகள், செக்யூடிட்டிகள், 6 ஆயிரம் அரசுக் காவலர்கள், அவர்களுக்குப் பணப் படிகள், விஜய் இரவிலிருந்து தங்க ஒரு கேரவன், மற்றும் தாய் தந்தை, நிர்வாகிகள் போக்குவரத்துச் செலவுகள் என வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை ரூ. 50 கோடிகள் செலவாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் வந்து குவிந்த மக்களோ 10 லட்சம். அவர்களுக்கு உரிய உணவு இருக்கை வழங்கப்படவில்லை. பல ஆயிரம் பேர் திரும்பிச் செல்ல மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இந்தச் செலவுகள் அனைத்தும் விஜய்யின் சொந்தப் பணம்தான். இதற்குக் கணக்கு வழக்கு என்ன? அறக்கட்டளை உள்ளதா? இவ்வளவு பணத்தைச் செலவழித்து கட்சியைத் தொடங்கி ஊழலை ஒழிப்பேன் என்கிறார். இந்நேரம் லட்ச ஒழிப்புத்துறை அவரது வீட்டுக்குச் சென்றிருக்கவேண்டும். அதுவும் இல்லை. இதன் பின்னால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அவர் எடுத்து வைத்த அரசியல் காலடித்தடம் சரிதானா?
• தமிழக அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது. அதை நாம் பிடிக்கவேண்டும் என்று அரசியலில் குதித்திருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு வெற்றிடம் தமிழக அரசியல் களத்தில் இல்லை.
• தேர்தலை மையப்படுத்தி அரசியலில் இறங்குவது சரியான அணுகுமுறை இல்லை. கொள்கையை முன்னிறுத்தி அரசியலில் இறங்கிக் களமாடுவதுதான் சரியான வழிமுறை.
• சினிமாவோடு இருந்து ரசிகர்களை அரசியல்படுத்திவிட்டு அரசியல் நோக்கோடு அவர்களை அணுகவேண்டும். அல்லாமல் நேரடியாக அரசியலில் வேக வேகமாக ஆட்சியில் பங்கு கேட்பது அரசியலில் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது.
• தனது கடந்த கால சினிமா வாழ்க்கையில் தூய்மையைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். ஒரு படத்தில் ரூ 200 கோடி சம்பளம் பெற்றுக்கொண்டு கள்ளத்தனமாக ஒரு டிக்கெட் விலை 500 ரூபாய் வாங்கியதை அனுமதித்து இருக்கக்கூடாது.
• சக நடிகர்களுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை. ‘கோட்’ படத்தில் நடித்த நடிகர்கள், மாணவர்களுக்குச் சம்பளத்தை தரவில்லை என்கிற சர்ச்சை எழுந்ததே அதில் அவர் தலையிட்டாரா? அவர் நடித்த படங்களும் கொள்கை சார்ந்ததாகத் தெரிவில்லை. பெரம்பாலும் இளைஞர்களை நாசமாக்கும் மசாலாப் படங்கள். அவர் அரசியலுக்கு வந்த வழியும் சரியில்லை.
• 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அண்ணா நிச்சயம் ஆட்சி அமைப்பார் என்று மாநாட்டுக்கு வந்த அனைவரையும் ஒன்றே போல் சொல்ல வைத்திருக்கிறார்.
• மாநாட்டுக்கு காலை முதலே வந்த மக்களுக்கு உணவு, தண்ணீர் போதிய அளவுக்குத் தரவில்லை. மாநாடு நான்கு மணிக்குத் தொடங்குவதாக அறிவித்து மூன்று மணி என்று அறிவித்து பின்னர் 2 மணிக்குத் தொடங்கியது.
ஓட்டு வேட்டையில் விஜய்
• வன்னியர்களுக்கு தேசிய அளவில் அடையாளத் தலைவர் இல்லை. பெருவாரியான வன்னியர் ஓட்டுகளைப் பெறவேண்டி கடலூர் அஞ்சலை அம்மாள் மாநாட்டில் பெருந்தலைவர்களுக்கு இணையாக கட்அவுட் வைக்கப்பட்டிருக்கிறது.
• முக்குலத்தோர் எனப்படும் தேவரின மக்களின் ஓட்டுக்காக வேலு நாச்சியார், தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்காக அம்பேத்கர், நாட்டார் இனமக்கள் மற்றும் காங்கிரஸ் ஓட்டுக்காக காமராஜர்,
• திராவிட ஆதரவாளர்களின் ஓட்டுக்காகத் தமிழகத்தில் தவிர்க்கவே முடியாத தலைவர் பெரியார் என கட்அவுட்கள் காட்சியளித்தன.
