இமயமலைக்கு முந்தைய மலை திருவண்ணாமலை நான்கு யுகத்திலும் இருக்கும் மலை அண்ணாமலை என்பதை வேதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். சிவன் வாழ்விடமாக கருதப்படுகிற பத்ரிநாத், கேதார்நாத், கைலாயம் ஆனால் இங்கு மலையே சிவன் அதுதான் அண்ணாமலையின் ஆதியும் அந்தமும் அற்ற அண்ணாமலை. பிரபஞ்ச தோற்றமும் முடிவும் எப்படி மனித குலத்திற்கு அப்பாற்பட்டதோ.. அதேபோன்று அண்ணாமலை தோற்றமும் மனித குலத்திற்கு அப்பாற்பட்டது. இது அகங்காரத்தை அழிக்கவும் செய்யும், அன்பால் வாரி அனைத்து பாதுகாப்பு வழங்கவும் செய்யும் அந்த பக்தியான தெய்வமலைதான் அண்ணாமலை தீப்பிழம்பாக சிவன் நின்றமலை திருவண்ணாமலை.
பௌர்ணமி, திருவூடல் நிகழ்ச்சி, கார்த்திகை தீபம் மூன்று தருணத்திலும் அக்னி உருவமாய் அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருகிறார்.
அதன்பிறகு காலப்போக்கில் ஒவ்வொரு மாத பௌர்ணமி கிரிவலமும் புகழ்பெற்றது. அதன் தொடர்ச்சியாக ஞானிகள் யோகிகள் பொதுமக்கள் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் வர ஆரம்பித்தனர்.
அதன்பிறகு விடுமுறை நாட்களான சனி ஞாயிறு தினங்களில் மக்கள் தொகை வருகைக்கு ஏற்ப கிரிவலம் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை தொல்பொருள் ஆய்வுத்துறை கையகப்படுத்திய வழக்கில், நீதிபதி வெங்கடசாமி தலைமையில், கிரிவல மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகுதான் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தாங்க குடிநீர், கழிப்பிடம், ஓய்வுகூடங்கள், மின்விளக்குகள் உள்ளிட்டவை அபரிதமான பக்த்ரகள் வருகையை கருத்தில் கொண்டு, நிர்வாகம் விரிவாக்கப் பணியை அறுபத்தி ஐந்து கோடியில் முன்னெடுத்தது தமிழக அரசு! இதில் பக்தர்கள் தங்க யாத்திரை நிவாஸ் உருவானது. ஆனால் இவை அனைத்தும் யானைக்கு சோளப்பொறி மாதிரி ஆகிப்போனது. உதாரணத்திற்கு ஐநூறு பேர் அமரக்கூடிய சினிமா தியேட்டரில் இருபதிற்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளது அப்படீன்னா… ஐந்து லட்சம் பேருக்கு எவ்வளவு கழிவறைகள் தேவை? ஐம்பது பேருக்கு ஒரு கழிவறை என்பது அரசு நிர்ணய சட்டம்! அந்த சட்டப்படி ஒரு லட்சம் கழிவறைகளாவது தேவை, கட்டியிருக்க வேண்டும் ஆனால் ஒரு சதவிதம் கூட கட்டவில்லை. மலையை கிரிவலம் வருபவர்கள் இயற்கை உபாதையை கழிக்க எங்கே போக முடியும்?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வருமானம் பௌர்ணமி காலத்தில் உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக கிடைப்பது எழுபது லட்சம் ரூபாய் இது பழைய நிலவரம்! இன்று ஐந்து கோடியை தொட்டுவிட்டது ஆனால் வருமானத்திற்கு ஏற்ற வசதிகள் பக்தர்களுக்கு இருக்கிறதா? இல்லையே? பக்தர்களுக்கு வேண்டி உணவு ஓய்வறை கழிவறை உருவாக்கல இதுமட்டுமல்ல, போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தும் திட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை அதை பொதுமக்களுக்கு பழக்கப்படுத்தவும் இல்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பேருந்து நிலையம் திட்டத்தை உருவாக்கி இருக்கின்றனர் இருக்கும் பேருந்து நிலையத்தைவிட புதிய பேருந்து நிலையம் பெரியது அல்ல, அதற்குண்டான முன்னெடுப்பில் தெளிவில்லை சரியான தேர்வு அல்ல என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாக இருக்கிறது.
