ஆலங்குளம்- மருத்துவ கருவிகளின்றி திருநங்கை அறுவை சிகிச்சை … ஒருவர் உயிரிழந்தார். 2 திருநங்கைகள் கைது.

ஆலங்குளம்-
மருத்துவ கருவிகளின்றி திருநங்கை அறுவை சிகிச்சை …
ஒருவர் உயிரிழந்தார். 2 திருநங்கைகள் கைது.

 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு ஜேஜே நகரில் சுமார் 30 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தனித்தனியே வாடகைக்கு வீடுகள் எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுடன் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர் குளத்தைச் சேர்ந்த சங்கர பாண்டி மகன் சிவாஜி கணேசன் (32) என்ற இளைஞர் சில மாதங்களுக்கு முன்னர் வந்து சேர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. தானும் திருநங்கையாக மாற வேண்டும் என்ற ஆசையில் அவர் தனது பெயரை ஷைலு என ஸ்டைலாக மாற்றிக் கொண்டார். சேலை, முன் நெற்றியில் குங்குமம், மஞ்சள் தாலி என பெண் வேடமணிந்த படி திருநங்கைகளுடனே வெளியில் சுற்றித் திரிந்து வந்தார். இந்நிலையில் சிவாஜி கணேசன் என்ற ஷைலுவை சில திருநங்களைகள் ரத்த வெள்ளத்தில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டாதகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆலங்குளம் மற்றும் கடையம்   போலீஸார் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது சைலு பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்தது தெரிய வந்தது.
 போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆலங்குளம் மேலப்பரும்பு பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட திருநங்களைகள் வசித்து இரவு நேரத்தில் சாலையோரம் நின்று பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சிலர் கூறும் ஆசை வார்த்தைகளில் சில இளைஞர்கள் பகல் வேளைகளிலும் இவர்கள் வீட்டில் வசிப்பதாகவும், அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு எதுவும் செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முறைப்படியான பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சங்கள் வரை ஆகும் என்பதால் இங்கு வசிக்கும் திருநங்கைகள் மதுமிதா மற்றும் மகாலெட்சுமி ஆகியோர் ஆணாக இருந்து திருநங்களைகளாக மாற விரும்புபவர்களுக்கு மருத்துவ உபகரணங்களின்றி, இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்பவர்கள் என கூறப்படுகிறது. அதன்படியே சிவாஜி கணேசன் என்ற ஷைலுவுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் மகாலெட்சுமி மருத்துவர் போலவும் மதுமிதா அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார். எந்த வித முன்னேற்பாடுகளும், மருத்துவ அறிவுமின்றி மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் ஷைலு, அதிக ரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது. ஷைலு உயிரிழந்தது தெரிய வந்ததும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட உபகரணங்களை அதிகாலையில் எரித்து தடயத்தையும் இருவரும் அழித்துள்ளனர். விடிந்த பின்னர் வேறு வழியின்றி உயிரிழந்த நபரை, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பைக்கிலேயே கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து மதுமிதா, மகாலெட்சுமி இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ச.ர.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *