Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஒரு கண்ணில் வெண்ணெய்!மறு கண்ணில் சுண்ணாம்பா?கொதிக்கும் தென்காசி விவசாயிகள்…

தென்காசி மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக நடைபெற்று வரும் ராமநதி – ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் ராமநதி அணையின் மூலம் பாசன வசதி பெரும் குளங்கள் நிரம்பியதை உறுதி செய்து உபரி நீர் கணக்கிடப்பட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்துள்ளது ராமநதி அணை.84 அடி கொள்ளளவு உள்ள இந்த அணையின் மூலம் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பயனடைந்து வருகின்றன. நீண்ட காலமாக ராமநதி அணையின் உபரி நீரை, ஜம்புநதி பாசன பகுதிக்கு உட்பட்ட  குளங்களுக்கும் கொண்டுசெல்ல ராமநதி  உபரி நீர்   ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகள் துவங்கப்படும் என காமராஜர் ஆட்சி காலத்தில் திட்டம் தீட்டப்பட்டது. அதன் பின்னர் காலப்போக்கில் இந்த திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இத்திட்டம் துவங்கப்படும் என அறிவித்து அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.

தற்போது இந்த பணியானது சுமார் 62 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ராமநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு புதிய தலைமதகு அமைத்து, 3215 மீட்டர் தூரத்துக்கு இணைப்புக் கால்வாய் வெட்டி ஜம்புநதியிணை இணைப்பதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை 1992 ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சுமார் 30 அடிக்கு மரங்கள் கற்களினால் மூடப்பட்டுள்ளது. இதனால் அணையின்   கொள்ளளவு  குறைந்துள்ளது.எனவே அணையை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

 இதுகுறித்து கடையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான மாரி குமார் நம்மிடம்,

ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் கடந்த 1992-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அடித்து வரப்பட்ட மரங்கள், கற்கள், போன்றவை ராமநதி அணையில் சுமார் 30 அடிக்கு தேங்கியுள்ளது. இதனால் அணையில் முழுமையாக நீரை தேக்க முடியவில்லை.ராமநதி அணையை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உறை கிணறுகள் உள்ளது . மேலும் இந்த அணையின் மூலம் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி  பெறுகிறது. ஆனால் இந்த நிலங்கள் முழுமையாக  விவசாயம் செய்யும் அளவுக்கு போதிய தண்ணீர் வசதி கிடைப்பதில்லை.விவசாயத்திற்காக திறக்கப்படும் தண்ணீரினால் ராம நதி பாசனத்திற்கு உட்பட்ட குளங்கள் நிரம்புவதில்லை. .மாறாக அதிக மழை பெய்யும் நேரங்களில் இரண்டு மூன்று தடவை முழு கொள்ளளவை எட்டியபின் மறுகால் மதகு வழியாக திறக்கப்படும் உபரி நீரினால் மட்டுமே இந்த குளங்கள் நிரம்புகிறது.சாதாரண நிலையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது கடைமடை கால்வாயான பாப்பான் கால்வாய்க்கே தண்ணீர் வந்து சேர்வதில்லை.இந்தச் சூழ்நிலையில் தற்போது இந்தத் திட்டத்தில் மறுகால் வழியாக வரும் நீரானது உபரி நீராக கணக்கிடப்படும் என்று தெரிகிறது. ஆனால்    ராமநதி உபரி நீர் என்பது ராமநதி பாசனத்திற்கு உட்பட்ட கடைமடை குளமான அடைச்சாணி குளம் உட்பட்ட 20க்கும் மேற்பட்ட   குளங்கள் நிரம்பிய பின்பு தான் உபரிநீர் என கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எனவே அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்று நடந்து கொள்ளாமல் ராமநதி பாசன குளங்கள்  நிரம்புவதை உறுதி செய்து அதன் பின்னர் தான் உபரி நீர் கணக்கிடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பித்து கடையம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் குடிநீர் ஆதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் .தேவைப்படும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.
50 ஆண்டு கால கனவுத் திட்டமான ராமநதி உபரி நீர் ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் யாருக்கும் பாதகம் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாக்ஸ் செய்தி

ராமநதி பாசன குளங்கள்  நிரம்புவதை உறுதி செய்து அதன் பின்னர் தான் உபரி நீர் என கணக்கிடப்பட வேண்டும்

– ஏ.தேவமாணிக்கம்