Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மறைக்கப்படும் வரலாறுகள்…மறுக்கப்படும் உரிமைகள்- குமுறும் தாழ்த்தப்பட்ட அமைப்புகள்

கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் 1ம் தேதி தாய் தமிழகத்தோடு இணைந்த நன்நாள்  இந்தியா சுதந்திரம் பெற்றாலும்  கொச்சி-திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் கல்குளம், தோவாளை, விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகாக்கள் இருந்து வந்தது. இப்பகுதியில் வசித்தவர்கள்  பெரும்பான்மையானவர்கள்  தமிழர்கள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு இருந்தனர். மேலும் திருவிதாங்கூர் சமஸ்தான பகுதிகளில் இந்து ஆகம அடிப்படையில் சாதிக் கோட்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என இரு கூறுகளாக்கப்பட்டனர். தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களைப் மலையாள அரசு முடக்கியது. ஏற்கனவே சாதிக் கொடுமையல் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் விவசாய வளர்ச்சிக்கு தடை போட்டதினால் தாய் தமிழகத்தோடு இனைவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியது. 300 ஆண்டுகளாக நடைபெற்றதெ தொடர் போராட்டங்கள், துப்பாக்கி சூடு, கிணற்றில் தூக்கிவீசி கொலை செய்தல், எதற்கு வரி, ஏன் வரி என கேட்க கூட உரிமைகள் மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக தமிழர்கள் வாழ்ந்தார்கள். சமூக நீதிக்காக, தாய்மொழிக்காக,
பெண்ணுரிமைக்காக, பண்பாட்டை நிலை நிறுத்துவதற்காக தென் எல்லை போரட்டம் குமரி விடுதலை போராட்டம், என்ற பெயரில்  1947 முதல் 1956 வரை தீவிரமடைந்தது. குமரி மாவட்ட மக்கள் மார்ஷல் நேசமணி தலைமையில்  தொடர் போராட்டங்கள் நடத்தினர். 1948ம் வருடம்  செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது குமரிமாவட்டம் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் ரிசர்வ் தொகுதியாக இருந்தது குளச்சல் தொகுதியில் திரு.ஏ.கே செல்லையா,தோவாளை தொகுதி திரு.ஏ.சாம்ராஜ் என. இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தனி தொகுதியிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரித்த பின் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனி தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்ட திரு.ஏ.கே செல்லையா, திரு.ஏ.சாம்ராஜ் அகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதன் பின்புதான் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த விழாவை அரசு விழாவாக இன்றுவரை கொண்டாடி வந்தாலும் திரு.ஏ.கே செல்லையா, திரு.ஏ.சாம்ராஜ் இருவரின் தியாகங்கள் மட்டும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது
குமரிமாவடத்தின் எல்லை போராட்டம் என்பது ஒரு தனிநபரால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வைப் போல காட்டிக் கொள்வதும் வேறு யாருடைய தியாகங்களும் உழைப்பும் இல்லாததை போல் அரசும் அரசு அதிகாரிகளும் நடந்து கொள்கின்றார். ஒரு சம்பவத்திற்கான ஒரு போராட்டத்திற்கான தியாகம் என்பதை அதை யார் செய்திருந்தாலும் அந்த வரலாற்றை மறைக்காமல் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அரசின் கடமை. குமரி மாவட்டத்தின் விடுதலைக்காக போராடிய அத்தனை தியாக சீலர்களையும் அரசு வரலாற்று அழிப்பு மற்றும் மறைப்பு இல்லாமல் சாதிய கண்ணோட்டமில்லாமல் மக்களிடம் எடுத்து செஸீல்லவேண்டும்.திரு.ஏ.கே செல்லையா, திரு ஏ.சாம்ராஜ் ஆகியோர் இந்த குமரி மாவட்டத்தினுடைய  விடுதலைக்காக தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா  செய்தார்கள் என்பது கூட இன்னும் இந்த குமரி மக்களுக்கு சென்று சேரவில்லை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின்பு வந்த தேர்தல்களில் குமரி மாவட்டத்தில் உள்ள தனி தொகுதிகள் பறிக்கப்பட்டது. எனவே குமரிமாவட்டத்தில் உள்ள ஆறு சட்ட மன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தலித் மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு தலித் உரிமைகள் பதுகாப்பு இயக்க நிறுவனர் டாக்டர் வை.தினகரன்
விளிம்பு நிலை மக்களின் உரிமை குரலாய் கடந்த 15 வருடங்களாக தமிழ்நாடு  தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு என்று தனி தொகுதிகள் கிடையாது. கடந்த 68 ஆண்டுகளாக கன்னியாகுமரி தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்க கோரி தொடர் முழுக்கங்கள் தொடர்ந்த போதும்  தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது. கடந்த 2010ம் வருடம் கன்னியாகுமரியை தனி தொகுதியாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். 2016 ம் ஆண்டு தமிழக முதல்வரை சந்தித்து கன்னியாகுமரி தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்க மனு அளித்துள்ளோம தமிழக அரசுக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் குமரி மாவட்ட தலித் மக்களின் தேரிக்கையை தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. எனவே பறிக்கப்பட்ட உரிமையை மீட்டெடுத்திடவும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்க கேஸீரியும், கன்னியாகுமரி, தொடங்கி,பின்னர் நாகர்கோவில் அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு  மாலை அணிவித்து  சென்னை தலைமை செயலகம் வரை நடைபயணம் செல்கிறோம் என்றார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரபாண்டியன்

