விழுப்புரம் மாவட்டத்திலேயே திண்டிவனம் போதை மாத்திரை விற்பனையில் முதலிடம் பிடிக்கும் அவல நிலை உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதை மாத்திரை மற்றும் ஊசிகளின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் போதை மாத்திரை, கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து போதைப் பொருட்கள் உட்கொள்பவர்கள் போதை தலைக்கேறுவதால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் காவல் உட்கோட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை போதை மாத்திரையாக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புதியதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஒரு சில மாதங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரை விற்பனைக்கும்பலை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன் இந்த கைது நடவடிக்கை இல்லாததால் திண்டிவனத்தை குறிவைத்து போதை மாத்திரை உறுப்பினர்கள் ஈடுபடும் இளைஞர்கள் அதிகரிக்க துவங்கினர்.
குறிப்பாக மருந்தக விற்பனையாளர்கள் இதற்கு உறுதுணையாக செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனை பெயரில் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து அதனை கள்ளச் சந்தையில் இளைஞர்களுக்கு முப்பது ரூபாய்க்கு பெறப்பட்ட மாத்திரை அட்டைகளை 300 ரூபாய்க்கு விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், திண்டிவனம் சஞ்சீவராயன்பேட்டையில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் வீட்டில் 25 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து போதைப் பொருட்கள் பிடிபடுவதும், கைது நடவடிக்கை மேற்கொள்ளும் திண்டிவனம் போலீசாரால் முற்றிலுமாக அதனை ஒழிக்க முடியவில்லை. புற்றீசல் போல் விற்பனையானது நடந்து கொண்டிருக்கிறது. போலீசாரால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
கடந்த காலங்களில் ஒரு சில போதை மாத்திரை விற்பனை பேர்வழிகளை பிடித்த திண்டிவனம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் தங்களது கடமை முடிந்து விட்டதாக எண்ணியதன் விளைவு. அந்த போதை மாத்திரை விற்பனை கும்பல் பல கிளைகளாக பிரிந்து திண்டிவனத்தில் உள்ள சிறுவர்கள் இளைஞர்களை சீரழித்து பெரிய மாஃபியா கும்பல் போல் பெருகி உள்ளது.
திண்டிவனம் பகுதியில் அதிகளவில் இளைஞர்களால் விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள் அறுவை சிகிச்சை அரங்கில் மயக்கத்தை ஏற்படுத்தும் மயக்க மாத்திரையாகும். இவைகள் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை ரசீது இல்லாமல் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் மருத்துவரின் பரிந்துரை ரசீதை போலியாக தயார் செய்து மருந்து கடைகளில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதும், மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் ஏதாவது ஒரு மருந்தகத்தின் பெயரில் அத்தகைய மாத்திரைகளை மொத்தமாக ஆர்டர் செய்து போதை மாத்திரை விற்கும் கும்பலிடம் கொடுத்து சொற்ப லாபத்தை பெற்று வருகின்றனர். இதுபோன்று செயல்பட்ட மருத்துவ விற்பனை பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் இங்கு நடந்துள்ளது.
போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற நபர்கள் வெளியில் வந்தவுடன் அவர்களை கண்காணித்தால் இந்த குற்ற சம்பவங்கள் திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திண்டிவனம் பகுதியில் சங்கிலித் தொடர் போல் நடைபெற்று வரும் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி, போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என திண்டிவனம் நகரவாசிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
-ஜோதி
