விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சுமார் 4, 5 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் காமராஜ் பில்லி சூனியம் வைத்ததால் தனது தாயின் உடல்நிலை மோசமாகி நடக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் தனது வீட்டில் குடியிருக்க பயந்து சென்னை சென்று தங்கி உள்ளதாக குற்றம் சாட்டி வரும் ரமேஷ். தன்னுடைய திருமணம் காமராஜ் வைத்த பில்லி சூனியத்தால் நடைபெறாமல் இருப்பதாக கூறி வந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாள ரமேஷ், காமராஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமராஜ் வைத்துள்ள பங்கடை அடையாளம் காட்டி கடையில் உள்ள நபர் தான் கொலை செய்யப்பட வேண்டும் என கூலிப்படைனிடம் அடையாளம் காட்டி அவர்களுக்கு ஒரு தொகையை பேசி முன்பணமாக ரூபாய் 20 ஆயிரத்தை ரமேஷ் வழங்கி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த 6.7.2023 அன்று இரவு காமராஜை தீர்த்து கட்ட முடிவு செய்து இரவு அவரது கடை அருகே மறைந்திருந்த கூலிப்படையை சேர்ந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த சரத்குமார், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரும் கத்தியுடன் தயாராக மறைந்திருந்தனர். கடையை மூடிவிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சின்ன நெற்குணம் பாதையில் தனது மொபட்டில் செல்லும் பொழுது அவரை வழிமறித்து இருவரும் சரமாரியாக ஓட விரட்டி வெட்டி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று இருவரும் வேலை முடிந்த பின் மீதி தொகை வாங்குவதற்காக மயிலம் அடுத்த சித்தாமூர் ஏரியில் மறைந்திருந்தனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை போலீசார் உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து படுகொலை செய்யப்பட்ட காமராஜுக்கு முன் விரோதம் யாருக்காவது உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் உடன் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருப்பதை அறிந்த போலீசார் அவரது செல்ஃபோனில் உள்ள எண்களை ஆய்வு செய்ததில், கொலை நடந்த அன்று இரவு பேசிய எண்ணுக்கு தொடர்பு கொண்டதை அடுத்து தனிப்படையினர் சித்தாமூர் ஏரிக்கரையில் பதுங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த இருவரை கொலை நடந்த 15 மணி நேரத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து இரண்டு கத்தி, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
ரமேஷ், சரத்குமார், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் மாவட்ட அமர்வு கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் எண் – 1ல் நடந்து வந்த நிலையில், இதில் நீதிபதி பரூக் குற்றவாளிகளான சின்ன நெற்குணம் ரமேஷ், சென்னை வேளச்சேரி சேர்ந்த சரத்குமார், தஞ்சாவூர் அடுத்த திருவையாறை சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் வழி மறித்து கொலை செய்த குற்றத்திற்காக தலா ரூபாய் ஆயிரம் அபராதமும், அதை கட்டத் தவறினால் 15 நாள் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 34 ன் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அதனை கட்ட தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறை தண்டனையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த மயிலம் காவல் ஆய்வாளர் லட்சுமிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
– பாபு