இதுநாள்வரை தமிழகத்தில் இருந்து வந்து கிரிவலத்தில் பங்கெடுத்தனர். இப்பொழுது உலகம் முழுவதிலும் இருந்து கிரிவலத்திற்கு பக்தர்கள் குவிகின்றனர். அதற்கு ஏற்றார்போல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரணும், சாமி தரிசனத்திற்கு ஒழுங்குபடுத்தனும். இதுவரை அப்படி ஒரு ஏற்பாடு இல்லை கட்டுப்பாடில்லை காசு உள்ளவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி அளிப்பார் என்று உள்ளூர் மக்கள் முதற்கொண்டு அனைத்து பக்தர்கள் மனதிலும் இப்படி ஒரு எண்ணத்தை பதிவு பண்ணிட்டாங்க, கோயில்ல எல்லா வகையிலும் தவறுகளை செய்கிறார்கள்.
கிரிவலம் வரும் பக்தர்கள் புனித தீர்த்தமாட 365 குளங்கள் இருந்த இடத்தில் இன்று தீர்த்தமாட ஒரு குளம் கூட இல்லாம பண்ணிட்டாங்க சிவகங்கை பிரம்ம புனித தீர்த்தத்தில்கூட தீர்த்தமாட விடுவதில்லை கேட்டால், குளம் மாசாகிவிட்டது என்கின்றனர் ஆயிரம் ஆண்டுகள் மாசுபடாத குளம் இப்பொழுது மாசடைந்துவிட்டது என்கிறார்கள். காரணம் நீர்வரத்தை தடுத்துவிட்டனர் மலையில் இருந்து வரும் மழை நீர் ஊற்றுகள் (சுனை) தடுக்கப்பட்டது. மலை புறம்போக்குகளில் கான்கிரீட் போட்டு வீடுகள் கட்ட நீர்வரத்து கால்வாய் தடுக்கப்பட்டது இந்த நீர் வரத்தை நம்பி இருந்த அத்தனை குளங்களும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டது. கிட்ட தட்ட இரண்டு கி.மீ.க்குமேல் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஆக்கிரமித்து வீடுகள் உருவாகிவிட்டது. மெல்ல மெல்ல மலை மீதும் ஆக்கிரமிப்புகள் பரவிவிட்டது. சிமெண்ட் ரோடு, குடிநீர் குழாய், மின்சார வசதி இதெல்லாம் ஓட்டு அரசியல்வாதிகள் ஆசியுடன் தடையில்லாமல் நடந்தேறியது மலைமீது குடியிருப்புகள் பெருகியதால், நீரோடைகளில் கழிவுநீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ் கலெக்டராக இருக்கும்போது, ஏழாயிரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கண்டறியப்பட்டு, வருவாய்த்துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. வாக்கு வங்கி அரசியல் தலையீட்டால் விஷயம் கிடப்பில் போடப்பட்டது. விளைவு இன்று ஆக்கிரமிப்புகள் ஏழு மடங்கு அதிகமாகிவிட்டது அன்று கோட்டை விட்டதால், இன்று ஐந்து மடங்கு கூடுதலாக இடங்களை தேட வேண்டி இருக்கு, இனியும் காலதாமதம் செய்தால் இன்னும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிடும் இப்பொழுது நடந்த பேரிடர்கள் போல பல நடக்க வாய்ப்பிருக்கு. முன்னெச்சரிக்கையாக மக்களை மட்டும் காப்பாற்ற வேண்டியதோடு இல்லாமல், சிவன் மலையையும் அதன் புனிதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கில், நீதிபதி ஜோதிமணி மலை ஆக்கிரமிப்பை தடுக்க வேலி அமைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். எந்தவொரு திட்டமிடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் நடத்தப்படுகிற பௌர்ணமி கார்த்திகை தீபவிழாவில் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதை தடுக்கும் விதமாக முதல் முறையாக கிரிவல பாதையில் ஆம்புலனஸ் பாதை தனியாக ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தி கூறியுள்ளார். எந்தவொரு சூழலிலும் கிரிவலப்பாதை சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்படவேண்டும் பக்தி மிகுதியில் வெளியூர்காரர்கள், வணிகநோக்கத்தில் உள்ளூர்காரர்கள் கிரிவலப் பாதையை சின்னாபின்னமாக்கி கூறுபோட்டுவிட்டனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு தடுக்க எந்தவொரு முன்னெடுப்பும் இல்லை.
வெளியில் இருந்து வந்து யார் யார் குடியேறுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சமூக விரோதிகள், குற்றவாளிகள் சன்னியாசிகள் போர்வையில் திருவண்ணாமலை நகரிலும் கிரிவலப் பாதையிலும் நடமாடிக்கொண்டிருக்கின்றனர் அதை கண்காணிக்க வேண்டும் இந்த நகரத்தின் புனிததன்மை மாறாமல் கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் இது அரசின் கடமை செய்வார்களா…?
உள்ளூர்வாசிகள் என்ன சொல்லுகிறார்கள்..?
