Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கரப்பான் பூச்சி எடப்பாடி பழனிசாமி, திமுகவைப் பற்றிக் பேச தகுதியில்லை… – அமைச்சர் எஸ்.ரகுபதி கோபம்

2026-சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கும் நிலையில் திமுகவும் அதிமுகவும் போட்டிபோட்டு தேர்தல் பணிகளைச் சுற்றிச் சுழன்று பார்த்து வருகின்றன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றதும் அந்த மாநாட்டுக்குக் கூடிய கூட்டமும் இந்த இரண்டு கட்சிகளையும் பயம் தொற்றிக் கொண்டதுபோல் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டன.
இதில் 2026- சட்ட மன்றத் தேர்தல் என்பது அதிமுகவிற்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டி இப்போது திமுகவிற்கு இணையாகப் பணியாற்ற வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில்தான் திமுகவை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வதும் அவரை திமுகவினர் கிண்டல் செய்வதுமாக இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அண்மையின் செய்தியாளர்களை புதுக்கோட்டையில் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுகவையும் அதன் தலைவர் முதல்வர் ஸ்டாரலினையும் விமர்சனம் செய்து வருகிறாரே அது குறித்து தங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது… பதிலளித்த அமைச்சர் ரகுபதி அவர் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் வீண் குற்றச்சாட்டுகளே தவிர வேறு அல்ல.
அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்குப் பின் தெரிய வரும். ஏனென்றால் அவர் ஒன்றும் நிரபராதி கிடையாது. அவர் எந்தத் தவறும் செய்யாதவரும் இல்லை. திமுகவைக் குறை சொல்ல அவருக்கு எந்தத் தகுதியும் உரிமையும் கிடையாது. திமுகவோ எங்கள் அமைச்சர்களோ எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் திமுக காரர்கள் நீதி மன்றத்திற்குச் செல்லாதவர்கள் கிடையாது. எடப்பாடி ஒரு முறை சிறைக்குச் சென்றால் அவர் எப்படியெல்லாம் கஷ்டப்படப் போகிறார் என்பது தெரியவரும். அவர் அதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்.
முதலமைச்சரிடம் கேள்வி கேட்டால் துணை முதலமைச்சர் பதில் சொல்கிறார். உண்மையில் யார் முதலமைச்சர்? இப்போதிருக்கும் முதலமைச்சர் பொம்மை முதலமைச்சரா என்று காட்டமாகக் கேட்டிருக்கிறாரே?
அவர் காட்டமாக கரப்பான் பூச்சியைப் போல ஊர்ந்து சென்று பதவி வாங்கிய எடப்பாடிக்கு காட்டமாகக் கேள்வி கேட்கும் தகுதியோ அருகதையோ கிடையாது. அவர் தைரியமாக எதிர் கொண்டு பதவி வாங்கியவர் இல்லை. அவர் சவால் விடுவதற்கு யோக்கியதை இல்லை. துணை முதலமைச்சர் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார் என்றால் தைரியம் இருந்தால் வந்து சந்திக்க வேண்டியதுதானே.. ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் என்றுதான் எங்கள் துணை முதல்வர் சொல்கிறார். வந்து சந்திக்கட்டும்.
மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப் பட்டிருக்கிறார். அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே.
ஒரு மருத்துவர் தாக்கக் கூடாது என்பதுதான் சட்டம். மருத்துவர்களுக்கு உள்ள பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சட்டம் இயற்றுவது கடமை என்றாலும் இப்போது இருக்கும் சட்டப் பிரிவுகளின்படி அந்தக் குற்றவாளியின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். புதிய சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 2026 தேர்தலுக்கு இப்போதிருக்கும் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
2021 சட்ட மன்றத் தேர்தல் ஆகட்டும், 2024 நாடாளுமன்றத் தேர்ததல் ஆகட்டும் அவர் வலுவான கூட்டணி அமைப்பேன் என்றுதான் சொன்னார். ஆனால் அவரால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை. அதுதான் 2026 சட்ட மன்றத் தேர்தலுக்;கான அவர் அமைக்கும் கூட்டணியாகவும் அமையும். 21லோ 24லோ முடியாதது 26ல் முடியாது. இப்போதெல்லாம் முதலமைச்சர் நாற்காலிக்கு வந்து விடுவதாக நிறையக் கட்சிக் காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாற்காலியை வலுவாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. அவரைத்தான் மீண்டும் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இப்போது மாவட்டம்தோறும் பயணித்து கட்சிப் பொறுப்பாளர்களைச் சந்தித்து வருகிறாரே…
நாங்கள் எப்படி தேர்தலுக்காகத் தொண்டர்களைத் தயார் படுத்தி வருகிறோமோ அதுபோல எங்கள் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைமையும் தங்கள் தொண்;டர்களைத் தயார் படுத்த வருவது இயற்கை. திருமாவளவன் நான் திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். 2026தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும் என்று சொன்னபிறகும் இந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்து திருப்பத் திருப்ப இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே தவிர எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் கிடையாது.
திமுக தலைவரை சர்வாதிகாரி என்று சீமான் சொல்லியிருக்கிறாரே
சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். அது புரியாமல் பேசினால் நாங்கள் பொறுப்பல்ல.
கடந்த தேர்தலில் பாஜக 11சதவீத வாக்குகள் பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி வைத்தால் அரசியல் நிலை எப்படி இருக்கும்?
11சதவீத வாக்குகள் வாங்கியது அதிமுகவுடன் இருந்த கூட்டணியால் கிடைத்ததாகும். இனி யார் யாரோடு கூட்டணி அமைத்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. நாங்கள் நண்பர்கள். எங்கள் தலைவர் வழியில் கூட்டாகப் பயணிக்கிறோம். அந்த நட்பு தொடரும். ஆரசியலில் விமர்சனங்கள் வருவது சகஜம். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது. எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் எங்கள் தளபதியைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டுத்தான் அரசியல் பயணத்தைத் தொடர்கிறார்கள். அதை யாரும் மறுக்கவும் இல்லை.
மற்ற கட்சிகளை திமுக அடிமையாக வைத்திருக்கிறது என்று சொல்கிறார்களே..
நாங்கள் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை. அனைவருக்கும் அனைத்து சுதந்திரமும் உள்ளது. சமத்துவம் எங்கள் கொள்கை. அன்போடு அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்தான் எங்கள் தளபதி. யாரையும் அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அவசியமும் அவருக்கோ இயக்கத்திற்கோ கிடையாது.
நடிகர் விஜய் எம்ஜிஆரைப்போல பின்பற்றுகிறார். அவர் அரசியலில் வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறதே..
எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. நிச்சயமாக அவர் அதில் தோல்வியைத்தான் காண்பார். ஏற்கனவே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகள் கொடுத்திருக்கிறார். அந்தப் பட்டியலே புஸ்வானம் ஆகிப்போய் விட்டது. அதைப்போல இதுவும் பிசுபிசுத்துப் போகும் என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.
– ம.மு.கண்ணன்.