கடந்த 50 வருடமாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட ரிசர்வ் தொகுதியாக மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சுதந்திர இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சாதிய கொடுமைகளை அனுப்பித்து, உரிமைக்காக போராடி தங்களது எம்.எல்.ஏ பதவியை துறந்த மாண்புமிகு செல்லையா மற்றும் மாண்புமிகு சாம்ராஜ் ஆகியோருக்கு பிறகு பட்டியலின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், அரசுக்கு தெரியபடுத்தவும் எந்த மக்கள் பிரிதிநிதிகளும் இல்லை, குமரி மாவட்ட மக்களவை உறுப்பினர், ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள். மேயர், 4 நகராட்சி தலைவர்கள், 9 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அனைவருமே மாற்று சமூகத்தினர். எனவே தமிழக அரசு குமரி சட்டமன்ற தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். எல்லை போராட்ட வீரர்களின் வரலாற்றை பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டும். நாகர்கோவில் மைய பகுதியில் அனைத்து எல்லை போராட்ட வீரர்களின் சிலைகள் மற்றும் புகைபடங்கள் அமைத்து நினைவாலயம் அமைக்க வேண்டும்

குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்
கோபி(எ) பேரளிவாளன்
குமரி மாவட்ட வளர்ச்சிக்காகவும், தாய் தமிழகத்தோடு இணைவதற்கு தாங்கள் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை  ராஜினாமா செய்த .ஏ.கே செல்லையா, திரு.ஏ.சாம்ராஜ் அவர்களின் வழியில் குமரி மாவட்ட சிறுபான்மை, தலித் மக்களுக்காகவும், சமூகநீதி,மொழி, பெண்ணுரிமை, கலாச்சார சீரழிவை தடுத்து பண்பாட்டை நிலை நிறுத்துவதற்கா தினம் தினம் களத்தில் போராடி வருகிறோம். சாதிய கொடுமைகளை எதிர்த்து பட்டியலின மக்களின் பாதுகாப்பிற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கவும் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியை  ரிசர்வ்  தொகுதியாக ஒதுக்க வேண்டும் தமிழக சட்டமன்றத்தில் 46 ரிசர்வ் தொகுதிகளும், மக்களவைக்கு  7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 சட்டமன்ற தொகுதியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்த்தில் ஒரு தொகுதியை கூட தனித் தொகுதியாக அறிவிக்காத தேர்தல் கமிஷனையும், ஆட்சியாளர்களையும் கண்டித்து குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உண்ணாவிரதங்கள், பொதுகூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது. தனித்தொகுதி அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும்

– பா.மனோகரன்