ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதம். இந்த மாதத்தில் இல்லங்களில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோல மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் ஐப்பசி பௌர்ணமிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில், சந்திர பகவான் அன்றுதான் தன் சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் பிரகாசிக்கிறார்.
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார். இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்ய, அவர் ‘உன் உடல் தேயட்டும்’ என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அப்போது முதல் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். பிறகு அவர் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார். சிவபெருமான் அருளால் சாபம் தீர்ந்து சந்திரன் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தார். அதனால் இந்தப் பௌர்ணமி திருநாள் திங்களூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பது நமக்குத் தெரியும். அதனால் அவருக்கு தூய்மையான நீர், பசும்பால், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகிய பதினோரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. தாயின் அன்பை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து இந்த உலகைக் காத்தருளும் சிவபெருமானை இன்று அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
ஆகாயத்தில் காற்று பிறக்கிறது. அதன் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம் இறைவனுக்கு அபிஷேகமாகும்போது ஆண்டவனை முழுவதும் அணைத்துத் தழுவி அவனிடமே அடைக்கலமாகிறது. அன்னத்தின் அருமையும் பெருமையும் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாத பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு சமைத்த அன்னம், காய்கறிகள், பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும், பாணத்தின் மீதும் சாற்றப்படும் அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ கரைப்பார்கள். முதலில் நீர் வாழ் உயிர்களுக்கு உணவிடப்படும். பிறகு மீதி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
நமக்கு தினமும் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. அரிசியிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர். நெல் அரிசி ஆகிறது. அரிசி சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது. அதேபோலதான், ஆத்மா எவ்வளவு ஜென்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம்.
=======
*அனைத்து சிவாலயங்கள்* மற்றும் சிவ சன்னதி உள்ள அனைத்து சிறிய ஆலயங்கள் உட்பட, எல்லா ஆலயங்களிலும் கண்டிப்பாக ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று மாலையில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
*தஞ்சை ‘பெரிய கோயில்’ என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலிலும், கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயிலிலும் இந்த அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுவதால்,* இதைக் காண இந்தியா முழுவதிலிருந்தும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐப்பசி பௌர்ணமியன்று வருகை தருவது வழக்கம். அன்னத்தையே பிரம்மமாகப் பார்த்து, உணவை இறைவனாகவே பார்ப்பது இந்து தர்மம். உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அன்னம் அளிப்பது இறைவன்தான்.
=======
சிவனுக்கு ஒரு முறை பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்ம தேவனுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்ததாம். பிரம்மாவுக்கு ஏற்பட்ட கர்வத்தை அடக்குவதற்காக சிவபெருமான் அவருடைய ஒரு தலையைக் கொய்து விடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை சிவனின் கையை பற்றிக் கொள்கிறது. இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொள்கிறது. இதனால் சிவனின் திருக்கோலமே மாறிவிடுகிறது.
பிட்சாண்டியாகக் காட்சியளிக்கும் சிவனின் கையில் பிரம்மனின் கபாலமே பிட்சைப் பாத்திரமாக மாறி விடுகிறது. யார் பிட்சையிடும்போது அந்தப் பாத்திரம் நிரம்புகிறதோ அப்போது சிவனின் கையோடு ஒட்டியிருக்கும் அந்தக் கபாலம் விலகும் என்பது விதி. சிவபெருமான் பிட்சாண்டவராகக் காசியை அடைகிறார். அங்கே ஸ்ரீ அன்னபூரணி தேவி அவருக்கு அன்புடன் அன்னமளிக்க, அவர் கையில் இருக்கும் கபாலம் நிரம்பியதால் பிரம்மனின் தலை அவர் கையை விட்டு அகன்று கீழே விழுகிறது. அதோடு, சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷமும் விலகுகிறது. இது நிகழ்ந்தது ஐப்பசி மாத பௌர்ணமி நாளாகும். அதனாலும் சிவனுக்கு அன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்று கருதப்படுகிறது.
ஐப்பசி பௌர்ணமியன்று விரதம் இருந்தால், உரிய வயதாகியும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரும்பியபடியே மண வாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவபெருமான்-பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும் ஒருசேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்து பெருமானையும் அம்பிகையையும் பூஜித்து பிரார்த்தனை செய்தால் வேண்டும் கோரிக்கைகள் நிறைவேறும்.
‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே அன்னத்தின் வடிவில் இருந்து நமக்குப் படியளக்கிறான். எனவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன். . *அன்னாபிஷேகத்தை தரிசித்தால் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும்* என்பது மட்டுமல்ல, அன்னம் சம்பந்தப்பட்ட தோஷம் கூட நீங்கி விடும். பக்தர்கள் அனைவரும் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து இறைவனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
– மோகன்தங்கசாமி
Leave a Reply