• இன்னொரு தவிர்க்கக்கூடாத தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறுதலிக்கப்பட்டுள்ளார். அவர் தியாகமும் சேவையும் காந்திக்கு நிகரானது. அன்னாரது மக்களின் ஓட்டு குறைவு என்பதாலோ என்னவோ அவர் இடம்பெறவில்லை என நினைக்கிறேன்.
முற்றிலும் முரண்பாடுகள்
ஊழலுக்கு எதிராகப் பேசும் விஜய் மாநாட்டுக்கான தன் செலவுக் கணக்கை இதுவரை காட்டவில்லை. தான் வாங்கிய வெளிநாட்டுக் காருக்கான வரியைத் தள்ளுபடி செய்யச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதற்கு நீதிபதி அபராதம் விதித்த பிறகு வரியைக் கட்டினார். அந்தத் தீர்ப்பின் வாசகத்தைத் தவிர்க்கச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
• ஊழல் புகாரில் சிறைக்குச் சென்றவர் ஜெயலலிதா. அவர் சட்டரீதியாக ஊழல் குற்றத்திற்காகத் தண்டனைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கத் தேர்தலைச் சந்தித்தபோது, விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் போயஸ் கார்டன் ஜெ வீட்டுக்குப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு கொடுத்தார்கள்.
• அன்னா ஹசாரே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்றவேண்டும் என ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியபோதே அவரை நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தவர்தான். ஆனால், அதன்பின்னர் ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த போராட்டங்கள் என்ன? செய்த செயல்கள் என்ன? ஒன்றுமே இல்லை.
• தந்தை பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம். அவரது கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் விஜய். தந்தை பெரியாரின் கொள்கையின் அடிநாதமே கடவுள் மறுப்புதான். அதை ஏற்கவில்லை என்றால் பெரியாரைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்கிறீர்களா?
• திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரண்டு கண்கள் என்கிறார் விஜய். திராவிடமும் தமிழ்த்தேசியமும் எதிரெதிரான பாதையில் பயணிப்பவை. அவற்றை எக்காலமும் இரட்டை மாட்டு வண்டியில் பூட்ட முடியாது. முரணான பாதையில் பயணிக்கவே செய்யும். இது மக்களை ஏமாற்றும் பயணம். இதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் விஜய்.
• ‘பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் கோஷத்தை முன்வைக்கும் விஜய், இதுவரை மக்கள் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வந்து போராடி இருக்கிறாரா? அவரது பிரமாண்ட வீட்டில் ஏழை பாழைகளுக்கு இடம் உள்ளதா?
• இளைஞர்களைக் குறிவைத்து தமிழக அரசியல் களம் இறங்கியிருக்கும் விஜய் அந்த மாநாட்டில் இளைஞர்களுக்குக் கல்வியின் பயன் குறித்துப் பேசினாரா? ஒழுக்கத்தைப் பற்றிப் பேசினாரா? இல்லை. அவர் மாநாட்டுக்கு வந்து மாண்ட இளைஞர்களின் இல்லத்துக்குச் சென்று இரங்கல் தெரிவித்தாரா? உதவித் தொகை வழங்கினாரா? இல்லை. கடிதம் எழுதி கட்சி நடத்த நினைக்கிறார்.
• அ.தி.மு.க.வைத் தவிர்த்துவிட்டு தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் வசைபாடியிருக்கிறார் விஜய். இதன் பின் உள்ள அரசியல் காய் நகர்த்தல் என்ன என்பது கூடிய விரைவில் வெளிவரும்.
• எப்படியாவது கோட்டையில் அமர்ந்துகொண்டு யாரோ அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்ததைத் தன் ஊழல் பணத்தில் அரசியல் நடத்தி முதல்வராக நினைக்கிறார் விஜய்.
• கள்ளங்கபடம் அறியாத ஏழைப் பாழைகளின் எண்ணத்தில் விஷத்தைக் கலக்கும் விதமாக சினிமாவில் ஜொலித்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கும் விஜய்யின் எண்ணம் பலிக்காது.
பாக்ஸ்
விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் தேர்தல் கள வகுப்பாளராகச் செயல்படுபவர் திருச்சியைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி என்று கூறப்படுகிறது. இவர் பெயரில் மும்பையில் பெர்சோனா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. எம்.ஏ. ஆங்கிலமும், எம்.பி.ஏ.வும் படித்துள்ள ஜான், பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் வல்லுநராகவும் இருந்துள்ளார். பிரபல ஆப்பிள் நிறுவனத்துக்கும் பிராண்ட் தொடர்பான ஆலோசனைகளையும் இவர் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆக விஜய்யின் பின்னால் இருந்து இவரும் இவருடன் சிலரும் இயக்குவதாகக் கூறப்படுவது கூடிய விரைவில் வெளிவரலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
– பொன்.மூர்த்தி
Leave a Reply