நெல்லை மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் காரணமாக சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது., சிதிலமடைந்த சாலைகளின் புகைப்படத்துடன் கூடிய கண்காட்சி நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வாரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி என்பது நோயாளி முகத்துக்கு போடும் மேக் அப் என்பது போன்ற விமர்சனம் உண்டு. அதிலும் பாதி கிராமச்சாயல் கொண்ட நெல்லையை நகரம் என்ற நிலையில் இருந்து மாநகரமாக மாற்றியபோதே அதன் ஒரிஜினாலிட்டியை இழந்தது. நகரம் என்பது நாகரீகத்தின் அடையாளம். அந்தந்த பகுதி மக்களின் நாகரீகத்தின் அடையாளம்.
நெல்லைக்கென்று இருந்த தனித்த அடையாளம் மாற்றப்பட்டதோடு, அதன் ஜீவசக்தியை தொலைப்பது போலவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமைந்துள்ளது. எல்லா மாநகர்களுக்கும் இது தான் கதி என்றாலும், நெல்லைக்கு இது எல்லை இல்லாத் தொல்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி தொடங்கி மூன்றாண்டுகள் ஆகப்போகிறது. இந்த 3 ஆண்டுகளும் 30 ஆண்டுகால சிரமத்தை நெல்லை மக்கள் அடைந்துவிட்டனர். நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மற்றும் புதிய பஸ்நிலையங்களை புதுப்பிக்க, மேம்படுத்த பலகோடி செலவிடுகின்றனர். வெளிநாடுகளில் இருப்பது போல நவீன வசதிகளுடன் பேருந்து நிலையத்தை அமைக்க உள்ளதாக கூறினாலும், பேருந்துகள் உமிழும் கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் மரங்களை வெட்டி, எக்கோ பார்க் அமைக்கிறார்கள். சத்தமும், தூசும், புகையும் மண்டும் இடத்தில் சுற்றுச்சூழல் சமன்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
பஸ் நிலையங்களுக்காகவும் நகர விரிவாக்கத்துக்காகவும் சுமார் 20 குளங்களை தூர்த்துவிட்டனர். இப்போது, வேய்ந்தான்குளத்தில் படகு குழாம் என்று பாதியை முக்கிவிட்டனர். நயினார்குளத்தில் ஏற்கனவே படகு குழாமுக்கு பல லட்சம் செலவழித்த நிலையில், அப்போது செய்தது போல், கரையை பகலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் என செய்ததை செய்யும் திட்டத்துக்கு .14.68 கோடியை பாழடிக்கவுள்ளனர்.
சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத நிலைக்கு மாறியது. இடையே தடுப்பு கட்டி விபத்தை சகஜமாக்கிவிட்டனர். பாதாள சாக்கடை திட்டத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. தாமிரபரணியில் கலக்கும் கழிவுகளை மட்டுப்படுத்தவில்லை. குடிநீர் திட்டங்களில் தீவிரம் இல்லை. ஆனால், சிட்டி ஸ்மார்ட் சிட்டி ஆகிறதெனெ பல கோடிகளை செலவழிக்கின்றனர்,.
சந்திப்பு பேருந்து நிலையத்தில் எடுத்து விற்ற ஆற்று மணல் பற்றி தீர்வு இல்லை. சாலை விரிவாக்கத்துக்கு ஒதுக்கிய பணம் பற்றி விவரம் இல்லை. நெல்லை டவுன், மேட்டுத்திடல், மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளுக்கு வசதியான பேருந்து நிறுத்தம் அமைக்கும் திட்டம் இல்லை. ஆனால், சிட்டி ஸ்மார்ட் ஆவதாக கூறுவதால், மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்களின் மனநிலையிலேயே நெல்லை மக்கள் உள்ளனர்.
Leave a Reply