வழக்கறிஞர் சங்கர்…, ஏற்கனவே இருக்கிற நீதிமன்ற உத்தரவுகளையும், அரசு வழிகாட்டுதல்களையும், காற்றில் பறக்கவிட்டுவிட்டு காசாக்கிவிட்ட அரசியல்வாதிகளால் ஏற்பட்ட விளைவுதான் இது! ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது அதற்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுத்தது பெரிய தவறு. கிரிவல மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலை எல்லோரும் மறந்துட்டாங்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறிட்டாங்க. உடனடியாக ஆக்கிரமிப்புகளை மக்கள் பாதுகாப்பை உறுதி செய்து மாற்று இடம் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
சமூக ஆர்வலர் ஆர்.டி.பிரகாஷ்…, உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் ஆகவிதிகளுக்கு மாறாக ஆன்மீகமும் அரசியலும் ஒன்று சேர்ந்து செய்த வேலைக்கு கடவுள் கொடுத்த எச்சரிக்கைதான் இந்த சம்பவம் மக்கள் நலன்காக்க திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எ.வ.வேலு கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
வழக்கறிஞர் கௌதம்பாண்டு…, தமிழக அரசு மலைமீது வீடு கட்டி குடியிருப்போர்களுக்கு மாற்று இடம் கொடுக்கனும். அதோட இனிமே ஆக்கிரமிப்பு பண்ணாத படி பார்த்துக்கனும். ஐஐடி குழுவினர் வந்து ஆய்வு பண்ணிட்டு போயிருக்காங்க. என்ன சொல்றாங்கனு பார்ப்போம் என்கிறார்.
வழக்கறிஞர் பாசறைபாபு…, மலையில் நீர்வழிதடங்கள் பழைய மாதிரியே சீரமைக்கப்படவேண்டும் தயவு தாட்சணியம் பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை எடுக்கனும். மலையில் ஏற்கனவே மஞ்சம்புல் இருந்தது. இப்பொழுது இல்லை. மண் அரிப்பை தடுக்கக்ககூடிய மரங்களை நடவேண்டும். குறிப்பாக வேர்கள் பரவலாக இருக்கும் மரங்களை நடவேண்டும் என்கிறார் தன் தரப்பில்.
இந்து முன்னணி அருண்…, இயற்கை சீற்றத்தால் கடுமையான மழை பெய்திருக்கிறது. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதோடு வனத்துறை கண்காணிப்பை அதிகப்படுத்தனும். தேசிய பேரிடர் பாதுகாப்பு அமைப்பை திருவண்ணாமலையில் ஏற்படுத்த வேண்டும்
ஆன்மீக அன்பர் செந்தில்…, நாளுக்குநாள் மலை மீது வீடு கட்டும் பணி அதிகரிக்கிறது இனிவரும் காலங்களில் அதை அனுமதிக்கக்கூடாது வனத்துறை, வருவாய்த்துறை, அறநிலையத்துறை இனியாவது கவனமாக இருக்க வேண்டும்.
மாமன்ற உறுப்பினர் பிரகாஷ்…, மலையில் ஏற்பட்ட மண்சரிவு அதன் தொடர்ச்சியாக நடந்த 7 பேர் இறப்பு சம்பவம் தமிழக அரசு இனி மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மழை பாதிப்புக்கு பிறகு தமிழக அரசு விரைந்து செயல்பட்டதை பாராட்ட வேண்டும். மலையடிவாரம் மலைமீது மக்கள் செலவு பண்ணி இனி வீடு கட்டகூடாது இவர்களுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அடிப்படை வசதி செஞ்சி கொடுத்திடறாங்க. கட்டுப்பாடு இல்லாம போச்சி என்று ஆதங்கப்படுகிறார்
சமூக ஆர்வலர் சிவபாபு…, மலையில் மண் அரிப்பை தடுக்க வெற்றிடங்களில் வெற்றிவேர் நடனும். மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்றுவதாக சுப்ரீம் கோர்ட்டில் உறுதிமொழி கொடுத்திருக்காங்க அதை செய்திட உரிய நேரமிது. இரமணாஸ்ரமம் முதற்கொண்டு பச்சையம்மன் கோவில் வரை மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த முறை தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் மலையேற தடைவிதிக்கனும் என்கிறார்.
குரு டிராவல்ஸ் கண்ணன்…, மலைமீதுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தனும். கிரிவல பாதையை சுற்றி இரும்புவேலி அல்லது கருங்கல் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் திருவண்ணாமலையோட ஐதீகம் 365 குளங்கள் இருந்ததாக அண்ணாமலை புராணம் சொல்லுது. ஆனா லேட்டஸ்ட் நிலவரப்படி இருபது குளங்கள் இருந்தாலே பெரியவிஷயம். மீதி குளங்களை என்ன ஆனது என்று தேடிப்பிடித்து மீட்கனும்.
– இனியவன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry2
Dead0
Wink0
Leave a Reply